கே.ஆர். மீரா:
இப்போது எழுதிக் கொண்டிருக்கும் முக்கியமான இந்திய எழுத்தாளர்களில் ஒருவர். மாறுபட்ட கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து எழுதுபவர். சாகித்ய அகாதமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். இவரது கதைகளில் பெண்களின் குரல்கள் உரத்து ஒலிக்கும், அவர்களது அகஉணர்வுகளை திருத்தமாக எழுத்தில் கொண்டு வந்தவர். இந்த நூல் இவரது மாஸ்டர்பீஸ் என்று கருதப்படுகிறது.
மோ. செந்தில்குமார்:
கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழாசிரியர். பெயல் ஆய்விதழின் முதன்மை ஆசிரியர். மலையாளத்தில் இருந்து நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றைத் தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார்.
நூலிலிருந்து:
“தூக்குக்கைதி நிலவறையில் விழும்போது கயிற்றுச்சுருக்கு இறுக்கி சூட்சும நாடிக்குப் பாதிப்பு ஏற்படும். விழுகின்ற சக்தியால் சுருக்கு இறுகும். இதயத்தமனிகள் அடைக்கும். அதனால் மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்கள் இறுகி அறுபடும். தலை துண்டிக்கப்படும். அந்தக்கட்டத்தை அடைந்தால் ஆண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்காவது குறி விறைத்துக் கொள்ளும். பெண்களாக இருந்தால் பிறப்புறுப்புகள் வீங்கி ரத்தம் ஒழுகும்”.
இந்த நூலின் ஆங்கில வடிவமான Hang Woman தான் நான் வாசித்த முதல் மீராவின் நாவல். மீராவைப் போல், இந்திய எழுத்துக்கு சர்வதேச மரியாதையை வாங்கித் தருவதற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.
இவருடைய பத்து நாவல்களில் ஆறு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பரிட்சயமில்லாத கல்கத்தா நகரில் இந்த நாவலுக்காகத் தங்கியிருந்து, அதன் தெருக்களில் சுற்றித்திரிந்து, இது குறித்து பல நூல்கள் வாசித்து எழுதப்பட்ட நாவல் இது. இதை எழுத ஆரம்பித்த போது, ,ஒரு Dragon eggஐ அடைகாத்துக் கொண்டிருக்கிறேன் என்பது தெரிந்திருக்கவில்லை என்ற மீரா, இந்த நாவலை முடித்தபிறகு துயரத்தில் இருந்து வெளிவந்த நிம்மதி கிடைத்தது என்றும் கூறியிருக்கிறார்.
Oliver Potzschன் The Hangman’s Daughter ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட பதினேழாம் நூற்றாண்டின் கதை. அந்தக் காலகட்டத்தை, மக்களின் நம்பிக்கைகளை அந்த நாவல் விவரிக்கும். மீராவின் இந்த நாவல் Contemporary கல்கத்தாவில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வழிவழியாக தூக்கிலிடும் தொழில் செய்யும் குடும்பத்தைப் பற்றிய கதை.
எல்லா நாடுகளிலுமே வரலாறு பெண்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது. வரலாற்றில் ஏன் பெண்கள் அதிகமில்லை? சேதனாவின் அப்பா, பாரதம் பிறப்பதற்கு முன்னான அவரது பரம்பரை ஆண்களின் வீரதீரத்தை சொல்லிக் கொண்டு போகும் போது, தாக்குமா, மா, சேதனா என்ற மூன்று தலைமுறைப் பெண்களின் வழியாக பெண்களுக்கான parallel வரலாற்றை மீரா உருவாக்குகிறார். காலங்காலமாக பெண்ணை, அவள் உடலை அடிமைப்படுத்துகிறார்கள் ஆனால் அவளது ஆத்மா யாருக்கும் அகப்படாமல் சுதந்திரமாக இருக்கிறது. பெண் காதலினால், கருணையினால் தோற்றதாக ஒப்புக்கொள்ளாவிடில் அவளை வெல்வது கடினம், உடலாலும், மனத்தாலும்.
Atwood அவருடைய புகழ்பெற்ற நாவலான Handmaids taleல் ஒரு Utopian worldஐ உருவாக்கியது போலவே, மீரா இந்த நாவலில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே தூக்குப்போடும் தொழிலில் இருக்கும் பரம்பரை பற்றிய கற்பனைக் கதையை உருவாக்குகிறார். Atwoodன் Styleல் இருந்து விலகி, புராணக்கதைகள், சமகால அரசியல், கல்கத்தா சமூகம் போன்ற எல்லாவற்றையும் கலந்து ஒரு Modern epicஐ உருவாக்கி இருக்கிறார். தேவிகாவின் திருத்தமான மொழிபெயர்ப்பில் இந்த நூல் ஆங்கிலத்தில் வந்தாலும், சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை. இதே நாவல் US, Canada or UKல் வெளிவந்திருந்தால் இதன் விற்பனை பல மில்லியன்களைத் தாண்டி இருக்கும்.
பெண்ணியத்தை எப்படி இலக்கியப் பிரதிக்குள் கொண்டு வரமுடியும் என்பதை மீராவின் பல நாவல்களில் பார்க்கலாம். இந்த நாவலிலும் மையக்கதாபாத்திரம், சேதனா பிறந்த உடன் அவளது தந்தையை உற்றுப் பார்க்கும் பார்வையில் அவர் இவளை ஆண் குழந்தை என்று நினைக்கிறார். சேதனா ஆண்கள் அதிகாரம் செலுத்தும் சமூகத்தில் கடைசிவரை ஒரு ஆணுக்கு எந்த விதத்திலும் தான் குறைந்தவள் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறாள். அவளது அம்மாவும் கூட இன்னொருவனை விரும்பி வேறு வழியில்லாமல் மணமுடித்த கணவனிடம் வெறுப்பைக் காட்டும் கதாபாத்திரம். இந்த நாவலில் எத்தனையோ பெண்கள் கதைகளாக வந்து தங்களது இருப்பை மெம்ப்பித்துப் போகிறார்கள்.
மரணம் இந்த நாவலின் முக்கிய இழை. கதையே 451 பேரைத் தூக்கிலிட்டவன் என்று பெருமைப்படுபவனின் குடும்பக் கதை. அதனால் மரணவிசாரங்களுக்கும், தத்துவார்த்தத்திற்கும் குறைவே இல்லாத நாவல் இது. புராணக்கதைகளும் இடையிடையே வந்து தத்துவகனத்தை அதிகரித்துப் போகின்றன.
சேதனா ஒரு வித்தியாசமான கதாபாத்திரம்.
அவளை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடமுடியாது. சஞ்சீவ் குமாரை ஒரே நேரத்தில் வெறுப்புடனும், விருப்புடனும் அணுகும் பாத்திரம். அவளது மனது காதலை நாடுகையில் அறிவு தர்க்கபூர்வமான காரணங்களைச் சொல்லித் தடுக்கிறது. பயமே இல்லாதவளாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டு ஒருநிலையில் அப்படியாகவே ஆகிப்போகிறாள்.
ஏராளமான குட்டிக் கதைகள், ஏராளமான ஒருமுறையே வரும் கதாபாத்திரங்கள் இருந்தாலும் நாவலின் ரிதம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவேயில்லை.
சேதனாவின் அப்பா, தாக்குமா, மானோதா, காக்கிமா (கணவனைக் காப்பாற்ற காக்கிமா எதுவரை போகிறாள்!), காக்கு என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் சிற்பத்தைச் செதுக்கும் நேர்த்தி இருக்கிறது.
ஒரு மலையாள நாவல் முழுக்கவே வங்காளத்தைப் பற்றிய கதையாக வருவது மலையாளத்தில் மட்டுமே நடக்கும். இன்று வரை மீராவின் மாஸ்டர்பீஸ் இது தான். இந்திய மொழிகள், அதிலும் தென்னிந்திய மொழிகள் ஒன்றுக்கொன்றுடனான தொடர்பு எல்லோருக்கும் தெரிந்ததே. ஆங்கிலத்தில் தேவிகா நன்றாகவே செய்திருந்தார். அதையும் தாண்டி தமிழில் இது இன்னும் சிறப்பாக வந்துள்ளது. செந்தில்குமாரின் மொழிபெயர்ப்புப் பணியில் இந்த நாவல் ஒரு மைல் கல். கிட்டத்தட்ட எண்ணூறு பக்கங்கள் கொண்ட நாவலை நிறைவாகச் செய்திருக்கிறார். நல்ல நூல்களை விரும்புபவர்கள் இந்த நாவலைத் தவற விடாதீர்கள்.
பிரதிக்கு:
சாகித்ய அகாதமி 044- 24135744
முதல்பதிப்பு 2022
விலை ரூ. 750.