ரமா சுரேஷ் தஞ்சையில் பிறந்தவர். சிங்கப்பூரில் வசிப்பவர். மாயா இலக்கிய வட்டம் போன்ற இலக்கிய நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்பவர். உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்துள்ளது. இது இவரது முதல் நாவல்.

யாத்வஷேம் நாவல் எழுதிய நேமிசந்திரா போல் நாவலுக்கான கதைக்களத்தை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று அலைபவர்கள் இந்தியாவிலேயே குறைவு.
இந்த நாவலுக்காக ரமா, பர்மியக் கிராமங்களில் சுற்றியிருக்கிறார், நூற்றுக்கணக்கானவர்களைச் சந்தித்திருக்கிறார், தான் சந்திக்கும் மனிதர்களில் கதாபாத்திரங்களின் சாயலைத் தேடியிருக்கிறார்.

காலனி ஆதிக்கத்தின் பர்மா தான் கதையின் பெரும்பாதிக் கதைக்களம். ஜாதி, மதம், மொழிகளைக் கடந்த உறவுகள் பர்மாவில் மலர்ந்திருக்கின்றன. இந்தியாவில் குடிசைகளில், மனித இனத்தில் சேர்த்துக்கொள்ளப்படாது சுரண்டப்பட்டவர்கள் பர்மாவில் மற்றவர்களுடன் மாமன், மச்சான் என்று பழகுகிறார்கள். மற்ற மதத்தினரைக் காபிர் என்று சொல்பவர்கள், மகளின் விருப்பத்திற்காக மாறுபட்ட நம்பிக்கை இருப்பவனை மணம்முடித்து வைக்கிறார்கள். பர்மா சமுதாயம், மக்கள், வாழ்க்கை, நம்பிக்கைகள் என்று பர்மாவை குறித்த அழகான சித்திரத்தை வரைந்திருக்கிறார் ரமா. பர்மாவில் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. யாராவது இறந்து போனால், அவர்கள் செய்த நல்லதை மட்டுமில்லாமல், கெட்டதையும் சேர்த்தே சாவுவீட்டில் சொல்வார்களாம்.. நாமும் கூட கடைபிடிக்கலாம். பர்மா குறித்து முகம்மது யூனிஸின் எனது பர்மா குறிப்புகள் நூலை ஆர்வமுள்ளோர் வாசிக்கலாம்.

பர்மாவில் இருந்து சிங்கப்பூருக்கு நகரும் கதை, ஆங்கிலேயர் ஆண்ட சிங்கப்பூரில் இருந்து, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் ஆக்கிரமிப்புக் காலத்திற்குள் நகர்கிறது.
ஜப்பான்-பிரிட்டன் போரின் ஒரு முக்கியமான பகுதி நாவலில் சில காட்சிகளாக வருகிறது. நாவலின் பிற்பகுதி இரண்டாம் உலகப்போரில் தத்தளிக்கும் சிங்கப்பூர். சிங்கப்பூர் ரமா சில வருடங்கள் வாழ்ந்த நாடு. அத்துடன் வரலாற்று ஆவணங்களைத் தேடுபவர்களுக்கு சிங்கப்பூர் தேசியநூலகம்
ஒரு கற்பகத்தரு. ரமா தகவல்களால் நாவலின் Richnessஐ அதிகப்படுத்தி இருக்கிறார்.

இரண்டாம் உலகப்போருக்கு முன்னான ஜப்பான் பற்றித் தெரிந்து கொள்ள நாம் சீன இலக்கியங்களைப் படிக்க வேண்டும். ஜப்பானியரின் கொடூரத்தின் சில சதவீதங்கள் தான் அவர்கள் சிங்கப்பூரில் நடத்தியவை. இந்த நாவலில் அதுவும் பதிவாகி இருக்கின்றது.

வாழ்க்கையில் இலட்சியங்களை அடைய திறமையை விட விதி நம் பாதையில் சேர்ந்து நடக்க வேண்டியதாயிருக்கிறது.
சிலர் எதை வேண்டாமென்று நினைக்கிறார்களோ, அது தவறாமல் அவர்களை வந்தடைகிறது. நாவலில் மதம், குறிப்பாக புத்தமதம் மற்றும் இஸ்லாம் முக்கிய பங்கு வகிக்கின்றன. . குத்துச் சண்டை, போர் இரண்டுமே நாவலில் மையக் கதாபாத்திரங்களின் வாழ்வை மாற்றுகின்றன. தத்துவம் நாவல் முழுதும் விரவிக் கிடக்கின்றது. பர்மா மற்றும் சிங்கப்பூர் குறித்த தகவல்கள், சடங்குகள் நாவலில் ஏராளமாக வருகின்றன. ஒரு காதலும், தாம்பத்தியத்தில் புடம்போட்டு எடுக்கப்படுகிறது. எப்போதாவது தான் தமிழில் அகண்ட கான்வாஸில் இது போல் நாவல்கள் எழுதப்படுகின்றன. சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்கும், தவற விடக்கூடாத நாவல்களில் ஒன்று.

நாவல்கள்

பிரதிக்கு:

யாவரும் பப்ளிஷர்ஸ்
Discovery palace
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.350.

https://saravananmanickavasagam.in/2022/03/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%af%8d/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s