முகநூலில் தமிழில் எழுத ஆரம்பித்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டதாக தொடர்ந்து வரும் Memories சொல்கின்றன. உண்மையில் எனக்குத் தமிழில் எழுதத் தயக்கம் இருந்தது. வாசிப்பிற்கு அது ஏதோ ஒரு விதத்தில் தடங்கல் செய்யும் என்ற அனுமானம் இருந்தது. தோழர் R.P. ராஜநாயஹம் என்னிடம் பேசும் பொழுதெல்லாம் வாசித்தது குறித்து தமிழில் எழுதச் சொல்லி விடாது வற்புறுத்த ஆரம்பித்து விட்டார். அது இல்லையெனில் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
எழுத ஆரம்பித்து சில காலத்தில் நெருங்கிய நண்பர்கள், எல்லாவற்றையும் எழுதினால் உனக்கு இலக்கியம் தெரியாது என்பது போல் ஆகிவிடும் என்று அறிவுறுத்தினர். அதையும் தாண்டி வருடத்திற்கு முக்கால் இலக்கிய நூலைப் படிக்கும் ஒருவர், நான் பின்னட்டையைப் படித்து விமர்சனம் எழுதுவதாகக் கருத்து தெரிவித்தார். தமிழில் ஜெமோ கும்பலைச் சேர்ந்தவர்கள், அவர்களை விமர்சனம் செய்தால் சொல்வது நமக்கு இலக்கிய நுண்ணுணர்வு இல்லை என்று.
எனது விடலைப் பருவத்தில் நண்பர்கள் எங்காவது டூர் போக வேண்டும் என்றால் பெரும்பான்மை ஓட்டு கேரளாவிற்குப் போகவேண்டும் என்பதற்கே விழும். காமம் கற்றறியாப் பருவம் என்றில்லை, கலை, இலக்கியம், அரசியல் என்று எதை எடுத்தாலும் உச்சத்தை எளிதாகத் தொட்டவர்கள் தமிழர்கள் இல்லை என்பது பின்னரே புரிந்தது. கன்னடத்தில் நான் அகராதி எழுதினாலும் ஏதாவது பிரச்சனை வந்தால் நான் தமிழன் என்ற அடையாளமே முன்நிற்கும். தமிழில் எப்போதும் கலப்பிற்குக் கூடுதல் மரியாதை.
கார்ப்பரேட்டுகளில் சேர்மனின் கார் ஓட்டுனர்
ஒரு குட்டி சேர்மனைப் போல நடந்து கொள்வார். பெரிய பதவி வகிப்பவர்கள் அவர்களிடம் சேர்மனின் மூடு எப்படி இருக்கிறது, எப்போது பேசலாம் போன்ற வாழ்வியலாதாரத்திற்கு வழிவகுக்கும் கேள்விகளுக்கு நைச்சியமாகப் பேசிச் சிரிப்பதைப் பார்த்திருக்கிறேன். தமிழிலக்கியமும் கார்ப்பரேட் ஆகிவிட்டது.
ஒரே வித்தியாசம் இங்கே டிரைவரும் Circular போடுவார். யார் வேண்டுமானாலும் எழுதலாம் அதை யாரும் கேள்விகேட்க முடியாது. ஆனால் இலக்கியத்தரகர்களை விட்டு விடுங்கள், இலக்கிய ஏணியில் ஏறும் ஆசையால் இலக்கியம் தெரிந்த பெண்களும்
சராசரிக்குக் கீழான படைப்பிற்கு பிரசாதத்திற்குக் கொடுக்கும் மரியாதையைக் கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த இடபம், ஆனந்தவல்லி, அம்பரம் போன்ற நூல்களுக்குப்பின் இருக்கும் உழைப்பைப் பார்க்க, பாராட்ட இங்கு பெரும்பான்மையினருக்கு மனமில்லை. ( இதை எழுதியவர் யாரையும் விமர்சனம் எழுதும் வரை எனக்குப் பரிட்சயமில்லை)
லதாவின் சீனலட்சுமி ஒரு நல்ல தொகுப்பு. இலக்கியதாதாக்கள் அது குறித்து எழுதவில்லை என்றால் அதுவும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் மறைந்து விடும். எதிர்காலத்தில் நிறையவே சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையையூட்டும் ஆண் எழுத்தாளர்களும் நிறையவே இருக்கிறார்கள். வாசகர்கள் தான் சிறந்த எழுத்துகளை வாழவைக்க வேண்டும். நல்ல நூல்கள் வாசித்தால் நாலுபேருக்கு சொல்லுங்கள். வேறு யாரையும் நம்பி பலனில்லை. கடைசியாக இப்போது நமக்கு ஆங்கிலமும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அண்ணாந்து பாருங்கள், கற்புள்ளவருக்கு கருடன் தெரியும் என்பார் குருக்கள், எனக்கு காக்கா தான் தெரிகிறது, எனக்கு கற்பில்லை என்று சொல்வதில் தயக்கமில்லை.