முளை – பா.வெங்கடேசன் ;
மகாகவி பாரதியார் பதினான்கு வயது சிறுவனாக அவருடைய தந்தையுடன் நடத்தும் உரையாடலே இந்தக்கதை. பாரதியின் வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட உண்மைகளுடன், உரையாடலில் புனைவு கலக்கிறது. பா.வெயின் ஆரம்பகால சிறுகதையாக இது இருக்க வேண்டும்.
பண்டிகையும் பலியும்- கன்னட மூலம் பி.டி. லலிதா நாயக்- தமிழில் ஜெயந்தி.கி:
பண்ணையார்- பண்ணையாள்- கொத்தடிமை என்ற அதே பழைய கதை. வித்தியாசமாக பரமஏழை அம்மனுக்கு ஆடு நேர்ந்து கொண்டு ஒருவருடம் அடிமையாகப் போகிறான். கடவுள் எப்படியும் காப்பாற்றுவார் என்று கணவன், மனைவி நம்புகிறார்கள். பாவம். தெளிந்த மொழிபெயர்ப்பு.
காக்கா படுத்தும் பாடு – நந்து சுந்து:
சிறார் கதை போலிருக்கிறது. கெடுவான் கேடு நினைப்பான்.
பிரம்ம கமலம் – மஞ்சுநாத்:
அவசரமாக சாமியார் ஆகத்துடிப்பவன் கதை.
கேதார் மலையில் நடக்கும் கதை, மஞ்சுநாத்துக்குப் பரிட்சயமான இடம். ஆன்மிகமும் ஒரு போதை தான், அறிவு சொல்வதைக் கேட்கவே கேட்காது. கதை நன்றாக வந்திருக்கிறது.
மனுஷசாமி – விஜயகுமார் ஜெயராமன்:
ஒரு கை, ஒரு கால் போனாலும் கடவுள் உயிரை காப்பாற்றிவிட்டான் என்று நன்றி சொல்பவர்களிடம் நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது! அப்புறம் பிச்சைக்காரர்கள் எல்லா மதத்து ஆலயங்களுக்கு வெளியில் உட்கார்ந்திருப்பது கோயிலுக்கு போய் வருபவர் கருணை நிறைந்த மனத்துடன் வருவார் என்ற நம்பிக்கையில். முழுநீள சண்டைப் படத்தைப் பார்த்தவன் வெளியில் அப்பாவியாக இருப்பவனை அடிவெளுத்து விடலாம் என்று நினைப்பதைப் போல.
வெல்லிங்டன்- இரவிச்சந்திரன்:
இரவிச்சந்திரன் பாணிக்கதை வெல்லிங்டன். அலட்சியம் தொனிக்கும் எழுத்தை அவரது ஆசான் சுஜாதாவிடம் இருந்து எடுத்துக் கொண்டவர். இவரது இந்திய பாஸ்போர்ட், சுயம்வரம், பார்சல் ஆகிய கதைகளைப் புதிய வாசகர்களுக்கு மன்றில் பிரசுரிக்கலாம்.
சந்தித்த வேளையில் – உமா நாதன்:
சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை என்று சொல்ல முடியாத முகமாக இருக்கிறது.
தேசம் கடந்த நேசம் – பசு.தனபாலன்:
இது இப்படித்தான் முடியும் என்பது போன்ற கதைகளை ஐம்பது வருடங்களுக்கு மேலாக எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.
காதல் கவிதைகள் – எஸ்.வீ.ராகவன்:
கண்டதும் காதல், அடிக்கடி காணல், கடைசியில் திருமணம்.
தகிக்கும் நிமிடங்கள் – அரிசங்கர்:
அரிசங்கரின் கதை முக்கியமான விவாதத்தைக் கிளப்பக்கூடும். வாழ்வதற்கு வீடு, உணவுக்கு ஓட்டல் என்பது போன்ற Arrangement உடல் தேவைக்கும் பொருந்துமா? கணவன் மேல் காதல் அவனால் இயலாததால் கலவிக்கு மட்டும் வேறொருவன் என்பது சரியாக வருமா? அவனை வீட்டுக்கு அழைத்து வருவது தான், கணவன் ஓய்வுக்கு எந்நேரமும் வரக்கூடும் என்ற சூழ்நிலையில் இடிக்கிறது. அடுத்து அவன் நந்தினி மேல் கைவைக்க எவ்வளவு நேரமாகும்?
அந்திச்சாமம் – பொன் வாசுதேவன்:
Sharp ஆகச் சொல்லப்பட்ட கதை. அநாவசியமான விஷயங்களே இந்தக் கதையில் இல்லை. கதை என்று சொல்வதை விட இது ஒரு உணர்வை மிக அழுத்தமாகப் பதிகிறது. எதனால் மணமுறிவு, யார் தப்பு, இருவருக்கும் என்ன வயது என்ற கிளைப்பாதைகள் ஏதுமின்றி
அவளுடன் தூக்கம் முழிக்கிறோம், பயணம் செய்கிறோம், சாமந்தி வாசனையை முகர்ந்து கொண்டே வெளியே வருகிறோம். பாராட்டுகள் பொன் வாசுதேவன்.
குன்றம் – ரமேஷ் கல்யாண்:
பெரியவர்கள் சிறுவர்களின் கண்கள் கொண்டு பார்ப்பது கடினம். இந்தக் கதையில் அதை செய்திருக்கிறார் ரமேஷ் கல்யாண். மிக எளிமையான கதை இருந்தாலும் பிச்சைக்காரனுக்கும் சிறுவனுக்குமான உரையாடல் கதையின் உயரத்தை உயர்த்துகிறது.
கொரானா காலக்கதைகள் – சுப்ரா:
அம்புலிமாமா கதைகள்
உயர்தல் – என்.சொக்கன்:
It is lonely at the top என்பதே விதி. உயரத்திற்கு ஆசைப்படும் மனம் பொறுப்புகளை நினைத்து பயப்படுவது எல்லா நிறுவனங்களிலும் நடக்கக்கூடியது.
மனைவி போற்றுதும் – ஆர். எஸ்.ராகவன்:
தீவிரவாதிகள், மிதவாதிகள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறினாலும் மாறுவார்கள், இந்த சேலைவாதிகள் அனுமன் போல் மறந்தும் புறம் தொழுவதில்லை.
மன்றில் முதல் இதழ் ஓசூரிலிருந்து வெளிவந்திருக்கிறது. நல்ல முயற்சி. இது போல் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு இதழைக் கொண்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கட்டுரைகள், கவிதைகள் பரவாயில்லை.
கதைகளில் தான் ஆசிரியர் குழு தேர்வுக்கு வேறு அளவுகோலை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. வெகுஜன வாசிப்பு கலந்த கதைகள் வருவது கூட பரவாயில்லை, யாருமே வாசிக்க முடியாத கதைகளும் இதில் இருக்கின்றன. பிறந்தவர் எல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றன ஆனால் மொத்த ஜனத்தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே அதை எப்படி சொல்ல வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. பெண்கள், வங்கி மேலாளர் போலவே இலக்கிய இதழ் ஆசிரியர் குழுவும் No சொல்லக் கற்றுக் கொள்ளுதல் உத்தமம்.
பிரதிக்கு:
தனி இதழ் ரூ.200
தொடர்பிற்கு 86438 42772
It is nice to hear about you who loves book book and book
LikeLike