லாட்டி – ஷிவானி – தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:
அனுராதாவின் கதைகள் தேர்வு எப்போதும் சிறப்பாக இருக்கும். இம்முறை தவறி விட்டது. குஜராத்தில் பள்ளிச்சிறுமிகள் போல் இருக்கும் பெண்கள் தலையில் அத்தனை வீட்டு வேலைகளையும் சுமத்துவதைப் பார்த்திருக்கிறேன். அனுதாபத்தைக் கோரி எழுதப்பட்ட கதை போல் தெரிகிறது. காப்டன் பானோவைக் கவனித்தது போல் எத்தனை கணவர்கள் கவனிப்பார்கள்?
நூறு பிள்ளைகள் பெற்றவள் – எஸ். செந்தில் குமார்:
நல்லம்மா ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். கோபம் கண்ணை மறைக்கையில் எதிரில் இருப்பவர் குறித்து கவலையேபடாதவள். ஒரு எளிய குடும்பத்தில் சடங்குகள் செய்வது என்பது திணறிப்போவது மட்டுமல்லாது, மாப்பிள்ளை வீடு என்ற கோதாவில் அவர்கள் நடந்து கொள்வது என்று பல விசயங்கள் அப்படியே வந்திருக்கின்றன. கதை நம் கண்முன்னே நடக்கும் உணர்வு வாசிக்கையில் ஏற்படுகிறது. ஈஸ்வரி வேறு எப்படி நடந்திருக்க முடியும்?
மனவாசம் – லாவண்யா சுந்தரராஜன்:
இரண்டு கதைகள். நூற்றாண்டுகளால் பிரிக்கப்பட்ட கதைகள். ஊர்மிளா அதிகம் பேசப்படாத கதாபாத்திரம். ஏதோ ஒரு இராமாயணத்தில் அவள் லஷ்மணன் பங்கிற்கும் சேர்த்து தூங்கிக் கழித்தாள் என்று வருகிறது. லாவண்யாவின் முதல் கதை லஷ்மணனின் மனக்கிலேசம், குற்றஉணர்வை வெளிப்படுத்தும் கதை. இரண்டாவது கதை நடப்புக்கதை. ஊர்மிளா நூற்றாண்டுகள் காத்திருந்து பழி வாங்குகிறாள். அங்கே தான் பகடைக்காயாய் இருந்ததற்குப் பதிலாக இன்று கணவனைப் பகடைக் காயாக்கி வேடிக்கை பார்க்கிறாள். காலங்கள் தாண்டி இருவர் வருவது வித்தியாசமான உணர்வை எழுப்புகிறது.
கிரேசி கதைகள் – தமிழில் அரவிந்த் வடசேரி:
தமிழில் கதை எழுதுபவர்கள், குறிப்பாக பெண்கள் கிரேசியின் கதைகளைப் படிக்கக் கேட்டுக்கொள்கிறேன். பேரப் பிள்ளைகளுக்காக குழந்தை இலக்கியம் படைக்கும் பெண்மணியாம் இவர்.
கலவியை நாம் புனிதப்படுத்திக் கொண்டே இருந்தாலும் உடல்கள் நெருங்குகையில்
Germaphobesஆல் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் போகிறது. கிரேசி அதை Victim பார்வையில் சொல்கிறார். ஆனால் நம் கதைகளில் இன்னும் இதைப் பேசத் தயங்குகிறோம். விடியும் வரை மழையோ மழை உன் கலையே கலை கண்ணா என்று Glorify செய்கிறோம். கிரேசி இந்தக்கதையில் எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறார். OCD மட்டுமல்ல கடைசியில் மனைவியின் எதிர்வினையும் Perfect. அடுத்த கதையில் கணவன் சாக வேண்டும் என்று ஒரு தரமேனும் நினைக்காத மனைவி உண்டா என்கிறார். நாம் அதியமானின் நெல்லிக்கனியின் ஞாபகத்தில் சிதறிய இரண்டு நெல்லிக்காய்கள் என்று புளகாங்கிதம் கொள்கிறோம். கடைசிக்கதை ஒரு கவிதை. நன்றியும் அன்பும் அரவிந்த், நல்ல மொழிபெயர்ப்புக்காகவும், அதையும் தாண்டி நல்ல கதைகளை தேர்வு செய்ததற்காகவும்.
கள்ளிவெட்டிச்சாரி – கு.கு. விக்டர் பிரின்ஸ்:
எல்லா உறவுகளையும் புடம் போடுவது பணம் தான். அதை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையில் கன்னியாகுமரி வட்டார வழக்கு மணக்கிறது. பென்னியின்
volatile கதாபாத்திரத்தை மிக அழகாகக் கதையில் கொண்டு வந்திருக்கிறார் விக்டர்.
திருச்சபைகள், காவல்துறை சக்தியுள்ள சிலரது ஆணைகளுக்குக் கீழ்படிவது, லீலாம்மாவின் சங்கோஜம், அவளது கடைசி ஆசையை போகிற போக்கில் சொல்வது, பென்னி மிரட்டல், விடுதலைப்பத்திரம் என்ற இரட்டைக்குழல் துப்பாக்கியை உபயோகிப்பது என்று எல்லாமே வெகு இயல்பாக வந்திருக்கின்றன. பாராட்டுகள் விக்டர் பிரின்ஸ்.
பாரூரான் கால்வாயில் துணி துவைப்பவர்கள்- யதிராஜ ஜீவா:
ஒரே கதையில், கவிதை, நாடகம், இருவரின் கதைகள் எல்லாவற்றையும் கொண்டு வந்திருக்கிறார். மொழிநடையிலும் இரண்டுவிதமான மொழிநடையைக் கையாண்டிருக்கிறார். நல்ல முயற்சி இது. ஆனால் கதைக்கரு இன்னும் அழுத்தமாக வந்திருக்க வேண்டும். இரு வேறு உலகத்தைச் சேர்ந்தவர்கள் சந்திக்கும் புள்ளி அழுத்தமாகப் பதிந்திருக்க வேண்டும். அது இல்லாத போது கதைகள் படித்து உடனே மறக்கப்பட்டு விடுகின்றன. அடுத்து எழுதும் கதைகளில் இவர் அதில் கவனம் செலுத்த வேண்டும்.
https://drive.google.com/file/d/1tMIm_aLpAjfLSxi4fbhjoKxKYSsK1r6Z/view