பியானோ – சிவபிரசாத்:
சிவபிரசாத்தின் கதை தற்போதிருக்கும் முக்கியமான ஒரு விஷயத்தை எடுத்துப் பேசுகிறது. திருமணமான மகளின் வீட்டில் அவளது தாய் எடுக்கும் உரிமையை, மகனின் தாய் ஒருபோதும் எடுக்கமுடியாது என்பது நிதர்சனம். இங்கே கூடுதல் சிக்கலாக மகனும், மருமகளும் அமெரிக்காவில் செட்டில் ஆனவர்கள். திண்டுக்கல்லில் இருக்கும் தம்பதியரே கணவனின் பெற்றோர் தலையிடக்கூடாது என்று நினைக்கையில் அமெரிக்காவில் இருப்பவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும். இன்னொரு விஷயம் கலப்புக்கலாச்சாரம். என்ன தான் பழுப்பு நிறம் இருந்தாலும், இந்திய பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதாக நினைத்தாலும், அங்கு வளரும் குழந்தைகள் மனதளவில் அமெரிக்கர்கள், அவர்களை ஒருபோதும் அமெரிக்கர்கள் தங்களில் ஒருவராக நினைக்காத போதும். இந்தியக் கணவனுக்கு நாற்பது வருடங்கள் தொண்டூழியம் செய்து கால்முட்டி தேய்வதை விட, ஒரு அமெரிக்கனை மணம் செய்வது பலவிதத்தில் சௌகரியமானது. கௌரி காப்பி கொண்டு வா என்ற குரல் மட்டும் வராது. என்னை விடக்கூடுதல் சம்பாத்தியம் என்ற திமிர் என்று சொல்ல மாட்டான். நாளுக்குப் பலமுறை I love you சொல்வான். எல்லாவற்றிலும் முக்கியமாக எப்போது வேண்டுமானாலும் Breakup பண்ணிக்கொள்ளலாம். இந்தியக் கணவன் அப்பா சித்தப்பா மாமா எல்லோரையும் கூட்டி வந்து போகாதே சொல்லி ஓவென்று அழுவான். இவை சிவபிரசாத் கதையில் சொல்ல நினைத்ததும் தொடர்சிந்தனையும். ஆனால் கதை இன்னும் எடிட் செய்திருக்க வேண்டும். உரையாடலில் ஆரம்பிக்கும் கதையில் கொஞ்ச நேரத்தில் முழுக்கவே வானத்திலிருந்து யாரோ கதை சொல்வது போல் இருக்கிறது. சரஸ்வதி ஒருவாரம் பிடிவாதமாக இருந்தவள் மனம் மாறுவதற்கு வேறு காரணத்தை சொல்லி இருக்க வேண்டும். கதை எழுதுபவர்கள் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் கதையின் நிறைகுறையைக் கேட்டு அதற்கேற்ப கதையை மாற்றி அமைப்பது எப்போதுமே நல்லது.
சன்ஷைன் -பியட்றிஸ் லம்வாகா- தமிழில் ரிஷான் ஷெரீப்:
லம்வாகாவைத் தொடர்ந்து தமிழுக்குக் கொண்டு வருபவர் ரிஷான். உலகத்தில் எல்லாமே எதிர்மறையாக நடக்கும் போது Hope and survivalக்கான குரல் எப்போதும் லம்வாகாவின் கதைகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நிதியுதவி அதிகமில்லாத பல்கலையில் பட்டம் பெற்று தன் காலில் நிற்க இளம்பெண்கள் துடிக்கிறார்கள். அவர்களது ஆர்வத்தை விரிவுரையாளர்கள் தங்களது பாலியல் தேவையைப் பூர்த்திசெய்யப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் வல்லுறவு கொண்ட பெண் தற்கொலை செய்து இறந்தாலும், எயிட்ஸைப் பரப்புவது கடமை என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டுப் போரில் அப்பாவி கல்லூரி மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். கருப்பின மக்களிடையேயும் அதிக கருப்பு நிற மக்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இத்தனையும் தாண்டி அங்கே சூரியன் உதிக்கிறது, மழை பெய்கிறது, வாழ்க்கை நடந்து கொண்டு தான் இருக்கிறது. என்னவொரு Powerful Voice லம்வாகாவுடையது! ரிஷான் எந்த ஆரவாரமுமின்றி தமிழ் இலக்கியத்திற்கு அவிர்பாகத்தை அளித்துக் கொண்டேயிருக்கிறார்.