ஊறா வறுமுலை – ஜா.தீபா:
பால் ஊறாத முலை. நான் வாசித்த வரையில் தீபாவின் Best இந்தக்கதை. கனவும் நினைவும் கலந்து அரைமயக்க சாயலில் ஆரம்பிக்கும் கதை, பாண்டஸி கூறுகளை உள்வாங்கிப்பின், யதார்த்தத்தில் முடிகிறது. குதிரை பௌருஷத்தின் குறியீடு. திரௌபதி பேசுவதை பேச்சியால் கேட்க முடிவதில்லை, ஆனால் மாயா கேட்கிறது. மாயாவிற்காகவே அவள் பேசுகிறாள். அந்தப் பேச்சில் தான் எத்தனை அர்த்தங்கள்! Yugantaவில் கார்வே, திரௌபதி அர்ச்சுனனை அதிகம் காதலித்ததற்குப் பதிலாக பீமனைக் காதலித்திருக்க வேண்டும் என்று மரணத்தருவாயில் உருகுவதாகச் சொல்லியிருப்பார். தீபாவின்
பாண்டவர் குறித்த பார்வை வேறாக இருக்கிறது. தொட்டில் கட்ட வந்த இருபெண்களின் கண்கள் சந்தித்துக் கொள்வது கவிதை. சாமிநாதனின் மூடநம்பிக்கைகளும் பேச்சியின் பரிதவிப்பும் அழுத்தமாகக் கதையில் பதிவாகி இருக்கின்றன. Toyல் எல்லாபாகங்களையும் பொருத்திவிட்டு அனிச்சையாக கடைசி பாகத்தைப் பொருத்தும் கச்சிதத்துடன் ஒரு முடிவு. Marvellous story.
அவரவர் நியாயம் – அரிசங்கர்:
உனக்கும் எனக்கும் ஒரே ஊர் என்று ஆரம்பிக்கும் மீராவின் கவிதை நினைவுக்கு வந்தது. ஒரு பிரச்சனையை எடுத்துக் கொண்டு அது பல்வேறு வகையானவர்களால் எவ்விதம் Deal செய்யப்படுகிறது என்பதை வெகு இயல்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் அரிசங்கர். ஏதாவது நடக்கும் என்று ஏமாந்த காவலரும், வேலையற்ற கும்பலும் நடத்தும் உரையாடல்களும் இயல்பாக வந்திருக்கின்றன. தங்கராஜ் பாவம் அவன் நம்ப விரும்புவதைத் தான் நம்புவான். பையனின் அம்மா வர்க்கபேதம் பார்க்காவிடில் காதல் ஜெயிக்க வேறு என்ன தடை இருக்கப்போகிறது? ஆனாலும் அந்த செருப்பைத் தேடி வருவது நன்றாக இருக்கிறது.
சூரம்பாடு – சுஷில்குமார்:
திரையில் பாம் வெடிக்கப்போவது பார்வையாளருக்குத் தெரியும், சம்பந்தப்பட்டவருக்குத் தெரியாது. அதே பரபரப்புடன் கதை நகர்கிறது. சூரசம்ஹாரம் அன்று இன்னொரு சம்ஹாரமும். எதிர்பாராததும் நடக்கிறது, எதிர்பார்த்ததும் நடக்கிறது. சுஷிலின் மொழிநடை கதையை வேறு தளத்திற்குக் கூட்டிச் செல்கிறது. குறிப்பாக பைக்கின் பின்னால் உட்கார்ந்திருக்கும் சிறுமியைப் பார்த்ததும் எழும் உணர்வுகள்.
அந்தி மந்தாரை – வைரவன் லெ.ரா:
அந்தி மந்தாரை காதல் செய்து ஏமாந்த பெண்ணின் கதை. கடிதம் மூலம் கதை.
உயிர் வாழ வேண்டாம் என்று விரும்புபவர் பிழைப்பதும், ஆயுள் வேண்டுபவர்கள் அவசரமாக இறப்பதும் Murphy’s law. அதில் கர்த்தருடைய, கண்ணனுடைய விருப்பம் எங்கே இருக்கிறது!
ஓணி – கோ.சுனில் ஜோகி:
ஜோகியின் கதையில் ஒரு வாழ்வியல் மறைந்திருக்கிறது. Focus இல்லாமல் கதை அங்குமிங்கும் நகர்ந்து சொல்வதிலிருந்து விலகி நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. இதே கதையில் பாதியைக் குறைத்து Effective ஆகச் செய்திருக்க முடியும்.
காவு – மலேசியா ஸ்ரீகாந்தன்:
கணவன்- மனைவி குடும்பச் சண்டையில் குழந்தையை அழைத்துப் போய் வேறு மதத்திற்கு மாற்றுவது குறித்த கதை. பெண்கள் என்ன நடந்தாலும் கடைசியில் நாம் அந்தத்தவறை செய்திருக்க வேண்டாம் என்று தன்மேலேயே பழி போட்டுக் கொள்ளும் இயல்பு கதையில் நன்றாக வந்திருக்கிறது. ஜாதி, மதங்களை அழிக்க ஒரே வழி Secular Matrimony Sites பிரபலமாவது தான்.
சமரசம் மலர்ஸ் – நெற்கொழுதாசன்:
நெற்கொழுதாசனுக்கு மெல்லிய நகைச்சுவை இயல்பாக வருகிறது. உலகளந்தபிள்ளைக்கு வல்லிபுரக்கோவில் திருவிழா நினைவுக்கு வருவது Class. கணவன் கல்யாணம் ஆன ஆரம்பத்தில் மனைவியிடம் தன்னை இளிச்சவாயனாகக் காட்டிக் கொண்டால் பின்னர் அவன் எத்தனை முயன்றாலும் அந்தக் கருத்தை மனைவி மாற்றிக்கொள்ளப்போவதில்லை. தொடர்ந்து எழுதுங்கள் நெற்கொழுதாசன்.
பணம் பத்தும் செய்யும் – இடாவோ கால்வினோ – தமிழில் சித்தார்த்தன் சுந்தரம்:
இத்தாலிய நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்தவரே கால்வினோ என்று நினைக்கிறேன். Readabilityக்காக அவர் சில மாற்றங்களைச் செய்ததாக நினைவு. இதைப் பார்க்கையில் நம் தமிழில் Folk tales/வாய்மொழிக்கதைகள் எவ்வளவு Strong ஆக இருந்திருக்கின்றன என்று தோன்றுகிறது. இயல்பான, தெளிவான மொழிபெயர்ப்பு.
முட்டாளின் சொர்க்கம் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்- தமிழில் சக்திவேல்:
படிப்பதற்கு தினம் ஒரு புத்தகமும், வேலை செய்யாத வாழ்க்கையும் கிடைக்குமென்றால் அட்ஸெல் இடத்திற்கு நான் போகத் தயார். அஃஸாவும் கூட அவனே வைத்துக் கொள்ளட்டும். சிறார் கதை என்றாலும் காதலித்தவள் கொஞ்ச நாள் வருத்தப்பட்டுப் பின் வேறு ஒருவனை மணந்துகொள்வாள் என்று குழந்தைகள் மனதில் பதிய வைப்பது நன்றாக இருக்கிறது. இங்கே காதலை சாமி கும்பிடுவது மாதிரிப் பார்க்கிறார்கள். நல்ல மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்புக்கு பலர் வந்து சிறப்பாக இயங்குவது உள்ளபடியே மகிழ்ச்சியைத் தருகிறது.