ஆசிரியர் குறிப்பு:
திருநெல்வேலியைச் சேர்ந்தவர். தஞ்சை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லியில் பயின்று, அரசுப்பணியில் 23 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்று, தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
பிரியா விஜயராகவன், மயிலன் ஜி சின்னப்பன் போன்றோர் இருக்கும் சின்னப் பட்டியலில் பிருந்தாவும் இப்போது இணைகிறார். Robin Cook போல தமிழிலும் ஒருவர் வருவாரென நானும் வெகுகாலம் காத்திருக்கின்றேன்.
மருத்துவர்களுக்கும் காதலில் எதிர்பாலினம் தொட்டால் மின்சாரம் பாயும் என்பதில் எனக்கு வெகுநாட்கள் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. தீண்டல்களும், மரணங்களும் அவர்களது நுண்ணிய உணர்வுகளை கருக்காமல் இருப்பது வியப்பே. அதிலும் பிருந்தா அரசு மருத்துவமனையில் வாழ்வின் கணிசமான பகுதியை செலவு செய்தவர், அவரது கவிதைகளில் ஒரு கல்லூரிப்பெண்ணைப் பார்ப்பது மற்றுமொரு ஆச்சரியம்.
பிருந்தா முக்கியமாகச் செய்ய வேண்டியது கவிதை எழுதியபின் தேவையில்லை என்று தோன்றும் வரிகளை தயவுதாட்சண்யம் இல்லாமல் நீக்குவது. உதாரணத்திற்கு:
“என் முத்தம் கூட
நீ சுவைத்த எத்தனையோ முத்தங்களில்
ஒன்றைப் போல் தோன்றலாம்
நாம் இணைந்து கண்ட கனவுகள்
தேவதைக் கதைகளில் நிகழ்ந்திருக்கலாம்
ஆயினும்
உன்னுடனான
என் காதல் வாழ்வைப் போல்
எவரும் எப்போதும்
வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை”
இதில் நாம் இணைந்து… என்ற வரியை நீக்கினால், அழுத்தம் கூடுவதைக் கவனியுங்கள். இது போல் பல கவிதைகளில் எடிட் செய்யும் வாய்ப்பிருக்கிறது. இன்பமோ, துன்பமோ எனக்கு மட்டுமே பிரத்யேகமானது என்ற நுட்பமான உணர்வை தேவதைக்கதைகள் இடைவந்து மடைமாற்றுகின்றன. அதே போல் வெற்றுக்காமத்தில் கடைசி மூன்று வரிகள் தேவையில்லை.
கவிதைகளை இரவில் மொட்டை மாடியில் மல்லாக்கப்படுத்து வானத்தை உற்றுப்பார்த்து, மாலை வெயிலில் தோட்டத்தின் நடுவே, ஆள்நடமாட்டமில்லா ஆற்றங்கரையில், இமயமலை நிலவெளியில் தேடித்திரிய வேண்டியதில்லை. நல்ல கவிதைகள் ஐந்தாம் மாடியில் கையில்லா மேல்சட்டையும், வெளுத்துப் போன கால்சராயும் போட்டுக்கொண்டு வீதியைப் பார்த்தாலும் வரும். அவனெழுதிய இறுதிக் கவிதை, முகம் போன்ற கவிதைகள் எந்த அலங்காரங்களுமில்லாது, புறக்கடை கிணற்றடியில் முகம்கழுவி வீட்டிற்குள் நுழையும் பெண்ணின் முகம்போல அழகாகவே இருக்கின்றன.
கடுஞ்சொல் இருவருக்கிடையே சம்மணமிட்டு அமர்வது, தூசுதும்பு சேர்ந்த மாடியறையில் முத்தவாசம் தேடிப்போவது,
குழந்தைப் பேறில்லாத தம்பதிகள் டாக்டர் சொன்ன நாளில் உறவுகொள்வது ( அந்தக் கவிதையில் நிதர்சனத்தின் அழகியல், தம்பதியரின் அந்நியோன்யம், வெறுமை உணர்வு என எத்தனையோ கலவையான உணர்வுகளைக் கொண்டு வந்திருக்கிறார்),
காமத்தின் ஓசையடங்கிய கயிற்றுக் கட்டில்,
குளிரூட்டப்பட்ட அறையைச் சவப்பெட்டியின் குளிர்ச்சியுடன் ஒப்பிடுவது, அலுவல் கவிமனத்தை இயந்திரமாக்குவது என்று கவிதைகளில் புதிதாகச் சொல்லவும், நாம் ரசிக்கவும் இவரிடம் நிறைய இருக்கின்றன.
அடிக்கடி நான் யோசித்ததுண்டு நாம் முரண்பாடுகள் வரும்போதே விலகாமல் ஏன் முழுக்கச் கசந்தபின் விலகுகிறோம் என்று! கடைசிவரை பல்லைக் கடித்து ஓட்டிவிடலாம் என்ற சிந்தனைக்கு நம்மில் பெரும்பான்மை அடிமை. இந்தக்கவிதை நம் இன்றைய கலாச்சாரச்சூழலில் முக்கியமானது:
” நம் காதல் நாடகத்தின்
இறுதிக்காட்சி
நேற்றோடு முடிந்தது.
இனியல்லவோ நாம் (‘இனி நாம்’- போதும்)
நடிக்கத் தொடங்க வேண்டும்
நண்பர்களாக
உன் வழி நீ செல்
நான் என் பாதை திரும்புகிறேன்
ஆகாயக்கூரையின் கீழ்
அவரவர்கென்று எழுதிய இடத்தில்
வாழ்ந்து கிடப்போம்.
ஒரு கசகசத்த ரயில் பயணத்தில்
பின்னோக்கியோடும் மரங்களை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்
ஜன்னலோரத்துப் சகபயணியாய்
உன்னையொரு நாள்
சந்திக்க நேர்ந்தால்
எனக்கான புன்னகையொன்றை மட்டும்
தயாராக வைத்திரு”
வாழ்க்கை இழுத்த இழுப்பின் பின் சென்று கடைசியில் ஆசுவாசமாய் இப்போது தான் எழுத வாய்ப்பு கிடைத்தது என்பதில் நன்மைகள் பல இருக்கின்றன. அனுபவச்செறிவு நம் எழுத்தில் நம்மை அறியாது அங்கங்கே எட்டிப்பார்க்கும். அத்துடன் இவருக்குள் ஒரு குமரி பெண்ணும் தருணத்தை எதிர்பார்த்து பலகாலம் தங்கியிருந்திருக்கிறாள். இரண்டுமே கலந்த பண்டமே இவரது கவிதைகள். வார்த்தைகளுக்கு அலங்காரம், சந்தங்களைத் தேடாமல் எழுதுவது உண்மையில் பலம். வெயில் படர்ந்த முற்றத்தைக் கேள்வி வந்து நிரப்புவது போன்ற அழகியலும் கைவசமிருக்கிறது.
கவிதைகளை வெளியே அனுப்புமுன் பலமுறை செப்பனிட்டு அனுப்பினால் இன்னும் அதிக தூரம் பயணம் செய்யலாம்.
பிரதிக்கு:
சந்தியா பதிப்பகம் 044- 24896979
முதல்பதிப்பு 2022
விலை ரூ. 110.