ஆசிரியர் குறிப்பு:

தேனி மாவட்டத்தில் இருக்கும் உத்தமபாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்ட விஸ்வாமித்திரன் சிவகுமார், தத்துவத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா குறித்து எழுதிவருகிறார். இவரின் ‘சிறுவர் சினிமா‘ எனும் கட்டுரைத் தொகுப்பு உலகளாவிய அளவில் சிறுவர்களை மையப்படுத்திய 34 திரைப்படங்களைத் தேர்வு செய்து இவர் எழுதிய கட்டுரைகளை உள்ளடக்கியது. திரைப்படங்களில் உதவி திரைக்கதையாளராகவும் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

மனரேகை என்ற தொகுப்பு நகுலனை மையங்கொண்டது. நகுலன் நூற்றாண்டுக்காக எழுதியிருக்கக்கூடும். நகுலனின் கவிதைகள் குறித்து ” உன் கவிதையிலிருந்து இறங்கிச்செல்ல ஒரு பாதையிருக்கிறது அதன் பின்னே ஒரு பள்ளம் இருக்கிறது” என்று இவர் எழுதியிருப்பதை விட விளக்கமாக அவர் கவிதைகள் குறித்து சொல்வதற்கில்லை.

நகுலனை பள்ளி நாட்களில் வாசித்து நானும் தூர வைத்திருக்கிறேன். பின்னர் Bandwidth கிடைத்தவுடன் மறுவாசிப்பு அனுபவம் வேறாக இருந்தது. இந்தக் கவிதையில் முதியபெண்ணின் முதல் முத்தம் என்ற வார்த்தைக் கோர்வை மேற்கொண்டு படிக்கவிடாமல் தொந்தரவு செய்கிறது.

” உயிர் கழன்ற இருட்கண்ணாக வெறித்திருக்கும்
ஆழ்கிணற்றில் விழுந்தது போலிருந்தது
உன்னை வாசித்த முற்பொழுது
முதியபெண்ணின் முதல் முத்தமாய்
உணர்வில் நிலைத்து விட்டது
உன்னைச் சந்தித்த பிற்பொழுது.”

கவிதைகள் ஒரு Photo snap போல காட்சியில் உறைந்து போவது இப்படித்தான்:

” கவிதை முளைத்த மனதுடன்
நடந்து சென்ற நள்ளிரவுச் சாலையின்
நடுப்புறம் சிலையென நின்றெனைப்பார்த்த
பூனையின் கண்களில்
நிலவு மங்கும்படி
அபரிதமான ஓர் ஒளியிருந்தது.”

ஒரு பக்கம் நகுலனின் அரிய புகைப்படங்களும், மறுபக்கத்தில் நகுலனின் படைப்புகள் மற்றும் நேரில் பார்த்த போது சொன்னவை என்று வந்திருக்கும் கவிதைகள். நகுலனை வாசித்தவர்கள் மிகவும் ரசிக்கக்கூடிய தொகுப்பு இது. நவீனனுக்கும், சுசிலாவிற்கும் மட்டுமல்ல பூனைக்கும் கூடத் தனிமை வாதையாகத் தான் இருக்கும். இந்தக் கவிதையில் நகுலனின் Touch கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது:

‘ நீ உடலைத் துறந்த போது
காலம்
கனவில் தனக்குத்தானே சொல்லிக்கொண்ட
நகைச்சுவை தாளாமல்
குலுங்க குலுங்க சிரித்துக் கொண்டிருந்தது
மிஞ்சிய சூனியத்தைக் கரைக்க
பூனையென
உலவிக்கொண்டிருந்தாய் நெடுநேரம்”

கூன் விழுந்த காலத்தில் ” இருபத்தைந்து வருடங்களாகக் கவிதைத் தளத்தில் இயங்கினாலும் இதுவே என் முதல் கவிதைத் தொகுதி” என்ற இவருடைய வரியைப் படித்ததும் தொடையில் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

பார்ட்டிகளில், சமூக ஊடகங்களில், பத்திரிகைகளில், மேடைகளில் கவனஈர்ப்பு செய்ய, சகல பிரயத்தனங்களும் செய்பவர்களிடமிருந்து விலகிய, என் மனதுக்கு நெருக்கமான கவிதை இது:

” வேண்டிய அளவு கதைத்தாயிற்று
பறவை தொடாத கிளையாக
வண்ணமும் வடிவமும்
தொலைந்த மௌனத்தில்
ஆழ்தலும் அசையாது நிலைத்தலுமே
இனி பிரதானம்’

நதியை மட்டுமே ஒருமுறை தான் தொட முடியும் என்றில்லை, விரையும் சாலையில் வெளிச்சமாய் வந்த அந்த அழகிய முகத்தை, தொலைந்த யௌவனத்தை…….. இது போல் பலவும் வீட்டில் தொலைத்த பொருள் வீட்டிலேயே கிடைப்பது போல், காலத்தில் தொலைத்தது திரும்பக் கிடைப்பதில்லை.

” பழக்கப்பட்ட பறவையின் குரல் கேட்டது
சட்டைப்பைக்குள் அடங்கியிருக்கும்
அலைபேசியைத் தொட்டுப் பார்த்தேன்
அது அதிர்வில் இல்லை
கணத்தின் கிளையிலிருந்து கால் நழுவி
பதறியது மனம்
நிஜத்தில் எழுந்த அந்தக்குரல்
எங்கே என்று தேடினேன்
காண்பாரற்ற கதியில்
விடைபெற்றிருந்தது பறவை”

எளிமையான கவிதை, ஆனால் அந்த சத்தம் எங்கிருந்து வருகின்றதென்று யோசித்துப் பாருங்கள். கவிதையின் பரப்பு சற்றே விரிந்து கொடுக்கும்.

” கவனமாய் பார்த்தபடிதான்
குவளையை எடுத்து வந்தேன்
ஒரு சத்தத்தின் அலைக்கழிப்பில்
தேநீர் சிந்தியே விட்டது
இந்தக்காமத்தை மனதில்
வைத்துக்கொண்டு
என்ன பண்ணுவதோ ஏது பண்ணுவதோ
தெரியவில்லை”

கூன் விழுந்த காலம் தொகுப்பில் எல்லாமே குறுங்கவிதைகள். தொகுப்பின் நீண்ட கவிதையே பத்து வரிகளுக்குள். நெடுங்கவிதைக்குள் புகுவதை விட சின்னக் கவிதைக்குள் நுழைந்து வெளிவருதல் எளிது. தத்துவார்த்தம் அங்கங்கே dressing in food ஆக வந்திருக்கிறது. அனுபவங்களை, ஆற்றாமைகளைப் புலம்பல் தொனி இல்லாமல் சொல்வதற்கும் ஒரு காத்திருப்பு வேண்டியதாயிருக்கிறது. இரண்டுமே நல்ல தொகுப்புகள், இருந்தாலும் என் மனம் மனரேகையின் பக்கமே சரிகிறது. பலரது கைகளைச் சேர்ந்திருக்க வேண்டிய தொகுப்பு அது, போனது போல் தெரியவில்லை. Seek, and you will find என்பது கடவுளை விடப் புத்தகங்களுக்கு மிகவும் பொருத்தமானது.

பிரதிக்கு:

மனரேகை – செவ்வகம்பதிப்பகம் 9841982255
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.100
கூன் விழுந்த காலம்- வம்சிபுக்ஸ் 9445870995
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.100

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s