ஆசிரியர் குறிப்பு:
புதுக்கோட்டையில் பிறந்து பெங்களூரில் வசிப்பவர். காலாதீதத்தின் சுழல், மீச்சிறு வரமென என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இது சமீபத்தில் வெளிவந்த மூன்றாவது கவிதைத் தொகுப்பு.
முகமது பாட்சாவின் ஆரிகாமி வனம் தொகுப்பிற்கும் ஸ்ரீவத்சாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு சேர்ந்தே வந்திருந்தது.
Bilingual books அதுவும் ஆங்கிலம் ஒரு மொழியாக இருக்கும் போது உலக வாசகர்களின் கைகளுக்குப் போகும் வாய்ப்பு அதிகம். இந்த நூலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழியில் வந்திருக்கிறது.
கொஞ்சம் ஆன்மீகம், கொஞ்சம் தத்துவார்த்தம், கொஞ்சம் வலி, நிறையவே காதல் ஒன்றாய் சேர்ந்தால் ரத்னாவின் கவிதைகள். ரத்னாவின் தமிழை வேறு மொழிக்கு மொழிபெயர்ப்பது கடினம். உதாரணத்திற்கு பிச்சி என்ற வார்த்தைக்கும் பைத்தியம் என்ற வார்த்தைக்கும் இடையில் நிறையவே வித்தியாசம். இடையில் கிறுக்கு என்ற வார்த்தை, அவள் மேல் கிறுக்கு, அவன் முழுக்கிறுக்கன் என்று இடத்திற்கேற்ப மாறுபடும். ரத்னாவின் பிச்சி பெரும்பாலும் தேவாரத்தின் பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள் என்ற பொருளிளேயே வருகிறது. கருப்பட்டிக்காய் போன்ற வார்த்தையை எப்படி மொழிபெயர்ப்பது?
வலியைச் சொல்லும் போது தத்துவார்த்தம் சேர்ந்து வருவது ரத்னாவின் தனித்துவம். முன்னர் கண்ணதாசன் “நாலு விலங்குகளில் தினம் நாட்டியமாடுகின்றோம்” என்பது போல
இல்லாத முடிச்சில் இருக்கின்ற சிக்கல்கள், கண்ணுக்குத் தெரியா கையுணரும் வலி.
” இல்லாத கயிற்றின்
இறுக்கமான முடிச்சில்
எண்ணற்ற சிக்கல்கள்……
காற்றின் பார்வையோ
கண்டு கொள்வதில்லை
கைகளின் துளாவலில்
புலப்படும் ஊவாமுள்
தைத்த சிறுதடத்தை.”
புத்திசாலிப் பெண்களைக் காதலிப்பது கடினம். எதற்கும் பின்னால் எது என்று யோசிக்கும் மனம் உணர்வில் தளர்ந்து கொடுக்க நூறாண்டுகள் ஆகும். ஆனால் ரத்னாவின் கவிதைப்பெண் வைணவத் தத்துவத்தைப் பின்பற்றுபவள். முழுசரணாகதி.
” இனி நினைத்தாலும்
திரும்ப முடியாத இடத்தை
நோக்கிய என் பயணத்தின்
சூத்ரதாரி நீ
உன் விரல்களின் அசைவை
முன்கூட்டியே அனுமானிக்கும்
திறனிருந்தும்
கட்டளைக்கெனக் காத்திருக்கும்
கைப்பாவையாக நான்……..”
பகல் காய்வதும் இரவு குளிர்வதும் ஆதவனின் வரவாலும், மறைவாலும். காதலின் தனிமையில் இந்தப் பெண்ணுக்குப் பூமி அவளைச் சுற்றிச் சுற்றுகிறது.
” நானும் நானுமென
எனது பகல்கள்
நத்தையின் கூடெனக்
குறுகி இருண்மையின்
கதகதப்பில் காய்ந்தது
மிக நீண்ட இரவுகள்
பேருண்மையின்
எல்லையற்ற வெளியாக
விரிந்து, குளிர்ந்து கிடந்தது”
Love is not bed of roses என்பதை ரத்னாவின் மூன்று நூல்களிலுமே கவிதைப்பெண்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். துணைக்கு முன்னெச்சரிக்கையும் கொடுக்கிறார்கள். இதில் வரும் கோணமும், கோடும் Literal meaningஐத் தாண்டிய பொருள் கொண்டவை.
‘ கோணத்தை மாற்றுவதற்கும்
கோடுகளைத் தாண்டுவதற்கும்
நீயும் நானும் கற்றுணர்கையில்
நம்மிடையே இருக்கும்
இத்திரை அறுபடலாம்”
எல்லாம் எதிர்மறையாகும் போது இறுதியில் இறை இருக்கிறது என்ற நம்பிக்கையில் நிறையப் பேருக்குப் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது.
” ஆயிரம் கால்களோடு ஒரு சிலந்தி
சதா சர்வகாலமும் புத்தியில்
ஊர்ந்து கொண்டே இருக்கிறது
மௌனமாய் உறுத்து நோக்கும்
ஆந்தையொன்றின் விழிகள்
முதுகில் குறுகுறுக்கிறது
படபடத்துப் பறக்கின்ற
வவ்வாலின் இறக்கைகளாய்
முகத்திலறைந்த வார்த்தைகள்
மங்கிய உணர்வின் வீச்சத்தை
நாசிக்குள் செலுத்துகிறது……..”
உடைந்த இதயத்தை ஒட்டும் கவிதைகள் கின்ட்சுகி. ரத்னாவின் மூன்றாவது தொகுப்பு வெகு குறுகிய கால இடைவெளியில் வெளியாகுகிறது. முதல் தொகுப்பின் அதே கனத்தோடும், அழுத்தத்தோடும் மூன்றாவது தொகுப்பும் வந்திருக்கிறது. உரைநடையில் எழுத்தாளன் வேறு, புனைவு வேறு. பெண்களிடம் Flirt செய்யும் வசந்த் வேறு, சுஜாதா வேறு. ஆனால் கவிதைகளில் பெரும்பாலும் கவிஞரின் ஆழ்மனம் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுகிறது. தொடர்ந்து வாசிப்பவருக்கு அவர் குறித்த சித்திரமும் மனதில் விரிகிறது. அது சிலநேரங்களில் குடும்பத்தாரும் அறியாத உருவம்.
ஏக்கமும், வலியும், காதலும் மானுடம் இருக்கும் வரை இருந்தே தீரும். அவற்றைப் பாடுபொருளாக ரத்னா பெரும்பாலான கவிதைகளில் கொண்டு வருகிறார். அறிவும், மனமும் அடிக்கடி சண்டையை நிகழ்த்துகின்றன. ஒவ்வொரு கவிஞரும் அவர்களை அறியாமல் ஒரு உலகத்தை தங்கள் கவிதைகளில் உருவாக்குகிறார்கள். ரத்னாவிற்கும் தனியுலகம் இருக்கின்றது.
பிரதிக்கு:
Pustaga Digital Media P Ltd 9980387852
விற்பனை உரிமை மெரினா புக்ஸ்
8883488866
முதல்பதிப்பு ஜூலை 2022
விலை ரூ. 150.