ஆசிரியர் குறிப்பு:
கோவை மாவட்டம், பெத்தநாயக்கனூர் கிராமத்தில் பிறந்தவர். ஒரு கவிதைத் தொகுப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளார். கொலுசு என்ற மின்னிதழின் ஆசிரியர். இவரது கவிதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகியிருக்கின்றன. இது 2020ல் ஒரே சமயத்தில் வெளிவந்த மூன்று கவிதைத் தொகுப்புகளில் ஒன்று.
அறிவின் தளத்தில் (intellectual) எழுதப்படும் கவிதைகள் தேர்ந்த வாசகர்கள் என்ற சின்ன வட்டத்தைச் சுற்றிவிட்டு நிற்கின்றன. உணர்வின் தளத்தில் (emotional) எழுதப்படும் கவிதைகள் எல்லோரது இரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்துகின்றன. கணவனை இழந்த அம்மாவின் தனிமைக்கு மகனால் செய்யக்கூடியது என்ன? அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் என்று பாரதி அன்னையின் ஆனந்தத்தைக் கற்பனை செய்தது போல் செய்து பார்க்கலாம்.
” யாரும் அதிகம் வந்திடாத
அந்த திறந்த வெளிக்கோவிலில்
நடப்பட்டிருந்த
கற்சாமிகளை கண்கொட்டாது பார்த்து
கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டவள்
ஒரு நீண்ட பாறையின் மீது அமர்ந்து
இது தான்
அப்பாவும் நானும் கல்யாணம்
கட்டிக்கிட்ட இடம்
என்றாள் கண்கள் பனிக்க
சற்று தள்ளி நின்று பார்க்கிறேன்
புது மஞ்சளும் குங்குமமும் மினுங்கும்
அவளருகில் அப்பா அமர்ந்திருந்தார்
அவ்வளவு ஒளி கூடி”
American Sniperல் Chris Kyleன் உண்மைக் கதை படமாக்கப்பட்டிருக்கும். ஈராக்கில் ஒரு சிறுவன் அமெரிக்கப்படை இருக்கும் இடம் நோக்கி ஓடிவருவான். தற்கொலைத் தாக்குதல்கள் ஏராளமாக நடந்த நேரம். Kyleஆக நடித்த Cooperன் Telescopic point தொலைதூரத்திலிருந்து சிறுவனின் தலையைக் குறிபார்க்கும். Cooper Pray பண்ணுவார். போகாதே…… தயவுசெய்து திரும்பிவிடு……….
” உங்கள் முற்றத்தில்
கைகளை அகலநீட்டி
மழைத்துளிகளைத் தெளித்து
விளையாடியிருக்கும் உங்கள்
குழந்தையின் பிஞ்சுப்பாதங்களில்
கிடத்தியபடி திரும்புகிறேன்
உங்களுக்கெனக்
கொண்டு வந்த வன்மத்தை”
வறுமைக்கும் கனவுக்கும் சம்பந்தமில்லை.
சின்ரெல்லா கதையே காத்திருந்தால் ராஜகுமாரன் வருவான் என்ற நம்பிக்கையை வளர்க்கச் சொல்லப்பட்டது. வறுமை, கனவு மட்டுமில்லை, ஓ ஹென்றி பாணியில் வரும் கடைசிநேர டிவிஸ்ட் இந்தக் கவிதையை ரசிக்க வைக்கிறது.
” அப்பாவின் சைக்கிளுக்கு
ஆரஞ்சு வண்ணம்
கைப்பிடிகள்
முக்கோணக்கம்பிகள்
மட்கார்டு என
ஆரஞ்சு வண்ணத்தை
அவரே வரைந்து இருப்பார்.
கைப்பிடியில் இருபுறமும்
ஆரஞ்சு வண்ணப் பட்டு நூல்கள்
காற்றில் படபடக்கும்
சைக்கிளை நாள் தவறாது
துடைத்துப் பாதுகாப்பது
அவரது பெரும்பணிகளில் ஒன்று.
அதைப் பளபளக்கத் துடைத்துவிட்டு
யாரும் பார்க்காத அதிகாலைகளில்
ஒரு முத்தமிட்டு ரசிப்பாராம்.
அப்பாவின் சைக்கிளை
நாங்கள் பார்த்ததில்லை
அவரும் பார்த்ததில்லை”
பூபாலனின் கவிதைகளில் அடிக்கடி அம்மா வருகிறாள். மரணம் கூட வருகிறது. சந்தோஷம் என்று தலைப்பிடப்பட்ட குறுங்கவிதைகளிலும் மரணம் நேர்கிறது.
அதே போல் இயல்பாக ஆழ்மனதில் அமிழ்ந்திருக்கும் அன்பு மேலே சொன்ன குழந்தை கவிதையில் மட்டுமல்ல தொடர்பிலில்லா தொலைதூரம் வாழும் ஜீவன் மீதும் பீறிட்டெழுகிறது. மூத்திரச்சந்தில் கைக்குழந்தையுடன் நிற்பவளைக் கவிதையால் கட்டியணைக்கிறது.
மூன்றாம் தலைமுறை அற்ப விஷயங்களில் ஆனந்தம் கொள்ளுவதை மூன்று தலைமுறைக் கதைகளாக வரும் கவிதையைப் போல பல கவிதைகள் சிறுகதைகளாக எளிதில் மாற்ற முடியும்.
சொல்லப்போனால் கல்யாணப்பெண்ணாக உட்கார்ந்திருக்கும் அம்மா கவிதையும் கூட சிறுகதை தான்.
அம்மாவின் பட்டாம்பூச்சிகள் எனக்கும் ஒரு
சுயபரிசோதனையைத் தூண்டியது. மூன்றே வரிகளில், ஏழே வார்த்தைகளில் சொல்லப்பட்ட இந்தக்கவிதை விட்டுப்போகும் உணர்வை கவனியுங்கள்:
” கூடடையும் நேரத்தில்
கொல்லப்பட்ட பறவையின்
அலகு முழுக்க தானியங்கள்”
ஞானசேகரன் போன்ற வெகுசில கவிதைகள் மற்ற கவிதைகளிலிருந்து வெகுவாக விலகியிருக்கின்றன. தொடர்ந்து எழுத வேண்டும். அரூபத்தின் வாசனையை நாசியில் நுகர முடிகிறது.
பிரதிக்கு:
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் 9842275662
முதல்பதிப்பு டிசம்பர் 2020
விலை ரூ.100.
மிக்க மகிழ்ச்சி சார். உங்கள் வாசிப்புக்கும் அனுபவப் பகிர்வுக்கும். இந்தக் கவிதைகள் நான் பல முறை மேடைகளிலும் இங்கும் சொன்னது போல ஒரு கொடும் கால இடைவெளியில் எழுதப்பட்டவை. அப்பாவின் மரணத்தின் பின்னரான வெறுமை நாட்களிலிருந்து இந்தக் கவிதைகளை எழுதித் தான் வெளி வந்தேன். ஆகவே இவற்றில் மரணம், அப்பா, அம்மா எல்லாமும் நிறைந்திருக்கும்.
LikeLike