ஆசிரியர் குறிப்பு:
தஞ்சாவூரில் பிறந்தவர். சிங்கப்பூரில் வசித்து வருகிறார். தகவல் தொழில்நுட்பத்தில் திட்ட மேலாளராகப் பணிபுரிகிறார். இதுவரை இவரது மூன்று கவிதைத் தொகுப்புகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழிலக்கியத்தின் எல்லைகளை அகலப்படுத்துகிறார்கள் என்று சொல்வதை மறுபடிமறுபடி இது போன்ற நூல்கள் மெய்ப்பிக்கின்றன. இவர் பார்த்த சிங்கப்பூரின் வாழ்வியலைக் கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார். அது ஒரு பயணியின் பார்வையையும் தாண்டிப் பயணிப்பது இந்தக் கவிதைகளின் தனிச்சிறப்பு.
சிங்கப்பூரில் இருந்து ஐந்து மணிநேரத்திற்கும் குறைவான பயணம் சென்னைக்கு. இருந்தாலும் வேறு நிலம். கலவை கலாச்சாரம். சிலநேரங்களில் பெங்களூரில் இருப்பதே அந்நிய நிலத்தில்
இருப்பது போல் தோன்றுகிறது. சிங்கப்பூர் கலாச்சாரத்தை நிலமற்ற நிலம் என்று எளிதாகக் கடந்து செல்கிறார் இன்பா. திணைமாறும் தும்பிகள்- அழகியல்.
” நிலத்தை விடுத்து
நிலமற்ற நிலத்தில்
ரீங்கரித்து படருகின்றன
திணைமாறும் தும்பிகள்
………….
வாழ்தல் வேண்டின்
ஊழ்வினை துரப்ப
செங்காட்டில் புகுந்த
சீனத்து டிராகன்கள்
இந்திய மயில்கள்
மலாய்ப் புலிகளென
ஒவ்வொன்றும் மெர்லயனாய் மாறி
வானில் உலவிக் கொண்டிருக்கின்றன.”
சங்கப்பாடல்களின் பரிட்சயம், நவீன கவிதை சொல்லல், இந்திய மனம், சிங்கப்பூர் வாழ்க்கை என்பது Perfect Combination என்று இந்தக் கவிதைகளை வாசிக்கையில் தோன்றுகிறது. வார்த்தைகள் இன்பாவின் ஆயுதம்.
” அல்லிலும் மின்னும்
சூரியக் கற்கள் வீதிகளில்
துள்ளுமாவு புட்டும்
ஔவையார் கொழுக்கட்டையுமென
பலவித ருசியைத்தேடி
வீட்டில் இந்தியா செல்லும்
வால் முளைத்த நாவு
சிவப்புத்தேநீரில்
நட்சத்திர மாத்திரைகளை
விழுங்குகிறது நிலவு
வயிற்றுப் பேழையை நிரப்பி
கதலிப்பூவுடன் முப்பழத்தையும்
நுகர்ந்து செல்கிறார்
வாரவிறுதி நவஎயினர்”.
அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை தமிழில் கதைகள், கவிதைகள் முழுமையாகக் கொண்டு வந்திருக்கின்றனவா? நமக்கு பாசாங்கு அதிகம். உடன்வருபவர் முன்பு கோவில் சிற்பத்தை உற்றுப்பார்த்து விட்டோமே என்று கண்ணனின் சிலைமுன் கணநேரம் கூட வழிபடுபவர்கள் நாம். இந்திய அல்லது தமிழ் மனம் எப்படி நம்மைக் கட்டுப்படுத்துகிறது பாருங்கள்:
” பிரேசிலியன் வேக்ஸிங் செய்கிறாயா
என்கிறாள் வடநாட்டு மகடூஉ
மூக்கைச் சுருக்கி நகைத்துக் கொண்டே
திரும்பினாலும் மனதில்
கரடிகை அடிக்கிறது.
அந்தரங்கம் பழகிவிட்டாளா
மலாய், சீன நாராயணிகளும்
செய்து கொள்கிறார்களென
இயல்பாகத் தானே கேட்டாள்
மனவிரல்கள் பின்னிய நூலுக்குள்
சிக்கிக் கொண்டன பூமுடிகள்
நகரமறுக்கிறது நாணம்”
Romantic உணர்வுகளை மெல்லிய தொனியில் ஆனால் மிக அழுத்தமாகாச் சொல்லும் இந்தக் கவிதை போல் பல இவரது தனித்துவம்.
” பால் செசான் ஓவியத்தின்
வெள்ளைத்துணிக்குள்
மறையும் ரகசியங்கள்
துணியின் வளைவுகளில்
திசைகளின் நெருக்கம்
திரைச்சீலையின் நுனிப்பாலங்கள்
மனவெடிப்புகளோடு
பழங்களின் பணக்காரக் குறிப்புகள்
தாளங்களில் வாசிக்கப்படுகின்றன
மாலைக்குள் பேசி முடியாத கதை
சிவப்பு மஞ்சள் பூக்களால்
அலங்கரிக்கப்பட்டது
எனது இருப்பின் சித்திரம்
மறைக்கப்பட்ட
ஆப்பிள்கள் ஆரஞ்சுகள் என் காமம்”.
தாய்மையை இன்னொரு கோணத்திலிருந்தும் பாருங்கள்:
” அறுவை சிகிச்சை செய்து
பிரித்துப் போடப்பட்டன தையல்கள்
வெள்ளையணுக்கள் சோர்ந்து போக
விலாக்குருதி சோகையானது
தளர்ந்த மார்பகங்கள்
வளர்ந்த இடுப்புச்சதை
வரிக்குதிரையாய் இரைப்பை
குட்டி குட்டி மடிப்புகள்
வயிற்றுக்குக் குறுக்கே ஒரு கோடு
நிழலாய்த் தொடர்கிறது
கால ஓவியனின் அபத்தத் தீட்டல்களில்
பீலியுகுத்த மஞ்ஞை
பரிதாபமாகி விடுகின்றன”
சிங்கப்பூரில் சேவற்கொடியேந்தாமல் செல்கிறான் ஜீன்ஸ் முருகன். புரியாத மெனுவில் பார்த்துக் கொண்டு வரச் சொன்ன பாலாடை நெஞ்சில் ஒட்டிக் கொள்கிறது. அழகான ஆங்கிலத்தில் மரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவளின் இயற்பெயர் மாரியம்மாள். விளையாட்டு பூங்காவில் காலைத் தரையில் உந்தித்தள்ளி ஊஞ்சலில் உயரத்தில் பறக்கிறாள் பெண்ணொருத்தி. Onlineல் Order செய்த உடை, பொருந்தாமல் போனதும், வளரும் பிள்ளைக்குப் பெரிய உடையை வாங்கித் தந்த அப்பா நினைவுக்கு வருகிறார். வீடுகள் மாறுகையில் நினைவுகள் சேர்கின்றன.
தஞ்சாவூரில் விழுந்த பல்லுக்கு சிங்கப்பூரில் அடுத்த தலைமுறைக்குத் தேவதை பணம் கொடுக்கிறது. சுற்றி விரையும் வாழ்வைக் கடந்து கவிதைக்காக இவர் எங்கும் போகவில்லை எனில் மொழி புதிது.
Classic Novelகளில் சுயமிழந்து நம்மைத் தொலைப்பது போல் கவிதைகளில் தொலைந்து போவது அடிக்கடி நிகழ்வதில்லை. இன்பாவின் கவிதைகளில் நான் இழந்து வேறொன்றாய் ஆனேன். சாதாரண நிகழ்வுகளை அசாதாரண தருணங்களாக மரபும்நவீனமும் கலந்த மொழியால் உருமாற்றம் செய்கிறார். திணைகளால் பிரிக்கப்பட்டுத் திணைகளின் கூறுகளைத் தன்னகத்தே கொண்ட கவிதைகள். பொறுமையாகப் படிக்காவிடில் சாலையில் கண்சிமிட்டிக் கடந்த பெண்ணைக் கவனிக்கத் தவறியதற்கு இணையான இழப்பு நேரும். சிங்கப்பூரில் இருந்து கவிதையில் இவ்வளவு Sound and authoritative Voiceஐ நான் எதிர்பார்த்திருக்கவில்லை. புதிதாக எந்தத் தொகுப்பு வந்தாலும், நான் யோசிக்காது வாங்கும் கவிஞர்களின் பட்டியலில் இன்பாவும் சேர்கிறார்.
பிரதிக்கு:
யாவரும் பதிப்பகம் 90424 61472
முதல்பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ.150.