ஆசிரியர் குறிப்பு:
சேலத்தைச் சேர்ந்த அகச்சேரன் கவிதை எழுதுவதோடு ஓவியம் வரைவதிலும் நாட்டமுள்ளவர். இரண்டு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இது சமீபத்தில் வந்த மூன்றாவது கவிதைத் தொகுப்பு.
நல்லவன் என்ற பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் யத்தனங்கள் மிகக் கடினமானவை. You are the most beautiful woman I have seen on the earth என்று ஒரு பெண்ணிடம் சொல்லிப் பாருங்கள், அவள் தன்னை எத்தனை அலங்கரித்தாலும் திருப்தி கொள்வதில்லை.
” நீர்மம் பூத்துக் கிடக்கிறது
எனக்கான நதி
பீத்துணுக்குகள் மினுங்கும்
கரைநுரைகளோடு முரண்படுவோர்
கிடக்கிறார்கள்
நட்டாற்றின் தூய்மை விதந்து
மூழ்குவோரிடமே
பயமாக இருக்கிறது.”
சிதிலமடைந்த வீடுகள், முன்பொரு காலத்தில் வந்தவையென்றால் கூடுதல் வாதையை ஏற்படுத்துகின்றன. கண்டிப்பாகக் காப்பி சாப்பிட்டுவிட்டுத் தான் போகவேண்டுமென்ற அப்பாவின் நண்பர் வீட்டில், உப்பைத் தூக்கலாகப் போட்டுக் கொண்டு வந்த இரட்டைஜடைக்காரி இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பாள்?
” ஆவிகள் இருக்கலாமெனச்
சொல்லத் தோன்றும்
பாழடைந்த அவ்வீட்டில்
திட மௌனமாகி நிற்கும்
அப்பாழ்க் கட்டிடம்
வீட்டின் லட்சணங்களை
விட்டிருக்கிறது.
துக்கம் விசாரிக்க
ஒரு சருகு உள்ளே செல்கிறது
அரக்கு முத்திரையை
மதியாமல் “
தோற்றவர்களுக்கு வரலாறில்லை, அவர்கள் கதைகளைக் கேட்க யாருக்கும் பொறுமையுமில்லை. எனில் வீடென்ற ராஜாங்கத்தில் பரிபாலனம் எப்போதுமுண்டு.
‘ தோல்வியின் முகக்கறையை
அந்தியில் ஒற்றி விட்டு
இரவை அணைத்தபடி இல்லம் சேர்கிறான்
எதுவுமே நடக்காத மாதிரி
குழந்தைக்கு பதிலுறுக்கிறான்
துளி மதுவும் எடுப்பதற்கில்லை
அவனுடைய பிய்ந்த கூரையின் கீழ்
அவனுக்கென்று உண்டு
ஒரு ஓட்டை நாற்காலி”
பேருந்து நின்ற அரைநிமிடத்தில்அன்னாசிப் பழம் விற்க வந்த பெண்ணின் விலகிய தாவணி, பல மைல்கள் கடந்தும் கூடவே வருகிறது. சாலையின் சாவைப் பொருட்படுத்தாமல் விளம்பரப்பெண் பதாகையில் சிரிக்கிறாள். நாய் ரோட்டில் இறந்தது தெரியாமல் நாய்க்குட்டிகள் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன. கவிஞரின் கலைடயாஸ்கோப்பில் சதா மாறும் காட்சிகள்.
இருத்தலில் இருக்கும் நிர்பந்தங்களைச் சுற்றிச்சுற்றி வருகின்றன அகச்சேரனின் கதைகள். “மனைவி காலம் தள்ளுகிறாள்” என்பது போல் எளிதாக வேதனையை இவரால் சொல்ல முடிகிறது. அந்த விளக்கின் ஒளி பரவாததுவில் இடம்பெற்ற பல கவிதைகள் இதிலும் வந்திருக்கின்றன. தவிர்த்திருக்கலாம். குறைவாக எழுதுபவர் அகச்சேரன். வீட்டின் சட்டிப்பொங்கலில் இல்லாத சுவை, அர்ச்சகக்கஞ்சன் தொன்னையில் கொடுத்த பொங்கலுக்கு இருப்பது போல், குறைவாக எழுதுபவர்களில் பெரும்பாலோருக்கிருக்கிறது.
பிரதிக்கு:
சால்ட் 89394 09893
விற்பனை உரிமை தமிழ்வெளி 9094005600
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 120.