ஆசிரியர் குறிப்பு:

கோவையில் வசிப்பவர். தமிழ் உட்பட இரண்டு பிரிவுகளில் முதுகலைப்பட்டம் பெற்றவர். இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு.

பேசுவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டு, ஒதுங்கிப் போவோரிடம் எல்லாம் இனம்புரியாத சிநேகிதம் தொற்றிக் கொள்கிறது. மௌனம் இயலாமையைக் குறிக்கலாம், ஆனால் அது தான் நாம் என்னும் போது, வேறு என்ன செய்வது?

” அடைமழை எனப் பொழிய வேண்டிய
நேரங்களில் கானல்நீரைத்
தேர்ந்தெடுக்கிறேன்
வாயாடி ஓய்கிறேன்
கனவு உலகில்
கவிதை நடையாய்
உதடுகளை ஊசியால் கோர்க்கிறேன்
நனவு உலகில்
தேர்ந்தெடுக்கப்பட்ட தவறான விடையாய்
வார்த்தைகளை விழுங்கி விழுங்கி
கனத்து இருக்கிறது
நெஞ்சு ஈரல்………”

beauty is in the eye of the beholder என்பதில் Beholder என்பவர் வேறொருவர் என்றே இத்தனை நாள் நம்பியிருந்தேன்.

” நேர்த்தி இல்லாத புருவமுடிகள்
அதிகப்படியாய் எண்ணெய் வளரும் சருமம்
பருக்களால் வந்த இரண்டு மூன்று தடங்கள்
சின்னதாய் மெல்ல கருவளையம்
இருந்தும்
அழகியென நினைக்கையில்
அழகியாகவே தெரிந்தேன்
கண்ணாடி முன் நிற்கையில்”

கவிதைகள் எழுதியவரை விட்டு சுயமாகப் பயணிக்கும் திறன் கொண்டவை என்றால்
பலரும் நம்புவதில்லை.

” வாரந்தோறும்
ஞாயிற்றுக்கிழமை மதியம் வந்துவிடுகிறது
ஒரு செவலைப்பூனை
எப்படி சொல்வேன் அதனிடம்
நான் சைவம் என்று”

முதல் படைப்பு குறித்து எழுதும் போது Kids Glovesஐக் கழற்றவே எனக்கு மனம் வருவதில்லை. சங்கமித்ரா Visual, Acrostic என்று பல வடிவங்களை இந்த நூலில் முயற்சி செய்திருக்கிறார். இவர், வாடிவாசல், விருந்தாளி, காச்சர் கோச்சர், ஓநாய்குலச் சின்னம் என்று வாசிப்பில் சரியான பாதையிலேயே போய்க் கொண்டிருக்கிறார். தொடர் வாசிப்பு அவருக்கு சேரவேண்டிய இடத்தைக் குறித்த தெளிவைக் கண்டிப்பாக ஏற்படுத்தும். தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

இவருக்காக என்று இல்லை, பொதுவாகவே புதிதாகக் கவிதை எழுத வருபவர்கள், உறவு நட்பு வட்டத்தில் எப்போதுமே அபிப்பிராயம் கேட்காதீர்கள். அவர்கள் மிட்டாய் என்று தருவது அத்தனையும் தூக்கமாத்திரைகள். விதிவிலக்காய் மோ.செந்தில்குமார் போன்றவர்கள் இருக்கும் தமிழ்த்துறையை விரல்விட்டு எண்ணினால், ஒரு கையில் எத்தனை விரல்கள் மீதி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. நவீன தமிழ்இலக்கியத்துடன் ஸ்நானப்ராப்தி கூட இல்லாத பண்டிதர்கள் காலங்காலமாய் நச்சைப்பாய்ச்சி, வரும் தலைமுறை துளிர்க்கவிடாமல் செய்கிறார்கள்.

யோசிக்காமல் சொன்னால் பெண்களிலேயே, பெருந்தேவி, உமாமகேஸ்வரி, தீபுஹரி, ஜெ.ரோஸலின் உள்ளிட்ட பலர் அவர்களுக்கேயுரிய பாணியில், அவர்கள் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் அடையாளம் கண்டுகொள்ளப்படுமளவு தனித்துவமான கவிதைகளை எழுதி வருகிறார்கள். புதிதாக வருபவர்கள் இவர்களைப் போன்றோரைத் தொடர்ந்து படிக்கும் போது, அவர்களிடமிருந்து விலகிய மொழியைத் தனக்கெனத் தேர்ந்தெடுத்துக் கொள்வதோடு, நவீன கவிதைகள் எப்படி எழுதப்படுகின்றன என்பதையும் கற்றுக் கொள்ள முடியும். கதையோ, கவிதையோ நான் மீண்டும்மீண்டும் சொல்வது அவசரமே வேண்டாம், உங்களுக்கே முழுதிருப்தி இல்லாது எதனையும் வெளியே விடாதீர்கள். நாளை மரணம் நேருமெனில் ஒன்றிரண்டு சொல்லாத கதைகள், கவிதைகள் நம்முடன் காற்றில் கரைந்து போனாலும் பரவாயில்லை.

பிரதிக்கு:

சங்கமித்ரா 70948 16480
முதல்பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ.100.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s