ஜும்பா லஹிரி இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர். லண்டனில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர். முதல் சிறுகதைத் தொகுப்பின் (Interpreter of Maladies) மூலம் உலக வாசகர்களின் கவனத்தை ஈர்த்த லஹிரி, எப்போதும் தன்னை முழு அமெரிக்கனாகக் கருதியவர். 2001ல் திருமணம் முடித்து ரோமிற்கு நிரந்தரமாகக் குடியேறிய லஹிரி, இத்தாலிய மொழியைக் கற்றுக்கொண்டு அதிலிருந்து வேறு எழுத்தாளர் எழுதிய மூன்று நூல்களையும், இத்தாலியச் சிறுகதைகளையும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார்.
இவர் இத்தாலியில் முதலில் எழுதிய நாவலைப் பின்னர் இவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்( Where abouts). இத்தாலியர்கள் இவரை இப்போது தங்கள் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் என்கிறார்கள். பெங்காலியைத் தாய்மொழியாகக் கொண்ட, லத்தீன் மற்றும் கிரேக்க மொழியும் கற்ற, தற்போது லத்தீனிலிருந்து ஒரு நூலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் லஹிரியே, ‘ மொழிபெயர்த்தல்- என்னையும் மற்றவர்களையும் ‘ என்ற இந்த நூலை எழுத முழுத்தகுதி வாய்ந்தவர்.
பத்து கட்டுரைகள் அடங்கிய இந்தச்சிறிய தொகுப்பில், மூன்று கட்டுரைகள் முதலில் இத்தாலிய மொழியிலும், ஏழு கட்டுரைகள் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டவை. முதல் கட்டுரையான ” ஏன் இத்தாலிய மொழி ” என்பது, பெரியவரானதும் ஒரு அந்நிய மொழியைக் கற்றுக் கொள்வதில் இருக்கும் சிக்கல்களை சொல்வதுடன், இவருடைய முனைப்பையும் கூறுகிறது. ஏராளமான நூல்களை இத்தாலிய மொழியில் வாசித்திருக்கிறார். இவர் மொழிபெயர்த்த ஆசிரியரான, டொமினிக்கோ ஸ்டர்நவுனே (Domenico Starnone) மூன்று நூல்களைப் பற்றிய குறிப்புகளாகத் தலா ஒரு கட்டுரை.
ஓவீட்டின் லத்தீன் மூலக்கவிதை நூல் மொழிபெயர்ப்பு குறித்த கட்டுரையில் குறிப்பிடப்படும் இந்த வரிகள் எல்லாக் காலங்களிலும், இடங்களிலும் விவாதிக்கப்படுபவை.
” மொழிபெயர்ப்பு என்பது எப்போதுமே இலக்கிய முரண்பாட்டின் வடிவம். அதைத் தடுப்பவர்கள் அல்லது தள்ளுபடி செய்பவர்களின் புகார், அது நிஜக்குரலை எதிரொலியாக்கிய மாற்றுவடிவம், ஏராளமானவைகள் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுகையில் தொலைந்து போகின்றன”. இதற்கு அடுத்த கட்டுரையில் அரிஸ்டாட்டிலின் ஒரே கிரேக்க மூலத்தின், இருவேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளின் பகுதிகளை இவர் கொடுத்திருப்பது கூடுதல் புரிதலை ஏற்படுத்தக்கூடும். கிராம்ஸி என்ற இத்தாலிய பாசிஸ்ட் அரசாங்கத்தால் பதினோரு வருடம் சிறையிலடைக்கப்பட்ட எழுத்தாளரின் கடிதநூல் பற்றிய நீண்ட கட்டுரையும் மொழிபெயர்ப்பு குறித்து அதிக வெளிச்சத்தை வழங்கவல்லது.
தன்னுடைய நூலைத் தானே மொழிபெயர்த்தல் என்ற தலைப்பிட்ட கட்டுரை, அவசியம் எல்லா மொழிபெயர்ப்பாளர்களும் வாசிக்க வேண்டியது. ஒரு இத்தாலிய வார்த்தையின் முழு அர்த்தமும், அழகும் ஆங்கில வார்த்தையில் இவரால் கடைசிவரை கொண்டு வரமுடியவில்லை. ஆங்கிலமே இவருக்குத் தாய்மொழியை விட சரளமானது என்பதைக் கவனத்தில் கொள்கையில், எதற்காக அந்த வார்த்தையை இத்தாலிய மூலத்தில் உபயோகித்தார் என்பது இவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் பட்சத்தில், இந்த சவாலானது வேறொருவர் மொழிபெயர்க்கும் பொழுது எப்படி விஸ்வரூபம் எடுத்து நிற்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா?
மொழி என்ற தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து :
” பல மொழிகளைத் தெரிந்து வைத்திருப்பது, நம்முடைய எண்ணங்களை
விரிவாகவும், செம்மையாகவும் வடிவமைக்க உதவுகிறது, ஏனெனில் மொழியின் வழியே நாம் சிந்திக்கிறோம். எந்த மொழியுமே போதுமான வார்த்தைகளோ, சொற்றொடர்களோ கொண்டிராத போது, பல மொழிகளைக் கற்றிருப்பது நம் எண்ணங்களை வார்த்தையாக வடிவமைக்க பெரிதும் உதவுகிறது”.
இட்டாலோ கால்வினோ பற்றிய கட்டுரை, நூலின் கடைசியும், மிக முக்கியமானதுமான கட்டுரை. கியூபாவில் பிறந்து, சான் ரெமோவில் வளர்ந்து, பிரான்ஸ், நியுயார்க் போன்ற நகரங்களில் வசித்து, அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பெண்ணை மணந்து, உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்த கால்வினோவிடம் இத்தாலியத்தன்மை குறைவாகவும், உலகத்தன்மை அதிகமாகவும் இருந்ததாகவும், அவர் எழுதியதும் சுத்தமான இத்தாலியில் அல்ல என்றும் லஹிரி குறிப்பிடுகிறார். இத்தாலிக்கு வெளியே அவருடைய வெற்றிக்கு, புதுமையான மொழிநடையும், கற்பனை முன்னோக்கிச் சென்று பரந்து பயணம் செய்வதும், முரண்நகையுமே காரணங்கள் என்கிறார். அமெரிக்காவில் முதலில் பிரபலமான கால்வினோ பின்னர் உலகவாசகர்களின் பேராதரவைப் பெற்றார்.
லஹிரியின் இந்த நூல் பல மொழிகளில் தேர்ச்சிபெற்ற ஒரு படைப்பாளியும், மொழிபெயர்ப்பாளரும் இணைந்த ஒருவர், மொழிபெயர்ப்பின் நுட்பங்கள் குறித்துப் பேசும் புத்தகம். படைப்பிலக்கியம் குறித்து பல்கலைகளில் வகுப்பெடுக்கும் ஆசிரியரும் கூட இவர். மொழிபெயர்ப்பு கற்பனை வளத்தையும், படைப்பாற்றலையும் இணைத்துக் கோருவது என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஓவீட்டின் லத்தீன் மொழிக்கவிதையை, ஆங்கிலம் மற்றும் லத்தீன் மட்டுமே தெரிந்த போதான புரிதலுக்கும், இத்தாலியை நன்கு கற்றுப்பின் லத்தீனில் படிப்பதற்குமான புரிதலையும் பற்றிக்கூறியிருப்பது சிந்திக்க வேண்டியது. அதே சிந்தனையை நாம் இந்தியமொழிகளுக்குக் கடத்தி வந்தால், ஒரு மலையாள நூலையோ, கன்னட நூலையோ அல்லது இதர இந்திய மொழிநூல்களையோ ஆங்கிலத்தில் வாசிப்பதை விடத் தமிழில் படிக்கும் ஆனந்தம் கூடுதலாக ஏன் இருக்கிறது என்பது விளங்குகிறது.
நூல் பெயர் – Translating Myself and others
ஆசிரியர் பெயர்- ஜும்பா லஹிரி
பதிப்பகம்- பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி பிரஸ்
பக்கங்கள்- 204
வகை- ஆங்கிலக் கட்டுரைத்தொகுப்பு
விலை- ரூ. 866.76
நூல் பெற தொடர்பு- Amazon.in
முதல்பதிப்பு- 17 மே 2022.