ஆசிரியர் குறிப்பு:
சேலம் தாரமங்கலத்தில் வசிக்கிறார். பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இது இவரது முதல் தொகுப்பு.
கண்ணனின் கவிதைகள் பெரும்பாலும் ஒரு கதையைச் சொல்கின்றன. வாழ்வியல் அனுபவங்கள் சிதறல்களாகின்றன. பேச்சு மொழியை கவிதைகளுக்குப் பயன்படுத்துகையில், அனுபவங்களின் ஆழமும், உணர்வின் தாக்கமும் தூக்கலாக இல்லாவிட்டால் செய்திக்குறிப்பாக மாறிவிடும் அபாயமிருக்கிறது. கண்ணன் கவிதைகளுக்கு அந்த விபத்து நேரவில்லை.
கண்ணில்லாத அத்தை, அம்மாவுடன் விடாத சண்டையும் அப்பாவிடம் விட்டுக் கொடுக்கும்
சண்டையும் செய்பவள் என்று அவள் குறித்த குறிப்புகளைக் கூறும் போது சத்தமில்லாது வரும் இரண்டு வரிகள், வாசித்ததும் சட்டென்று கடக்க முடியாது நம்மை நிறுத்தி வைக்கின்றன.
” அம்மா அத்தை சண்டையில்
உயிர்நடுங்கும் எங்களுக்கு
தாத்தா அப்பா திட்டினால்
கோதண்டராமா என்று
பெருங்குரலெடுத்தழுதபின்
கிணற்றருகே நடை பயில்வாள்
எத்தனை திட்டினாலும்
அப்பாவென்றால்
அவ்வளவு இஷ்டம்
தீராத காமத்தைத் தேய்த்துக் குளித்திடுவாள்
நள்ளிரவில் குழந்தையாக……………”
குழந்தைகள் பல கவிதைகளில் வருகிறார்கள். குழந்தைகள் உலகம் நம்மால் பதில்சொல்ல முடியாக்கேள்விகளால் நிரம்பியது.
” இன்னிக்குத் தேதி என்ன?
பதினேழு
நாளைக்கு என்ன கிழமை?
புதன்கிழமை.
புதன்கிழமைன்னா என்னாப்பா?
குழந்தையின் அப்பா சிரித்தபடி நகர
எனக்கோ
நாட்காட்டி நகரவேயில்லை
மனசெல்லாம் புதன்கிழமை”
Analogy என்ற இலக்கிய உத்தி இருவேறு பொருட்களின் இடையேயான ஒற்றுமையை சொல்வது. பொதுவாக உரைநடையில் வருவது இங்கே கவிதையில் வருவது அழகியல்.
” மழைக்காலங்களில்
உந்தித் தள்ள வேண்டும்
கோடையில் மென்மையாக
ஒரு சிறுசத்தத்துடன்
திறந்து வழிவிடும்
ஏதோ ஒரு வனத்தில்
என்றோ வெட்டப்பட்டு
தலை திருகிய கோழியாக
இன்னும் கடைசி உயிருடன்
அலைபாயும் தலைவாசல் கதவு”.
கண்ணனின் கவிதைகளில் வருபவர்கள் எளிய மனிதர்கள். இருத்தல், தலையில் பாறாங்கல்லாய் கனப்பதால் அங்குமிங்குமாய் அலைபாய்கிறார்கள். ஜாதி வேறுபாட்டால், கடன் தொல்லையால் அவமானத்தைச் சந்திக்கிறார்கள். மரணம் அடிக்கடி நேர்கிறது. சிறுநகரின் வாழ்க்கையை, இருபதாம் நூற்றாண்டுத் தாம்பத்யத்தை, உறவுகளின் நெருக்கத்தைச் சொல்லும் கவிதைகள்.
பத்துவருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகும், ஒரு புத்தகம் வெளியிட்ட பின்னும் இதுவரை என்ன நேர்ந்தது என்று பழங்கணக்கு பார்ப்பதில் உள்ள பெரிய வித்தியாசம் பிந்தையதில், தவறுகளைத் திருத்திக் கொள்ள அடுத்து வாய்ப்புக் கிடைப்பது தான். இதில் உள்ள பல கவிதைகளை திடசித்தத்துடன் நீக்கி, சின்னத்தொகுதியாகக் கொண்டு வந்திருக்கலாம். நாங்கள் வங்கித்தேர்வு எழுதும் போது இருந்த Negative mark system, உண்மையிலேயே நல்ல கவிதைகளுக்குக் கிடைத்த சரியான மதிப்பெண்ணை மோசமான கவிதைகள் பிய்த்துத் தின்பது போல் Apply ஆவதாகத் தோன்றுகிறது. குறைகளை நீக்கி அடுத்த தொகுப்பு வரட்டும்.
பிரதிக்கு:
பறவை பதிப்பகம் 99520 89604
முதல்பதிப்பு ஜூன் 2022
விலை ரூ. 120.