க்ளாரி அயர்லாந்தில் பிறந்து, பண்ணை வீட்டில் வளர்ந்தவர். இவரது நூல்கள் இருபது மொழிகளுக்கு மேல் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவருடைய Foster என்ற நாவல், இருபத்தோராம் நூற்றாண்டின் சிறந்த ஐம்பது நாவல்களில் ஒன்றாக Times Magazineஆல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவருடைய இந்த நாவல் 2022 புக்கர் நெடும்பட்டியலில் ஒன்று.
Magdalene Laundries என்பது அயர்லாந்தில், பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து, இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதி வரையில் இயங்கிய கத்தோலிக்க கான்வென்ட்கள். சிறு பெண்கள், முறையில்லாமல் கர்ப்பமாகி இருந்தால், இந்த கான்வென்ட்கள் அவர்கள் குழந்தை பெற்று, உடல்நலம் தேறும் வரை வைத்திருந்து பின் அனுப்பிவிடும். பிறக்கும் குழந்தைகள் ரகசியமாக வெளிநாட்டினருக்குத் தத்து கொடுக்கப்பட்டு விடுவார்கள். மேலோட்டமாக இது ஒரு சேவை போல தோன்றினாலும், ஆழ்ந்து நோக்கினால், உடலுறவு மறுக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளின் கட்டுப்பாட்டில் இந்த சிறுமிகள் எவ்வளவு, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்பது விளங்கும். கருக்கலைப்பு கத்தோலிக்க மதக் கொள்கைக்கு எதிரானது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பலரது ஆய்வறிக்கைகள் உலகமெங்கும் அதிர்வலைகளை எழுப்பிய பின், 1996ல் இது போன்ற அமைப்புகள் மூடப்படுகின்றன. 2013ல் ஆறஅமர யோசித்து அயர்லாந்து அரசாங்கம் இந்த வன்செயல்களுக்கு மன்னிப்பு கேட்கிறது. இந்த நாவலின் காலகட்டம் 1980கள்.
பர்லாங், கத்தோலிக்கத் தாய்க்கு, தகப்பன் பெயர் தெரியாமல் பிறந்து, பிராட்டஸ்டன்ட் பெண் ஒருவரால் வளர்க்கப்பட்டவன். கரி மற்றும் விறகு வர்த்தகத்தில், நாற்பதைத் தொடும் வயதில் ஐந்து பெண் குழந்தைகளுடனும், இவன் போலவே கடின உழைப்பாளியான மனைவியுடனும், வாய்க்கும், வயிற்றுக்குமான ஜீவனத்தை நடத்துபவன். இவனது மனசாட்சியின் குரலுக்கு, எதிர்காலம் பற்றிய கவலையின்றி செவிசாய்ப்பது இந்த நாவல் சொல்ல வரும் விஷயம்.
Old Man and the Seaல் சிறிது நேரத்திலேயே கடலுக்குப் போய்விடுகிறீர்கள். நல்ல இலக்கியம், நீங்கள் உணராமலேயே உங்களை எங்கோ கடத்திச் சென்று விடுகிறது. இந்த நாவல் உங்களை அயர்லாந்துக்கு அழைத்துச் செல்கிறது. மிகச்சிறிய நாவலில் ஒரு Monotonous வாழ்க்கைக்குப் பெரும்பங்கு கொடுத்து விட்டு, ப்ளாஸ்பேக்கில் ஒரு ரகசியத்தை வைத்து, அதை வெளியிட்டும் வெளியிடாமலும் செய்து, கடைசி மூன்று பக்கங்களில் நாவலை வேறொரு உயரத்திற்குத் தூக்கிச்செல்வது எல்லாம் மிகத்திறமை வாய்ந்த எழுத்தாளர்களுக்கே அமையும்.
Conscience என்பது எல்லாவற்றையும் விட வலியது. அன்னாவிற்கு, அனந்த நாயருக்கு இன்னும் பலருக்கு காலம்கடந்து அது விழிப்பது போலில்லாமல் பர்லாங்கிற்கு சரியான சமயத்தில் எழும்பிவிடுகிறது.
Love your neighbor as yourself என்பதும் விவிலியம் சொன்னதே. ஒருபுறம் மதத்தின் பெயரால், திருச்சபைகளின் நிதிஉதவியோடு நடக்கும் அக்கிரமங்கள், இன்னொரு புறம் செக்குமாடு வாழ்க்கையில் குழந்தைகளின் எதிர்காலம் கேரட்டைப் போல் முன்னால் தெரிவது, இன்னொன்று பர்லாங் பிறப்பின் மர்மம் என எல்லாவற்றையும் சிறியநாவலில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார். நாவல்கலை குறித்து கற்கவிரும்புபவர்கள் அறிந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கும் சிறந்த நாவலிது.