இலக்கியம் என்பதைப் பால் போல் யாரும், யாருக்கும் சங்கில் புகட்டுவதற்கில்லை. சிலாகித்து அல்லது விமர்சித்துப் பேசப்படும் பிரதிகளில், பல பரிமாணங்களின் சிறகுகள் உதிர்ந்து, ஒற்றைப் பரிமாணம் உருக்கொள்கிறது. வாசகனுக்கு தடித்த கயிறோ அல்லது சுளகோ, யானை என்ற அபிப்ராயம் மேலிடுகிறது. செறிவான இலக்கியம் எப்போதும், வாசிப்பவரின் அனுபவத்திற்கு, சூழலுக்கு, கிரகிப்பிற்கு ஏற்ப பாத்திரத்திற்கேற்ப வடிவத்தை மாற்றும் திரவம் போன்றவை.
ஜெயகாந்தனை என்னுடைய பள்ளியிறுதியில், முழுவதுமாக வாசிக்க ஆரம்பித்த போது அவரது சிறுகதைகள் வித்தியாசமானவை மட்டுமல்ல, மனித வாழ்க்கையில் அமிழ்ந்த அனுபவங்களின் திரட்டு என்பது புரிந்தது. ‘சாளரம்’ போன்ற அவரது சிறுகதைகள் காலத்திற்கு முந்தியவை. ஜெயகாந்தனை வாசித்த பிறகு பலரது சிறுகதைகளை வாசிக்கவே முடியவில்லை. இதில் உயர்வுநவிற்சி என்று எதுவுமில்லை. அதே ஜெயகாந்தனை புதுமைப்பித்தன், கு.ப.ரா, ந.பி,, தி.ஜா, கு.அழகிரிசாமி போன்ற பல மாஸ்டர்கள் கடந்துசெல்ல வைத்தார்கள். தமிழ் இலக்கியத்தின் மாஸ்டர்களின் சிறுகதைகளைப் படித்தவர்களுக்கு உலகத்தில் எந்த சிறுகதை எழுத்தாளரும் மிரட்சியை ஏற்படுத்துவதற்கில்லை.
பொன்னியின் செல்வன், வீரப்பாண்டியன் மனைவி, யவனராணி போன்ற வரலாற்றுப் புதினங்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், குறிஞ்சி மலர் போன்ற நூற்றுக் கணக்கான சமூகநாவல்கள் என்னை வேறொரு உலகத்திற்குத் தூக்கிச்சென்றது உண்மை. ஆனால் அந்த வயது வேறு. உலக இலக்கியங்களை ஓரளவு வாசித்த பின்னரே தமிழில் நாவல் இலக்கியத்தின் தேக்கநிலை புரிந்தது.
எழுத்தாளர் இரா.முருகனின் குரலில் நேற்று, அவ்வளவு பரபரப்பு. Cursed Bunnyஐ புரட்டிப் பார்க்கலாம் என்று நினைத்து முப்பது பக்கங்களைக் கடந்து விட்டேன், மிகவும் வித்தியாசமான எழுத்து என்றார். இலக்கியத்தை வாசிப்பது ஒரு இன்பம் என்றால், ஒத்த மனது, வாசிப்பு இருப்பவர்களிடம் பகிர்வது மற்றொன்று. அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே நான் பாக்கியவான். வாசிப்பில் குறிப்பிட்ட மொழிகளுக்குள் உங்களை சுருக்கிக் கொள்ளாதீர்கள். எந்த எழுத்தாளரும், புதுப் படைப்புடன் வருகையில், தேர்வு எழுத வருகிறார், அதற்கு நீங்கள் மதிப்பெண் தருகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எழுத்தாளரைப் பீடத்தில் அமர்த்தி வைத்தீர்கள் என்றால், அவர் சிருங்கேரி பீடம் போல், கடப்பவரை எல்லாம் காலைத் தொட்டுக்கும்பிடச் சொல்வார். பத்து நிமிடங்கள் கிடைத்தாலும் இருபது பக்கங்களை வாசிக்கலாமே என்று ஆசைப்படுங்கள். ஏராளமாக வாசியுங்கள். ஒரு நிலையில், வாசிப்பு உங்களை வழிநடத்தி, உங்களுக்கான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கச் செய்யும்.