தக் ஷிலா ஸ்வர்ணமாலி:
இலங்கை, களனி பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சிங்கள எழுத்தாளர். இடதுசாரி சமூகசெயற்பாட்டாளர். அந்திம காலத்தின் இறுதிநேசம் என்ற சிறுகதைத் தொகுப்பு மற்றும் பீடி என்ற நாவலின் மூலம் தமிழுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். இது சமீபத்தில் வெளிவந்த இவரது நாவலின் மொழிபெயர்ப்பு.
ரிஷான் ஷெரிப்:
சிங்களத்தில் இருந்தும் ஆங்கிலத்தில் இருந்தும், பல மொழிபெயர்ப்புகளைச் செய்தவர். மொழிபெயர்ப்புக்காக பல விருதுகளைப் பெற்றவர். சொந்தமாகவும் கவிதை, சிறுகதைத் தொகுப்பு, நாவல், கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டவர்.
நூலில் இருந்து:
” நாளுக்கு நாள் நான் உன்னுடன் ஆழமாக இணைந்து விட்டிருந்தேன். அதே அளவு உன்னிடமிருந்து ஆழமாக விலகிவிட்டிருந்தேன். இவையிரண்டுமே ஒன்றாக நிகழ்ந்த போது நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னால் சிந்தித்துக்கூடப் பார்க்க முடியவில்லை.”
நாளெல்லாம் துப்பாக்கி சத்தம், நள்ளிரவில் குண்டுகள் தலையில் விழுந்ததா இல்லை பக்கத்தில் விழுந்ததா என்று புரியாத உறக்கமயக்கம், பதுங்குகுழியில் ஆண்பெண் பேதமில்லாது ஒருவர் வியர்வை இன்னொருவருடன் கலக்க, மணிக்கணக்கில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்ட இலங்கை சிறுவனும், மாலை ஆறுமணிக்கு மேல் வெளியே விளையாடப் போகக்கூடாது என்று அம்மாவால் கண்டித்து வளர்க்கப்பட்ட தமிழ்நாட்டு சிறுவனும், அவர்களது நாற்பதாவது வயதில், முகம் தெரியாத நபரால் Beretta 92G Gunஆல் அச்சுறுத்தப்பட்டால் எதிர்வினை ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறீர்களா? துப்பாக்கி என்றில்லை, போர், மரணங்கள், பேரிடர் முதலியவற்றைக் கடந்து வந்தவர்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கும் அனுபவம் சமமில்லை. அனுபவப்பற்றாக்குறை நாளிதழ் செய்தியை வைத்து சரித்திரநாவல் எழுதச் சொல்கிறது.
அனுபவச்செறிவு இலங்கையின் சிங்கள, தமிழ் இலக்கியங்களில் வெளிப்படுவதாலேயே சமீபத்தில், தொடர்ந்து இலங்கை சர்வதேச இலக்கியமேப்பில் இடம் பெற்று வருகிறது.
ஸ்வர்ணமாலியின் ஆழமான சிறுகதைத் தொகுப்பு, வீச்சு அதிகமுள்ள பீடி நாவலுக்குப் பிறகு வரும் இந்த நாவலின் மீதான பெரும் எதிர்பார்ப்பு சற்றும் வீண் போகவில்லை. இடதுசாரி இயக்கத்தில் இருந்த இரண்டு இலட்சியவாதிகள், கொள்கை வேறுபாட்டில் இயக்கத்தை விட்டுவிலகி, ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டபின் நடப்பது என்ன என்பதே இந்த நாவல்.
காதல் ஏன் காலத்தில் தேய்கிறது? Why Love Fades? யாருமே நேர்மையாகப் பதில் சொல்ல
முடியாத கேள்வி. அருகாமை, அதிகம் Availableஆக இருப்பது முக்கிய காரணங்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. நம்மை நாம் காதலிப்பதைப் போல் வேறுயாரையும் அதே ஆத்மார்த்ததுடன் காதலிக்க முடிவதுமில்லை. சமதரா பத்தாம் வகுப்பில் படிக்கையில் சொல்லப்பட்ட காதலை, இருபது வருடங்கள் கழித்து அவள் ஏற்றுக்கொள்ளப்படும் போது, ஆண்டுகளின் கனத்தால் ஏற்பட்ட முதிர்ச்சியில் Crush, infatuation போன்றவைகளுக்கு இடமில்லை.
பின்னர் ஏன்?
சமதரா சிங்களப்பெண், அரவிந்தன் தமிழன்.
சமதரா இதற்கு முன் திருமணமே செய்து கொள்ளவில்லை, அரவிந்தன் மதாரா என்ற பெண்ணை மணந்து விவாகரத்து செய்தவன். சமதரா, கற்பனாவாதி, Alteregoவை உருவாக்கிக் கொண்டு தன் துயரங்களைப் பகிர்பவள். அரவிந்தன் Practical. மேலைநாடுகளில் குழந்தைகளுடன் இருக்க, அடிக்கடி சந்திக்கும் பழைய கணவன் மனைவிகள் போல், நம்மால் யதார்த்தமாக ஏன் இருக்க முடியவில்லை. பழைய துணையின் பெயர், புதிய உறவுகளின் நடுவே வரும்பொழுது ஏற்படும் Uneasinessக்கு என்ன காரணம்?
உரையாடல்கள் மூலம் மொத்தக் கதையையும் நகர்த்துவது எளிதான விஷயமில்லை. ஸ்வர்ணமாலி ஒரே உரையாடலை மீண்டும்மீண்டும் இருவரும் செய்வதாக வேண்டுமென்றே அமைத்திருக்கிறார். அது போதாதென்று Alter ego ஒரு சிறுமியாக வந்து கதை முழுதும் உரையாடல் செய்கிறாள். இயக்கத்தில் இருந்தது, வெளிவந்தது, மணந்தது…… என்று எல்லாமே உரையாடல்களில் தான். ஆனால் உரையாடல்களில் வெளிப்படும் அந்த உணர்வுகள், அந்த intensity…….. ( ரிஷான் ஸ்வர்ணமாலியின் கனவைக் கலைக்காது நம் கைகளில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.)
இது கவிதையா, ஓவியமா, சிறுகதைகளின் தொகுப்பா அல்லது இவை எல்லாமா? வடிவத்தில், உள்ளடக்கத்தில் முற்றிலும் ஒரு பரிசோதனை முயற்சியாக ஸ்வர்ணமாலி இந்த நாவலைக் கொண்டு வந்திருக்கிறார். சதுரசாளரம் என்பது போல் பல குறியீடுகள் அடங்கிய நாவல்.இது எளிய வாசிப்புக்கு உகந்த நாவலல்ல. வாசகஅர்ப்பணிப்பை, வாசகவிஸ்தாரத்தைக் கோரும் நாவல்.
ஸ்வர்ணமாலியின் நாவல்கள் நல்ல முறையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால், அவருக்கு எந்த விருதுமே பக்கத்தில் தான்.
பிரதிக்கு:
கஸல் பதிப்பகம் இலங்கை
Commonfolks.in
முதல்பதிப்பு பிப்ரவரி 2022
விலை இலங்கை ரூ.450 இந்தியா ரூ.120.