ஆசிரியர் குறிப்பு:
1980களில் சிறுகதைகள் மூலம் தமிழிலக்கியத்தில் அறிமுகமானவர். இவரது சில சிறுகதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஏழாண்டு காலம் காலச்சுவடு பொறுப்பாசிரியராக, ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த இவரது நான்காவது நாவல் இது.
இந்த நாவல் கதைகளின் கதை. இன்றைய எல்லாக் கதைகளுமே இது போன்ற ஒரு கதையை யாரோ யாருக்கோ நூற்றாண்டுகள் முன்பு சொல்லியதன் நீட்சி.
கால்நூற்றாண்டாக இந்த நாவலைத் தொட்டுத் தொடர்ந்து, விட்டு விலகி, எழுதியதை மீண்டும் மீண்டும் எழுதி, ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் தேவிபாரதி. நாவலை வாசிக்கையில் எழுதிய அவருமில்லை, வாசிக்கும் நானுமில்லை, பள்ளி முடித்து நேராகப் பாதிபடித்த புத்தகநினைவில் வீடு திரும்பும் சிறுவனாகிப் போனேன் நான்.
நாவலின் காலகட்டத்தில் ஜமீன், வெள்ளையர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள். நொய்யல் ஒவ்வொரு வீட்டின் வாசலுக்கும் சென்று குசலம் விசாரிக்கும் அளவிற்குப் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. நாவலின் முதல் மூன்று அத்தியாயங்கள் தொன்மத்தில் தோய்ந்தெடுத்து நகர்வதால் அந்த மனநிலையை சற்றுநேரம் விட்டுவிலக முடியாது போகிறது. இடையில் மறக்கக்கூடாது என்பதற்காகவே காரிச்சி கதாபாத்திரம். நொய்யலே பெண்ணுருவில் வந்தது போல. பேரழகும் அவள் தான் அவலட்சணமும் அவள் தான்.
வேம்பனகவுண்டர் ஆணாதிக்க சமுதாயத்தில் வித்தியாசமானவர். பிறந்த ஊரில் அதிக தொல்லை இல்லாது வாழ்க்கையைக் கழிக்காமல், எல்லாவற்றையும் விட்டு விலகி, ஈரோட்டில் புதிதாக வியாபாரம் ஆரம்பித்து, பின் அனைத்தையும் இழந்து, உடுத்திய துணியுடன் சொந்தஊர் வந்து, மனம் தளராது மீண்டெழுந்தவர். அப்படித்தான் அவர் நினைத்துக் கொண்டிருந்திருக்கக்கூடும், அவர் என்றுமே மீண்டெழ முடியாதபடி சாமியாத்தா அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாள் என்பது முன்னர் தெரியாமல் போனதால். பீஷ்மரைப் போல் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த வேப்பனகவுண்டர்.
குமரப்பபண்டிதன் மற்றொரு வித்தியாசமான கதாபாத்திரம். முடிதிருத்தும் வம்சத்தில் பிறந்து, ஜோசியம், மருத்துவம் கற்று எல்லோருக்கும் ஆசிரியனானவன். அவனைக் கேட்டே ராஜா, பண்ணாடிகள், ஊர்மக்கள் நல்லகெட்ட காரியங்களைச் செய்யமுடியும் என்று தன்னை நிறுவிக் கொண்டவன். இப்போது பார்ப்பவர்களுக்கு அவன் பணிவில் ஒரு கம்பீரம் தெரியக்கூடும். ஆனால் கடந்து வந்த அவமானங்களை அவன் ஒருநாளும் மறக்கப்போவதில்லை.
கற்காலத்திலிருந்து இன்றுவரை அன்னியப் பெண்ணைக் கவர்வது எப்படி ஆண்மையின் சின்னமாகக் கருதப்படுகிறதோ அதே போலவே குடும்பமானம் தன்வீட்டுப் பெண்ணின் ஒழுக்கத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த நாவலில் வரும் மூவருமே மணவினை தாண்டி ஏராளமான பெண்கள் தொடர்பு கொண்டவர்கள். ஆனால் தன்வீடென்று வருகிறபோது, வேம்பனகவுண்டர் மௌனத்தால் எதிர்கொள்கிறார். குமாரசாமி உறவுமுறை சொல்லி கூடாதென்கிறான். பூபதியின் எதிர்வினை வன்முறை. மூவருமே வேறு பின்னணி, குணநலன் கொண்டிருந்தாலும் மூவரின் கௌரவமும் அவரவர் பெண்ணில் தான் இருக்கிறது.
யதார்த்தத்தில் இருந்து மாயயதார்த்தத்திற்குத் தாவியிருக்கிறார் தேவிபாரதி. நாவல் முழுதும் மாயயதார்த்தம் அங்கங்கு வந்து சற்று திகைத்துப்பின் யதார்த்தத்திற்கு மாறுகிறது. அம்மன் சிலை உயிர்பெற்று ஊருக்குள் வருவது, இறந்து போனவள் சூறையாகி ஊரை வலம் வருவது, காரிச்சி சம்பந்தப்பட்ட பகுதிகள், தேவனாத்தா பூபதிக்குப் பொங்கிப் போடுவது போலப் பலஇடங்களில் மாயயதார்த்தம் தாராளமாகக் கையாளப்பட்டிருக்கிறது.
நொய்யல் கரை வாழ்க்கை இது. வாய்மொழியாகச் சொல்லப்பட்ட நாட்டார் கதைகளின் சாயல் கொண்டது இந்த நாவல்.
மேற்பார்வைக்கு, ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கதை போலத் தோற்றமளித்தாலும் இது ஒரு நதிக்கரையின் வாழ்க்கையைச் சொல்லும் கதை. சாதிக்கட்டுமானங்கள், நம்பிக்கைகள், புரளிகள், சடங்குகள், சிறுவயதில் நாம் கேட்ட எத்தனையோ விஷயங்கள் என்று ஏராளமானவற்றை உள்ளடக்கிய கதை. இதில் வரும் பெண்கள் அவர்கள் தரப்பைச் சொல்லவில்லை, குமரப்ப பண்டிதனின் குடும்பம் போல் பெரிய மூப்பன் போன்ற மற்ற முக்கியமான கதாபாத்திரங்களின் கதைகள் வரவில்லை, பாரு ஏன் சாமியாத்தாள் போல் இருக்கிறாள் என்பது காரிச்சியால் ஒரே வரியில் சொல்லிக் கடக்கப்படுகிறது, இவை எல்லாம் சேர்ந்தால் நாவல் இரண்டாயிரம் பக்கங்களைத் தொட்டிருக்கும்.
இந்த நாவல் ஒரு Modern Epic. Dystopian சாயலைக் கடைசியில் கொண்டிருந்தாலும் நாவலின் உள்ளடக்கம் எந்த ஒரு சிறிய வட்டத்திலும் நுழைக்க முடியாமல் பரந்து விரிந்தது. வட்டார வழக்கு இந்த நாவலுக்கு கூடுதல் அழகைச் சேர்க்கிறது. வெள்ளியின் விசாரம், நம் வாழ்க்கை குறித்தும் சில கேள்விகளைக் கேட்கத் தூண்டுதலாக இருக்கும். தேவிபாரதியின் முதல் நாவல், அதன் பின்னர் இரண்டாம் நாவல் தான் அவருடைய மாஸ்டர்பீஸ் என்று சொன்னவர்களைக் கேலி செய்கிறது இந்த நாவல். மோகமுள், காகிதமலர்கள் போலவே இதுவும் முழுமையான நாவல். நொய்யல் இறந்து விட்டாள். அவளுக்கு இதை விட அற்புதமான Tributeஐ இனி வேறுயாரும் தந்துவிட முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது.
பிரதிக்கு:
தன்னறம் பப்ளிகேஷன் 98438 70059
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2022
விலை ரூ.800.