ஆசிரியர் குறிப்பு:
புதுச்சேரியைச் சேர்ந்தவர். கணிணி வரைகலையாளர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு குறுநாவல், ஒரு சிறுவர் நாவல் ஆகியவை ஏற்கனவே வெளிவந்த இவரது படைப்புகள். இது சமீபத்தில் வெளிவந்த இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
காதல், திருமணம் என்பதன் மீதான புனிதஅரிதாரம் மெல்ல மெல்லக் கலைந்து வருகிறது. பிறழ் உறவுகளை அப்படியா என்று அதிர்ச்சியாகக் கேட்பவர்களைப் பார்த்தால் நன்றாக நடிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. வாழ்வின் சமநிலை தடுமாற்றத்துக்குள்ளாகும் போது, திருமண உறவுகள் ஆட்டம் காண்கின்றன. அதே வேலை, ஒரே ஊர், வருடம் தவறாது ஊதியஉயர்வு, சீரான உடல்நலம் எல்லாம் இருக்கும் திருமணங்கள் இருவரில் ஒருவர் சாகும் வரைப் பிழைத்துக் கொள்கின்றன. மற்ற நேரங்களில், உடல், ஒலிக்குறிப்புகள், காமுறுதல் ஆகிய கதைகளில் நடப்பது தவிர்க்க இயலாததாகிறது. அந்த விதத்தில் அரிசங்கர் பலரும் தொடத்தயங்கும் நிதர்சனப்பூசணியை நடுத்தெருவில் போட்டுடைக்கிறார்.
காமம் பல கதைகளின் அடிநாதமாக இருக்கிறது. ஆண்களின் காமம் தங்களுக்கு இயல்பான ஒன்றாகவும், பெண் வட்டத்தைத் தாண்டாமலும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் மனைவியின் Extramarital affairsக்கு ஒருவன் பைத்தியமாகிறான், மற்றொருவன் தற்கொலை செய்து கொள்கிறான். பக்கத்து வீட்டு சிறுமியின் மீது கைவைக்கும் நடுத்தரவயதுக்காரரின் காமம் குடும்பத்தை நிலைகுலைக்கிறது. திருநங்கையின் மீது மற்றவர் கொள்ளும் காமம் பாலியல் வல்லுறவாகிறது. மூளை வளர்ச்சி அடையாதவனுக்கும் காமம் நிறைந்து வழிந்து மற்றவர் உடையை நனைக்கிறது. உடலுக்கு வேண்டிய இரண்டாவது பசியைச் சுற்றியே பலகதைகள் வருகின்றன.
ஏமாளிகள், உண்மைகள், பொய்கள், கற்பனைகளைத் தொடர்ந்து இதிலும் மனவளர்ச்சி குன்றிய ஒரு கதாபாத்திரம் ஒரு கதையில் வருகின்றார். பைனரி மழையும், மிக நீண்ட முடிவில்லாத முத்தமும், வாழ்வாதாரத்திற்கான வேலை உணர்வுகளைச் சிதைப்பதைச் சொல்லும் சாதாரண கதைகள். அது போலவே கூண்டுக்கு வெளியே சில நிமிடங்கள் மிகச் சாதாரணமான கதை.
கதைகளில் Fine tuning இன்னும் அரிசங்கர் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு உடல் சிறுகதையில் செல்வத்தின் மனைவிக்கும், முதலாளிக்குமான Encounter தேவையில்லாதது. அது இல்லையென்றால் கதை இன்னும் கூர்மையாக வந்திருக்கும். அதே போல் ஒலிக்குறிப்புகள் கதை நல்ல கதை. இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் சிறந்த கதையாகச் சாத்தியமுள்ள கதை. அந்திமகாலத்தின் இறுதிநேசம் தொகுப்பில் ஸ்வர்ணமாலியின் ஒரு கதையில் நடுத்தரவயதுப் பெண் Call boyஐத் தேடித் தெருவில் காமத்துடன் அலைவாள். இந்த தொகுப்பின் ஒரு கதையில் முல்லை, தேன்மொழியை நடத்திக்கூட்டிப்போய் யோசனை கேட்கிறாள். ஏன் நாம் இன்னும் தயங்குகிறோம்!
அம்மா இன்னும் சாகவில்லை கதையில் அம்மா எனும் பிம்பத்தின் புனிதத்தை உடைக்கிறார். திருமணபந்தம் ஒரு Convenience sake அமைப்பு, அது Electoral alliance போல பரஸ்பரம் எதிர்பார்ப்பைக் கொண்டவை என்பதை இவரால் தைரியமாகச் சொல்ல முடிகிறது. திருநங்கையுடனான Platonic relationship நடைமுறைக்கு ஒத்துவராததைச் சொல்ல முடிகிறது. இந்தத் தொகுப்பின் மூலம் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறார் அரிசங்கர்.
பிரதிக்கு :
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ. 150.