ஆசிரியர் குறிப்பு:
கழுகுமலையில் பிறந்தவர். வங்கியில் வேலைசெய்து விருப்பஓய்வு பெற்றவர். மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கட்டுரை நூல்கள், ஒரு குறுநாவல் முதலியவற்றை ஏற்கனவே வெளியிட்டுள்ள இவர் இலக்கியத்துடன் சேர்ந்த பணிகளில் தன்னைத் தொடர்ந்து இணைத்துக் கொண்டவர். இந்த நூல் கி.ராவுடனான கடைசி நேர்காணல்.
பல வார்த்தைகளைப் போலக் கதைசொல்லி என்ற வார்த்தையும் வேறு அர்த்தத்திலேயே சொல்லப்படுகிறது. கதைசொல்லி என்றால் Narrator என்று பதிந்து கொண்ட மனம், வழுக்குத் தரையில் சறுக்கி, சுவரைப் பிடிமானம் செய்தது போல் சமாளித்துக் கொள்கிறது.
‘கதவு’ கதை ஒரு Popular கதை. ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெறாதது மட்டுமல்ல, பிரசுரத்திற்கு தகுதியான மற்ற பதினைந்து கதைகளில் கூட அது ஒன்றில்லை. கோபல்ல கிராமம் தொடராக எழுத அனுப்பி விகடன், குமுதம் இரண்டுமே ஏற்றுக்கொள்ள மறுத்த கதை. பின்னர் வாசகர் வட்டம் வெளியிடுகிறது. வாசகர் வட்டம் எத்தனை அற்புதமான புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. கண்ணீரால் காத்திருக்க வேண்டும் அது போன்ற பதிப்பகங்களை. கோபல்ல கிராமம் வெளியானதும் அது நாவலே இல்லை என்று கூட்டம் போட்டு சொல்கிறார்கள். சுந்தரராமசாமி “குடிக்கத் தண்ணி கூட கேட்கலையே” என்று கேட்டதாகச் சொல்வதில் கி.ராவின் குசும்பு வெளிப்படுகிறது.
திருமண மடலுக்கு வாழ்த்து கடிதத்தில் வரும் வரிகள் இவை. கி.ராவை இழந்து விட்டோம்.
” வீட்டுக்குள்ளே நெல் இடிக்கும் பாறைக்கல் என்று தரையில் பதித்திருப்பார்கள். அதில் குவித்து வைத்தும், குந்தாணியைப் போட்டும் பெண்கள் வட்டமாகக் கழுந்து உலக்கைகள் கொண்டு இடிப்பது பார்க்க வேண்டிய ஒன்று.
முக்கியமாக வாலிபப் பயபிள்ளைகள் பிரியமாகப் பார்ப்பார்கள்”.
நேர்காணல் முழுதும் கி.ராவின் குரல் தனித்து ஒலிப்பது கேட்கிறது. எதைப் பேசினாலும், எழுதினாலும் சுவாரசியமாக்குவது என்பது எல்லோராலும் முடியாது. அவரது மகன் எழுதுவது பற்றிக் கேட்ட கேள்விக்கு பதில் இது;
” அவன் என்னைப் போல எழுதுவதாகச் சொல்லி, அதே பேச்சு வழக்கு மொழியைக் கையாளுகிறான். எல்லாப் பெற்றோர்களும் சொல்ற மாதிரி, நானும் நல்லாத்தான் எழுதுறான் என்றே சொல்வேன். மற்ற விஷயங்கள் பற்றி வாசகர்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்.”
அப்படியே ஜெயமோகன் தன் மகன் எழுத்தைப் பற்றி எழுதியிருப்பதைப் படித்துவிட்டு இந்தப் பதிவை முடித்துக் கொள்ளலாம்.
“அந்நாவலில் அஜிதன் அடைந்த உயரங்கள் உள்ளன. கவித்துவமும் தத்துவதரிசனமும் இயல்பாக ஒன்றாகி வெளிப்படும் படைப்பு அது. உண்மை, அனைவருக்குமான படைப்பு அல்ல………
அதை நான் படித்துக்கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு திகைப்பை அடைந்தேன். சந்தேகமே இல்லாமல் அது ஒரு பெரிய இலக்கியவாதி எழுதிய படைப்பு. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று. நுண்ணிய கவித்துவம் வழியாகவே உச்சமடைவது.”
பிரதிக்கு:
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் 99404 46650
முதல்பதிப்பு மார்ச் 2022
விலை ரூ. 50.