ஆசிரியர் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு நீர்வளத்துறையில்
உதவி இயக்குனர். முகநூல் பக்கத்தில் இவர் எடுத்து, வெளியிடும் புகைப்படங்கள் இவரை எல்லோருக்கும் நெருங்கியவர் ஆக்கி விடும். இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.
பெண்கள் எப்போது அழகாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளக் கொஞ்சம் அனுபவசேகரம் கையிருப்பில் இருக்க வேண்டியதாகிறது. புறஅழகில் மயங்கியதெல்லாம் பொய்யென்று ஆகிறது.
” இப்படி நடு ரோட்ல உதிர்த்திருக்கயே
உனக்கு அறிவிருக்கா?
உன்னெதிரே தலை குனிந்து நிற்கிறது
அத்தனை பெரிய மரம்.
உள்ளங்கைகளில் அள்ளிய குவியல்
மலரொன்றின் உள் அடுக்கின் நசுங்கல்களை நீவி சரி செய்தபடி
என்னிடம் சொல்கிறாய்
எவ்வளவு அழகா இருக்கு இல்ல
அப்படி சொல்லும் போது
அவ்வளவு அழகாக இருக்கிறாய்
நீ.”
திருவிழா முடிந்த கிராமம், மீண்டும் சந்திப்போம் என்று சிறகடித்துப்போன பட்டாம்பூச்சி இல்லாத கல்யாணவீடு, இறந்து போன நண்பனின், மனைவி …….
வெற்றிடங்கள் நிரப்புவதற்கில்லை.
” நீண்ட வாரியல்களால்
இழுத்து இழுத்துத் திரட்டித்
தீ வைக்கப்படுகின்றன நேற்றைய
இரவுத் திருவிழாவின் மிச்சங்கள்
கண் மூடியிருந்தன இரவெல்லாம்
விழித்திருந்த சீரியல் பல்புச் சரங்கள்
சாலையோரச் செடியில் மலர்ந்திருக்கிறது
ஏதோ ஒரு பிஞ்சு விரல்களிலிருந்து நழுவிச்
சுருங்கிய சிவப்பு வர்ண பலூன்
வண்டிகளில் அடுக்கப்படுகின்றன
பிரிக்கப்பட்ட குடை ராட்டினங்களின் பாகங்கள்
ஆளரவமற்ற சாலையைக் கடந்து
வணங்கின என்னைப் பார்த்து
சிரித்தபடி தலையசைத்தார்
ஆசுவாசமாய் அமர்ந்திருந்த கருப்பராயர்”.
“நெருப்பு என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” என்றார் லா.ச.ரா. கவிதைகள் வாசிப்பதற்கு மட்டுமல்ல. கண்ணெதிரே காட்சியாகத் தோன்றுவதற்கும், சமயங்களில் சில முகங்களை ஞாபகப்படுத்துவதற்கும்.
” நீயே தொடங்கிய
அபத்தக் குறுஊடலின் முடிவொன்றில்
நீர் ததும்பும் விழிகளோடு
கனிந்த இரு பழங்களை
என் முன்னே நீட்டி
சிரித்தபடி கேட்கிறாய்
காயா? பழமா?’
இதில் சிரித்தபடி என்ற வார்த்தையை நீக்கினால் அழுத்தம் கூடும்.
இயற்கையின் காதலர் சிவக்குமார். கவிதைகளில் மரங்கள், பறவைகள், விலங்குகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.
கவிதை அடிக்கடி வனத்திற்குள் போய் வருகிறது. காலைக்கனவு கண்டு பதறிய புளியமரத்தை அணைத்துக் கொள்ள தனியாக ஒரு மனத்தைச் செய்ய வேண்டும்.
மயில்கள், அணில்கள், இருவாட்சிகள், மான்கள் என்று பலவும் கவிதைகளில் சதா திரிந்துகொண்டிருக்கின்றன.
அன்றாடம் நிகழும் புறக்காட்சிகளை ஆர்பாட்டமேயில்லாத வார்த்தைகளில், ஒரு புகைப்படக் கலைஞனின் நுணுக்கமான பார்வையுடன் கவிதைகளாக்கி இருக்கிறார்.
முன்னங்கால் ஊனமான மரக்குதிரையில் ஒளிந்திருக்கிறது பால்யம். பையன் திருடுவது தானறியாதது போலவே போகட்டும் என்று விழித்திருந்தும் விளக்கைப் போடாத அப்பா, இறந்தபின்னும் ஆவியாக வந்து பின்னால் நின்று புத்தகத்தைப் படிக்கும் அந்த வாசகர் என்று காட்சிகள் விரிந்து கொண்டே போகின்றன. தற்கொலை செய்யப் போகுமுன் சர்க்கரை நோய்க்கான மாத்திரையை நேரம் தவறாது போடுபவனைப் போல் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இடையிடையே வந்து போகின்றன.
திரைப்பாடல்களில் திளைத்தவர்களால் அதை வெளிப்படுத்தாமல் இருப்பது கடினம்.
தென்றல் உறங்கிய போதும், அன்பே அன்பே என்று பல பாடல்களில் கவிதைகள் மூழ்கித் திளைக்கின்றன. எல்லாவற்றிலும் உச்சம்
டி.எம்.எஸ் பாடும் வரிக்காகக் காத்திருந்து அவருக்கு முன் சுசிலாவுடன் டூயட் பாடத் துடிக்கும் அந்த கண்டக்டர். “இந்தப்பிள்ளைக்கும் மிச்சம் மீதி இல்லாமல் போய்விடுமோ” கண்ணதாசனின் குறும்பு. தினசரி வாழ்க்கையின் அழகியல் வெளிப்பாடுகள் சிவக்குமாரின் கவிதைகள்.
பிரதிக்கு:
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் 9095507547
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ. 120.