வால்டர் மிட்டியின் ரகசிய வாழ்க்கை – ஜேம்ஸ் தர்பர் – தமிழில் ஆர். பாலகிருஷ்ணன் :
Fantasize செய்பவர்கள், அவர்களுக்கான தனி உலகத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களது கடைக்கண் பார்வைக்காக எதிர்பாலினத்தினர் வரிசையில் நிற்பார்கள். இல்லை நிழல் நிஜமாகிறது ஷோபா போல், யாரையும் மன்னிப்பது/தண்டிப்பது குறித்த முழு அதிகாரம் பெற்றவர்கள். இதில் வருபவன் மனைவிக்கு பயந்த சராசரிக்கும் கீழானவன் எதையெல்லாம் பார்க்கிறானோ அதிலெல்லாம் சிறந்தவனாகிறான். Commanderஆக மருத்துவராக……… Firing squad முன் நின்றவன் தப்பித்துக் கொண்டானா தெரியவில்லை. தர்பரின் மெல்லிய நகைச்சுவை கதை முழுதும். எண்பது வருடங்கள் முன் எழுதிய கதை புரியாமல் போய்விடுமோ என்று விளக்கம் ஏதும் தரவில்லை தர்பர். நல்ல மொழிபெயர்ப்பு பாலகிருஷ்ணனுடையது.
பால்யப்பிரஸ்தம் – சத்யா G P:
இந்த நாள் அன்றுபோல் இல்லையே நண்பனே என்பதன் எதிர்த்திசையில் கதை நடக்கிறது. பால்யத்திற்குள் புகுதல் என்பது கூட ஒரு Fantasy தான். தாவணி போட்டு சிரித்துச்சிரித்து பேசிய பெண், நாடுத்தரவயதுத் தோற்றத்துடன் கவனிக்காதது போல் காலை லேசாக இழுத்து நடப்பாள். எல்லாமே மாறிவிடும். சத்யா ஒரு வித்தியாசமான கோணத்தில் இந்தக் கதையை எழுதியிருக்கிறார்.
பெண்கள் – மிருணால் பாண்டே – தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:
எட்டுவயதுப் பெண்ணே கதைசொல்லி. அவளது பார்வையில் பெண்களுக்கு நடத்தும் பாரபட்சங்கள் சொல்லப்படுகின்றன. எல்லாப் பெண்களுமே ஏதோ ஒரு துன்பத்தை அனுபவிக்கிறார்கள். மூன்று பெண்களைப் பெற்றவள், இந்த முறை ஆண்பிள்ளை பெற்றால் பிரசவத்தில் இருந்து விடுதலை என்று வேண்டுகிறாள். இந்தியப் பெண்களின் நிலை பற்றிய கதையில், எட்டுவயதுப் பெண்ணின் எதிர்க்குரல் தான் விசேஷம் இந்தக்கதையில். ஆண் குழந்தைக்கு இணையாக தன்மீது அம்மா கவனம் செலுத்த வேண்டுமென்று விரும்பு பெண். குழந்தைகள் தூங்கிய பின் குடும்ப விஷயங்களைப் பேசுவது, இருட்டறையில் பெண்கள் உடல்குறித்த பிரக்ஞையில்லாது இருப்பது என பல எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் இந்தக் கதையில். அனுராதாவின் சிறந்த மொழிபெயர்ப்பு. செய்யச்செய்ய மொழிபெயர்ப்பும் நேர்த்தியாகும் போலிருக்கிறது.
வாசனை& கன்னிமை – லாவண்யா சுந்தரராஜன்:
முதல் கதை புராணக்கதையில் ஒரு மாறுபட்ட கோணம். இரண்டாம் கதை Sci fi கதை. இரண்டு கதைகளையும் இணைக்கும் புள்ளி மாதவி. Mythical charactersஐ காலங்கள் தாண்டி நடமாட விடுவதின் தொடர்ச்சி இது. புராணப் பாத்திரம் பல நூற்றாண்டுகள் கழித்து வந்து F……idiots என்று கத்துவது சர்ரியல் தன்மையைக் கூட்டுகிறது. இரண்டிலுமே மொழிநடையில் மிகுந்த வித்தியாசத்தைக் கையாண்டிருக்கிறார் லாவண்யா. இரண்டு கதைகளிலுமே லாவண்யாவின் சாயல் தெளிவாகத் தெரிகிறது. என்றாலும் எனக்குப் பிடித்த லாவண்யா கன்னிமை போன்ற நவீனக்கதைகளை எழுதுபவர். என்ன ஒரு Force அந்தக்கதையில்!
ஆறுமுகத் தாத்தாவின் ஏழாவது முகம் – எஸ்.சங்கரநாராயணன்:
தாத்தா முதலிலேயே இறந்து போகிறார். அதன் பின் உறவுக்குச் சொல்வது, ஈமக்கிரியை, அஸ்தி கரைத்தல் என்று போகும் கதையில் கடைசியில் தாத்தாவின் இரகசியம் ஒன்று வெளிப்படுகிறது, இல்லை பாட்டியின் இரகசியமா? இயல்பான கதையோட்டம், நடப்புவாழ்க்கையை விட்டு கொஞ்சமும் விலகாத கதையமைப்பு, பழகிய கைகளின் பக்குவத்தில் மற்றுமொரு கதை.
குதிரைக்கொம்பு – சுப்பிரமணிய பாரதியார்:
குதிரைக்கு ஏன் கொம்பு இல்லாமல் போனது? புராணக்கதையை புரட்டிப் போட்டு ஒரு கதை, மெல்லிய நகைச்சுவையுடன் மகாகவியிடமிருந்து.
https://drive.google.com/file/d/1ibzlvuhodcPpD8c5QEt5yitFUnbzzfKh/view?usp=sharing