சரிவு – மயிலன் ஜி சின்னப்பன்:
சரிவு குழந்தையைக் கூட்டி வராதது மட்டுமல்ல, செந்தி, கோமளாவை விட்டு பால்ராசிடம் கேட்காதது ஒரு சரிவு, அமுசு மூலமாக பால்ராசு தான் கேட்கிறான் என்று புரிந்து கொள்ளாதது சரிவு, சைக்கிளில் போகிறவன் முழுத்தப்பு செய்திருந்தாலும் கார்க்காரன் மேல் குற்றம் சொல்லும் சமூகக்கூட்டு மனநிலையைப் புரிந்து கொள்ளாதது சரிவு. இது போல் எத்தனையோ சரிவுகள். பையனைக் கூட்டி வந்தால் பின்னாடியே பால்ராசும் வந்து உட்கார்ந்து கொள்வான் என்று கடுங்கோபத்திலும் முன்யோசனையாக நடந்தது மட்டுமே செந்தி மொத்தக் கதையிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும் ஓரேயிடம்.
மச்சான் வெட்கப்படுகிறான் என்று தெரிந்து சீண்டும் கொழுந்தியாள், கொழுந்தனை மூத்தபிள்ளையாக நடத்தும் அண்ணி, ஊர்முன் அப்பாவி வேஷம் போடும் பால்ராசு,
அமுசு இல்லை பால்ராசு தான் என்று ஊர்முன் சொல்ல விருப்பமில்லாத செந்தி, சிறுதொகையில் சரியாகப் போகும் கடன்கள் பெருந்தொகையில் ஏதோ ஒரு வகையில் மாட்டிக் கொள்வது என்று எல்லாமே இயல்பாக வந்திருக்கின்றன. தனிமனித, சமூக உளவியல் கதையில் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது. மயிலன் செய்நேர்த்திக்கலைஞன்.
வாக்குறுதி – அகரன்:
கதைகளில் ஒருவர் வந்து முன்கதையைச் சொல்வது முரகாமியின் கதைகளில் அடிக்கடி நடக்கும், அந்த முன்கதை மையக்கதையை விட அழுத்தமாக இருக்கும். அகரன் அதே பாணியைக் கையாண்டிருக்கிறார். வாக்குறுதி, கொடுத்ததும், கொடுக்கப்போவதும் இந்தக் கதையின் மையஇழைகள்.
ஈழத்தில் எத்தனைபேர் நிச்சயம் திரும்ப வந்து உன்னை மணமுடிப்பேன் என்று சொல்லிச் சென்று வராமல் போயிருப்பார்கள். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, பேரழிவு இரண்டும் ஏதோ ஓரிடத்தில் சந்திப்பதை இந்தக் கதை அழகாகச் சொல்லி முடிக்கிறது. அத்துடன் பாரிஸில் காலூன்றத் துடிக்கும் தமிழனின் யத்தனங்கள்.