ஆசிரியர் குறிப்பு:
ராமேஸ்வரத்தில் பிறந்து, மதுரையில் வளர்ந்து படித்தவர். தமிழக வருவாய்துறையில் சிரஸ்தராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எட்டு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள் ஆகியவற்றை ஏற்கனவே வெளியிட்டுள்ள இவரது சமீபத்தில் வெளிவந்த நான்காவது நாவல் இது.
பால்ய விவாகம் நடைபெற்று வந்த காலம். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த லலிதா என்ற பெண் ஒன்பது வயதில் விதவையாகி, ஹோமில் தங்கிப்படித்து, மாமனாரின் பணஉதவியால் மருத்துவம் படித்து டாக்டர் ஆகிறாள். இடையில் காதல் போல ஒன்று வந்து அவளைக் கனவுகள் காண வைக்கிறது. விதவைகளிலும் Virgin widowக்கள் என்று ஒரு பிரிவு உண்டு. அவளது மனஅவசங்களைச் சொல்வது இந்த நாவல்.
லலிதா தான் பேசுகிறாள். ஆனால் நாவல் முழுதும் பல பெண்களின் குட்டிக்கதைகள் வருகின்றன. அறுபதுகளில் கூட விதவாவிவாகம் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.பிராமணக் குடும்பங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. தி.ஜாவின் மழித்த தலையுடனான நார்மடிப் பெண்கள்! 1929ல் இந்தியாவில் குழந்தைத் திருமணத்தடை சட்டம் அமுலுக்கு வருகிறது. நமக்கு நாகரீகம் கற்றுக் கொடுத்தவர்களாகப் பலரும் நம்பும் வெள்ளைக்காரர் தேசமான இங்கிலாந்தில் இன்று கூட (2022) குழந்தைகள் திருமணம் (16 Years) சட்டவிரோதமானமானதல்ல.
டாக்டர் முத்துலட்சுமி நாவலில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வருகிறார். 1928ல் சென்னை மாகாண சட்டசபையில் குழந்தைகள் மணத்தை எதிர்த்து அவர் ஆற்றிய உரை நாவலின் இடையில் வருகிறது. பலவிதங்களில் முதலாவதான முத்துலட்சுமி, ஏராளமான பெண்களுக்கு ஆதர்ஸமாக விளங்கி இருக்கிறார். அவரது அண்ணன் மகனான ஜெமினி கணேசன் நாவலில் சில காட்சிகள் வந்து போகிறார்.
நல்ல கதைக்கரு, பல தகவல்களை நூல்களில் இருந்தும், வேறு வழிகளிலும் திரட்டியிருக்கிறார். லலிதா கனவிலும், நினைவிலும் காணும் Fantasies நன்றாக வந்திருக்கின்றன. சமூகத்திற்கும், உடல்தேவைக்கும் இடையே மாட்டிக் கொண்ட அந்தப் பெண்ணை நம்மால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நாவல் வடிவத்தில் இது முழுமையாகவில்லை.
Magdalene Laundries என்பது அயர்லாந்தில் முறையில்லாத உறவுகளில் கர்ப்பமான கத்தோலிக்க குழந்தைகளுக்கு பிரசவம் வரை வைத்திருந்து பின் வீட்டுக்கு அனுப்புவது. அதைப் பற்றிய கதையை Claire Keegan, Small things like these என்ற பெயரில் நாவலாக எழுதியிருக்கிறார். இந்த புக்கரின் இறுதிப்பட்டியலிலும் வந்துள்ளது. தமிழில் சரித்திர நிகழ்வுகளை வைத்துக் கதை எழுதுபவர்களுக்கு இந்த நாவலைப் பரிந்துரை செய்கிறேன்.
பிரதிக்கு:
காலச்சுவடு பதிப்பகம்
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2022
விலை ரூ.190.