புக்கர் விருதுகளில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று மேன் புக்கர் மற்றொன்று மேன் புக்கர் இன்டர்னேஷனல். முதலாவது நேரடி ஆங்கிலத்தில் எழுதிய நூல்களிலிருந்தும், இரண்டாவது வேறுமொழியில் எழுதப்பட்டுப்பின் ஆங்கிலத்தில் மொழிசெய்யப்பட்டவைகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இவ்விருதுகளில் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் பங்கு பெறலாம், கடந்த ஆண்டில் வெளியாகிய நூலாக இருக்கவேண்டும்.
புக்கர் இன்டர்னேஷனல் விருது புனைவிலக்கியத்திற்கான(நாவல், சிறுகதைகள்) உயரிய விருதாகக் கருதப்படுகிறது. நோபல் பரிசு போல் மர்மமான முறையில் நடைபெறாமல் எல்லாமே ஆரம்பத்தில் இருந்து வெளிப்படையாக இருப்பது இந்த விருதின் மதிப்பை அதிகரித்திருக்கிறது. 500,1000 பிரதிகள் விற்கத் திணறிய ஆசிரியர்களின் புத்தகங்கள் புக்கர் பட்டியலில் வந்ததும் லட்சக்கணக்கில் விற்றது இதற்குமுன் பலமுறை நடந்திருக்கிறது. புக்கர் இன்டர்னேஷனல் விருதுக்கு தேர்வு பெற மூலநூல் வேற்று மொழியில் எழுதப்பட்டு, கடந்த வருடத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, UKயிலோ அல்லது அயர்லாந்திலோ வெளியிடப்பட்டிருக்க வேண்டும். உலகின் பல நாடுகளின் நூல்கள் இந்த இரண்டு தேசத்தில் வெளியாகாத காரணத்தால் போட்டியிடும் தகுதியை இழக்கின்றன. இந்திய பதிப்பகத்தார், அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூல் உலக அளவில் போட்டியிடும் தரத்தைப் பெற்றிருக்கிறது என்று நம்பினால் இந்த இரண்டில் ஒரு தேசத்தில் இருக்கும் சிறிய பதிப்பகத்தாரின் மூலம் ஒரு நூறு பிரதிகளேனும் வெளியிடுவது உசிதமானது.
இவ்வருட புக்கர் இன்டர்னேஷனலுக்கு உலகெங்குமிருந்து, 135 புத்தகங்கள் தேர்வாகியிருந்தன. தேர்வுக்குழுவின் ஏழுமாதங்கள் தொடர்வாசிப்புக்குப்பின், இவற்றில் இருந்து , மூலம் பதினோரு மொழிகளில் எழுதப்பட்ட, பன்னிரண்டு நாடுகள், நான்கு கண்டங்களைச் சேர்ந்த, பதிமூன்று நூல்கள் நெடும்பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவ்வருட புக்கர் இன்டர்னேஷனில் சிறப்பம்சம், முதன்முறையாக இந்திய மொழிகளில் ஒன்றான இந்தி மூலத்தில் எழுதிய கீதாஞ்சலியின் Tomb of Sand புக்கர் இன்டர்னேஷனல் பட்டியலுக்குள் நுழைந்தது. நெடும்பட்டியலில் இடம்பெற்ற நூல்கள் குறித்து சுருக்கமான பார்வை:
- Heaven – Mieko Kawakami- translated by Sam Bett and David Boyd :
ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட நாவலில் எட்டு அத்தியாயங்கள் பாதிக்கப்பட்டவரின் கோணத்தில் பள்ளியில் நடக்கும் வன்முறை மற்றும் இருவரிடையே வளரும் நட்பு. எது சரி எது தவறு என்பது தனிப்பட்ட கோணத்தில் மாறுகிறது. ஒரே விசயத்தை பாதிக்கப்பட்ட Kojima சொல்வதற்கு முற்றிலும் வேறான பார்வையில் Momose சொல்கிறான். நாவலில் ஓரிடத்தில் ஒரு தந்தை தனது சிறுவயது மகளைக் கூட்டிச் செல்வதைப் பார்த்து Momose சொல்கிறான்.
” இவரது மகளை யாரோ ஒருவர் வல்லுறவு கொள்ளுவதை வீடியோவில் பார்க்கும் போது இவருக்கு ஏற்படும் மனநிலையும், யாரோ முகம் தெரியாத அதேவயதுப் பெண்ணுக்கு நடப்பதைப் பார்க்கையில் ஏற்படும் மனநிலையும் ஒன்றா? ” வன்முறை கூட பாதிக்கப்பட்டவருக்கும் அதை செய்பவருக்கும் ஒன்றல்லவே.
பதினான்கு வயதில் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக நடந்து கொள்ளும் குழந்தைகளின் கோணத்திலேயே மொத்தக் கதையும் நடக்கிறது. ஒருபுறம் பணமிருந்தால் போதும் என்று அன்பானவனை தூக்கி எறியும் பெண், இன்னொரு இடத்தில் பணமிருந்தாலும் அன்பில்லாத இடத்தில் இருக்கக்கூடாது என்று நினைக்கும் பெண் என்று இரண்டு வித்தியாசமான பெண்கள் வருகிறார்கள். பாண்டஸியில் மெல்லிய குற்றஉணர்வை ஏற்படுத்தும் செயல் நேரில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. பதினான்கு வயது சிறுவனின் பாலியல் உணர்வு தெளிவாகச் சித்தரிக்கப்படுகின்றது. இருநூறு பக்கங்களுக்குள், வாசகருக்கு நிறையக் கேள்விகளை மனதில் எழுப்பும்.
- Tomb of Sand – Geethanjali Shree- Translated by
Daisy Rockwell :
கணவனை இழந்து, மன அழுத்தத்திற்கு ஆளாகி, படுக்கையில் விழுந்த எண்பது வயதுப் பெண்ணைச் சுற்றி நகரும் கதை இது. திடீரென ஒரு நாள் காணாமல் போகிறாள், பின் கண்டுபிடிக்கப்பட்டு மகள் வீட்டிற்குப் போகிறாள். பின் ஒருநாள் பதின்வயது நினைவுகளை மீட்டெடுக்க பாகிஸ்தானுக்குப் (பிரிவினைக்கு முன் ஒன்றுபட்ட இந்தியா) போகவேண்டும் என்கிறாள்.
சாதாரண கதைக்கருவை. சொல்லிய விதம் பெரிதும் கவரத்தக்கது. பெரும்பகுதி கதையை, பெயர்சொல்லாத கதைசொல்லி பார்வையாளன் கோணத்தில் சொல்கிறார்.
எதையுமே ஒரு அலட்டிக்கொள்ளாத தொனியில் சொல்லும் மொழிநடை இந்த நாவலின் பெரிய பலம். வடஇந்தியாவில் ஒரு உயர்மத்தியவர்க்கக் குடும்பத்தைச் சுற்றிவரும் கதை, வாழ்க்கை, இறப்பு, அடையாளத்தைத் தேடும் பயணம் போன்றவற்றை உள்ளடக்கியது.
இந்தியத்தனம் (Indianness) என்பதே இந்த நாவல் பட்டியலில் இடம்பெற்றதன் முக்கிய காரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அம்மாவைப் பார்த்துக் கொள்வது மகனின் கடமையாவது, அவள் மகள் வீட்டுக்குச் சென்றபிறகு மகன் சோகத்தில் ஆள்வது, மாமியார்-மருமகள் உறவின் கூட்டல் கழித்தல்கள், ,மாமியார் சேலையை மருமகள் அணிந்து கொள்வது, பல காதலர்களுடன் சுதந்திர வாழ்க்கை வாழும் நாத்தனாரைக் கண்டு மருமகள் உள்ளுக்குள் பொறாமையும் வெளியே அசூயையும் காட்டுவது, சொல்லாமல் கொள்ளாமல் விருந்தினர் உறவினர் வீட்டுக்கு உரிமையுடன் வருகை தருவது, , மரத்தில் ஏறி மகள் வீட்டின் ஜன்னல் வழி அம்மா நடமாடுவதை மகன் பார்ப்பது, என்பது போல் இந்தியத்தனங்களால் நிறைந்த கதை இது. யயாதி கதை போல் புராணக்கதைகள் பல இடையிடை வந்து போகின்றன. நமக்கு சாதாரணமாக இருக்கும் விசயங்கள் வெளிநாட்டினருக்கு ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவன.
அம்மா-மகள் உறவு இந்த நாவலில் முக்கிய அம்சம். வயதான தாய், மகளுக்கு மகளாகிறாள். .ரோஸி என்னும் திருநங்கையுடனான அம்மாவின் நட்பு, மகளுக்குப் பொறாமையை ஏற்படுத்துகிறது. அம்மா இருக்கும் வீட்டில் காதலனுடன் உறவு கொள்ள பிடித்தமில்லாதது ஒரு நுட்பமான விசயம். அம்மாவின் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்ற திடீர் தீர்மானம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இப்போதும் அவள் மகளையே வழித்துணையாகத் தேர்ந்தெடுக்கிறாள். பல இழைகளைச் சேர்த்த நாவல் இது. நவீன நகரவாழ்வு, தொன்மை கதைகள், பெண்ணியம், மதம் இரு நாடுகளைப் பிரித்த கதை, குடும்ப உறவுகள், அழியாத காதல்……..இது போல் பல இழைகள்.
- Cursed Bunny by Bora Chung Translated from Korean by Anton Hur:
போராவின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான இதுவே புக்கர் நீண்ட பட்டியலுக்குள் வந்து இப்போது இறுதிப்பட்டியலுக்குள்ளும்
நுழைந்து விட்டது. பத்து கதைகள் அடங்கிய தொகுப்பில் அநேகமான கதைகளில் அமானுஷ்ய விசயங்கள் நடைபெறுகின்றன.
கதை சொல்லும் யுத்திகள் எதுவாகினும் பெண்கள் ஆண்களினால் துயரப்படுவது, கண்டு கொள்ளாமல் தனித்து விடப்படுவது அடிக்கடி நடக்கின்றன. முதல் கதையில் அந்தப்பெண் கழிவறைக்குப் போகும் போதெல்லாம் தலை மட்டும் வெளிவந்து அம்மா அம்மா என்கிறது. இரண்டாவது கதையில் PCODக்கு கர்ப்பதடை மாத்திரை சாப்பிட்ட பெண் ஆண்களுடன் உறவே இல்லாது கர்ப்பமாகிறாள். இரண்டிலும் அவர்கள் பிரச்சனையை அவர்களே தனியாக எதிர்கொள்கிறார்கள், மற்றவர்கள் இவர்களது தவறு என்று குறைசொல்ல மட்டுமே வருகிறார்கள்.
சாபம் என்ற கதைக்கருவும் இவர் கதைகளில் அடிக்கடி வருகிறது. முதல் கதை The Head திருமணத்திற்கு முன் கருச்சிதைவு செய்யப்பட்ட கருவின் சாபம். Cursed Bunny கதை முழுக்கவே சபிக்கப்பட்ட குடும்பத்தின் அழிவு. Scarsல் அநியாயமாகப் பலிகடா ஆனவனின் சாபம். Ruler of the Winds and Sandsம் ராஜா செய்த குற்றத்தின் சாபத்தை அனுபவிக்கும் இளவரசன் பற்றிய கதை.
Frozen Finger கதையின் முடிவு வரை வாசகர்களை யூகத்தில் வைத்திருக்கும் கதை. தொகுப்பின் நீண்ட கதை Scars Stephen King கதையை முற்றிலும் வேறு பாணியில் சொல்வது போல் இருக்கிறது.
நல்ல எதிர்காலம் இருக்கும் திறமை வாய்ந்த எழுத்தாளர் இவர்.
- After The Sun – Jonas Eika – Translated from the Danish by Sherilyn Nicolette Hellberg:
அறிவியல் மற்றும் சர்ரியல் சூழல் கொண்ட கதைகளே தொகுப்பில் முழுவதுமாக இருக்கின்றன. ஐந்து நீள் கதைகள் (அதில் ஒன்று ஒரே கதையின் இரண்டாம் பாகம்) பெரும்பாலும் தனிமையையும், யாருடனாவது இணைந்து கொள்ளும் ஆர்வத்தையும், காமத்தையும் கருவாகக் கொண்டுள்ளன. எளிதாக வாசிக்க முடியாத, எதையும் அதிகம் விளக்காத கதைசொல்லல், ஆனால் அதையும் மீறிச் செல்லும் வாசகர்களுக்கு உண்மையில் ஒரு விருந்து காத்திருக்கிறது. நான்கு கதைகளில் எது சிறந்த கதை என்று பலமுறை யோசித்தும் என்னால் சொல்ல முடியவில்லை. Jonasன் வெற்றி அங்கே தான் ஒளிந்திருக்கிறது.
நான்கு கதைகளுமே நேர்க்கோட்டில் ஒரே கதைக்கருவை விரித்துச் சொல்லப்படும் கதைகள் இல்லை. கதைகளை விட உணர்வுகளை அதிகமாக வாசகருக்குக் கடத்தும் முயற்சியாகவே இந்தக் கதைகள் தோன்றுகின்றன. சமகால அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இருக்கும் நெருக்கடிகளை அடிக்கடித் தொட்டுச் செல்கிறார். வழமைமீறிய நுட்பம் இவருடைய கதை சொல்லும் பாணியாக இருக்கிறது.
- A New Name Septology VI-VII – Jon Fosse- Translated from the Norwegian by Damion Searls:
வாசகர்களின் அதிகபட்ச கவனத்தைக் கோரும் நூல் இது. முற்றுப்புள்ளியே இல்லாத வரியில் எழுதப்பட்ட நாவல். அதிலும் தன்னிலையிலும், படர்க்கையிலும் மாறிமாறி கதை நகர்கிறது. அடுத்ததாக Asle என்ற ஓவியர் தன் வயதான காலத்தில், பழைய நினைவுகளை அசைபோடுவது போல் நகரும் கதையில் நிகழ்காலமும் கடந்தகாலமும் ஒன்றறக்கலந்து வருகின்றன. இவை மூன்றும் பரவாயில்லை. அதே ஊரில் இன்னொரு Asleயும் இருக்கிறார், அவரும் ஓவியர், அவர் கதையும் கலந்து வருகின்றது. (ஆசிரியர் விளக்கம் எதுவும் சொல்லாத போதும் இரண்டாவது Asle உண்மையில் Alter ego, ஆனால் Alter ego தனியாக வேறுஇரு பெண்களை மணமுடித்து விவாகரத்தும் செய்வது என்பது கொஞ்சம் அதிகப்படி இல்லையா! )
கதை என்று பெரிதாக எதுவுமில்லை. மொழிநடையும் கூட வாசகரை வெளியே தள்ளுவதற்கு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்யும் நடை. ஒரு மனிதனின் ஆழ்மனத்தில் ஒளிந்திருக்கும் உணர்வுகளை எல்லாம் வெளிக்கொணர நாவலை உபயோகப்படுத்தி இருக்கிறார். இந்த நாவலை மொழிபெயர்க்கும் நேரத்தில் எளிதாக நான்கு நாவல்களை மொழிபெயர்க்கலாம்.
- More Than I Love My Life – David Grossman – Translated from the Hebrew by Jessiva Cohen:
மூன்று தலைமுறைப் பெண்கள், பல வருடங்களுக்குப் பின்னர் பாட்டியின் தொன்னூறாவது பிறந்த தினத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். அம்மாவிற்கு விமானம் சில தினங்கள் தாமதமானதால், அவள் விருப்பப்படி அவளுடைய கதையையும், பாட்டியின் கதையையும் படம் எடுக்கிறார்கள். இருவரின் கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் மாறிமாறிப் பயணிக்கும் கதையின் கதைசொல்லி பேத்தி. தன்மையிலும், படர்க்கையிலும் துண்டுதுண்டாக வரும் கதை, சரியாகப் புரியவில்லை என்று யாருமே சொல்ல முடியாது, ஏனென்றால் இந்தக்கதை ஒரு மாயச்சுழல்.
பெண்களுக்கிடையேயான உறவு இந்த நாவலில் முக்கியமான விசயம். பாட்டி அம்மாவை சிறுவயதில் கைவிட்டது போலவே அம்மா பேத்தியை சிறுவயதில் கைவிடுகிறாள். பாட்டிக்கும் பேத்திக்கும் இடையே புரிதலுடனான நல்லுறவு நிலவுவதைப் போல் பாட்டி- அம்மா, அம்மா-பேத்தி ஆகியோரிடையான உறவுகள் இல்லை. மிகவும் பாதிக்கப்பட்ட உறவுகள்.
பலகாலம் ஒருவரை ஒருவர் அறியாது பிரிந்து இருந்தது கூட இதன் காரணம். எல்லாவற்றிற்கும் மேல் கைவிடப்பட்ட காயம் ஆறாமல் செம்புண்ணாக இருப்பது. ஆனால்
அம்மா-மகள் என்னும் உறவு எல்லா பேதங்களையும் வெல்வது, கொஞ்சம் அருகாமையில் சாய்ந்து கொள்ள தோளைத் தேடுவது. முப்பத்தெட்டு வயதுப்பெண் அம்மாவிடம் நீ எத்தனை மாதங்கள் எனக்கு தாய்ப்பால் கொடுத்தாய் என்று கேட்கும் கேள்வி காலஇடைவெளிகளை கைகளுக்குள் கசக்கி இல்லாமல் போக்குவது.
- The Book Of Mother – Violaine Huisman – Translated from the French by Leslie Camhi: 7/13
Violaineன் இந்த நாவல் ஒரு புனைவும் சுயசரிதையும் கலந்தது. அவரது அம்மாவின் கதையை எழுதிய பின் அதை எவ்வாறு திருத்தி அமைப்பது என்று தெரியாமல் சில வருடங்கள் திணறியிருக்கிறார். பின் முதல் குழந்தை பிறந்து சற்று இடைவெளியில் இரண்டாவது குழந்தையும் பிறந்தபிறகு இவருக்கு தாய் குறித்த புரிதல் உண்டாகியிருக்கிறது. அவர் தாய்மைக்கும் பெண்மைக்கும் சமன் செய்ய முடியாது போராடியது தெரிந்திருக்கிறது.
மூன்று பாகங்கள் கொண்ட நாவலில் ஆசிரியரே (அவரது அம்மாவிற்கு இரண்டாவது மகள்) கதைசொல்லியாக முதலிலும், மூன்றாம் பாகத்திலும் வருகிறார். முதல் பாகம், மகளின் கோணத்தில் அம்மாவின் மூர்க்கத்தைப் படம்பிடிக்கிறது. நான்கு மணமுறிவு, எண்ணிக்கையில்லா காதலர்கள் என்று பரபரப்பான வாழ்க்கை கொண்ட அம்மா காத்தரினின் வாழ்க்கை. தினம் ஒருவனை வீட்டுக்குக் கூட்டிவரும் பேரழகியான அம்மா. குடியால், போதை மருந்தால், சிகரெட்டால் மனச்சிதைவைக் கரைக்க அவள் செய்யும் முயற்சிகள். முதல் பாகத்தில் அவளது குறைகள் எல்லாம் திரும்பத்திரும்ப சொல்லப்பட்டு அவளைக் குறித்த பிம்பம் ஒன்றை நாம் வளர்த்துக் கொள்ளும் போது இரண்டாவது பாகத்தில் அவளின் வரலாறு அந்தபிம்பத்தை உடைத்தெறிகிறது.
- Paradais – Fernanda Melchor -translated from The Spanish by Sophie Hughes:
பணக்கார, தாத்தா, பாட்டி வீட்டில் வாழும், படிப்பு வராத, எந்நேரமும் பாலியல் காணொளிகள் காணும் வெள்ளைக்கார குண்டு பையனுக்கு பக்கத்து வீட்டில் இரு குழந்தைகள் பெற்ற சீமாட்டியின் மேல் மையல். பள்ளியை விட்டு விலகிய, வறுமையில் இருக்கும், அம்மாவிடம் தினம் திட்டும் அடியும் வாங்கும், ஐந்து வயது அதிகமான பெரியம்மா மகளினால் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்குள்ளாகும், பணியிடத்தில் கடுமையான வேலைகள் செய்ய நேரிடும், பதினாறு வயது கறுப்பினச் சிறுவனுக்கு எல்லாவற்றிலும் இருந்து தப்பிக்க வேண்டும். இரண்டு சிறுவர்களின் நோக்கமும் நிறைவேற அபாயகரமான திட்டம் ஒன்றைக் குண்டுபையன் தீட்டுகிறான். அதிலிருந்தே கதை ஆரம்பிக்கிறது.
போதை, வன்முறை, சுரண்டல் என்பதெல்லாம் Mexican நாவல்களில் அடிக்கடி வருகிறது. ஆனால் அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு வன்முறை இந்த நாவலில். மெல்சோர் நீண்ட வாக்கியங்களில், தான் கேள்விப்பட்ட மெக்ஸிகன் வாழ்க்கைக்குப் புனைவு வடிவம் கொடுத்திருக்கிறார். திருட்டுக்கு கார் வேண்டும் என்பதற்காக, டாக்ஸி டிரைவரை துப்பாக்கிமுனையில் கார்
bootல் கட்டிப்போட்டுக் காரைக் கடத்திப் போவது நாவலில் வருவது போலவே உண்மையில் நடந்த சம்பவம்.
- Love in the Big City – Sang Young Park- Translated from the Korean by Anton Hur.
இந்த நாவல் ஒரேபாலின இலக்கியம். நான்கு பாகங்கள், நான்கு கதைகளை ஒரு மையக்கதாபாத்திரம் இணைக்கின்றது. மும்பையில் இரண்டு ஆண்கள் சேர்ந்து வாழ்வது புருவம் உயர்த்துதலுடன் போய்விடும் ஆனால் அம்பாசமுத்திரத்தில் அவர்கள் நிம்மதியாக வாழமுடியாது. அமெரிக்காவில் மிக சர்வசாதாரணமான ஒன்று கொரியாவில்
விலக்கப்பட்ட கனி மீதான ஆர்வத்தையும், பயத்தையும் ஒருங்கே தருகின்றது.
யங் 1988ல் பிறந்தவர். அதனால் அவரால் இருபத்தோராம் நூற்றாண்டின் கொரிய இளைஞர்களின் வாழ்க்கையை எளிதாகப் படம்பிடிக்க முடிகிறது. மையக்கதாபாத்திரத்தின் பெயரும் யங் தான். ஆகவே சுயசரிதைக்கூறுகள் கலந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
- Elena Knows by Claudia Piñeiro- Translated from The Spanish by Frances Riddle:
அர்ஜென்டினாவில் இருந்து திரில்லர் நாவல்களே ஏராளமாக வருகின்றன. இந்த நாவலே கூட அந்த வகை தான். இதிலிருக்கும் மதசித்தாந்தம் இதற்கு இலக்கிய அந்தஸ்தை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கே நாம் திரில்லர்களை இலக்கிய வகைமையில் சேர்ப்பதில்லை.
கருக்கலைப்பு கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிரானது. அர்ஜென்டினா போன்ற முன்னேறிய நாட்டில் டிசம்பர் 2020ல் தான் இது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுகிறது.
கருச்சிதைவு செய்து கொள்வது இந்த நாவலில் முக்கியபங்கு வகிக்கிறது. கருச்சிதைவு செய்வதும், செய்யாததும் பெண்ணின் உரிமை, அதில் மதம் எப்படி கருத்து சொல்ல முடியும்? நாவல், பெண்ணின் உடல் என்ற கருத்தியலை மூன்று பெண்களின் மூலம் அணுகுகிறது. ஒன்று பார்கின்ஸன் பாதித்த உடல். நோய் உடலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அந்தப் பெண்ணை அவள் விருப்பத்திற்கு வாழவிடாது செய்கிறது. தற்கொலையும், ,கருச்சிதைவும் கத்தோலிக்க மதத்திற்கு எதிரானது என்பதால் இரண்டு பெண்கள் அவதியுறுகிறார்கள்.
அம்மா, மகள் உறவு அன்பு, வெறுப்பு
இரண்டின் ஆழத்திற்கும் செல்கிறது. கழிவறையில் மகள் உதவி இல்லாது கழிக்க முடியாத அம்மா, ஒவ்வொன்றிற்கும் மகள் முழுநேர தாதியாக இருந்தாக வேண்டும், வேலைக்கு ஆள் வைத்துக்கொள்ள வசதி இல்லை எனும்போது விரக்தியடைதல் எந்த உறவிலும் தவிர்க்க முடியாது. மகள் இல்லை என்று ஆனபின் மாத்திரை போட்டால் மட்டுமே சில மணிநேரம் கைகாலை அசைக்க முடியும் என்ற நிலைமையில் இருக்கும் அம்மா, தினம் திட்டிக்கொண்டாவது அவள் உயிருடன் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறாள்.
மகளுக்குச் சிறுவயதில் இருந்தே மழை பெய்தால் இடி மேலே விழும் என்ற பயம். அன்று மழைநாள். அவள் மழை பயத்தை மீறி வெளியே போயிருக்க வாய்ப்பேயில்லை. ஆனால் காவல்துறையில் இருந்து வேறுயாருமே அம்மா இந்தக் காரணத்தைச் சொன்னால் ஏற்றுக்கொள்ளவில்லை. கொலையாளியைக் கண்டுபிடிக்கக் கட்டுப்பாடில்லாத உடலைச் சுமந்து கொண்டு
இருபதுவருடம் முன்பு மகள் உதவிசெய்த பெண்ணிடம் கடனைத்தீர்க்கக் கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவ அம்மா செல்கிறாள். இது கொலையாளி யார் என்ற கதை என்று நினைத்தால் உங்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
11.Happy Stories, Mostly
Norman Erikson Pasaribu Translated from Indonesian by Tiffany Tsao
இந்தத் தொகுப்பு ஒருபாலினக்கதைகள். அநேகமான கதைகளில் ஆண்கள் ஆண்களை விரும்புகிறார்கள், பிரிகிறார்கள், மரணிக்கிறார்கள். இந்தோனேஷியாவில், எண்பது சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லீம் மக்கள் தொகை இருக்கும் தேசத்தில், ஆண்பெண் உறவே வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. எனவே இது மதரீதியாக, சமூகரீதியாகக் கடும் எதிர்ப்பை ஏற்படுத்துகின்றது. அடிப்படையில் ஓரினச் சேர்க்கையாளரான எழுத்தாளர் இந்த நூலின் மூலம் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் புனைவாகச் சொல்கிறார்.
Happy Stories என்ற தலைப்பு இருந்தாலும் ஒரு சோகம் கதைகள் முழுதும் எதிரொலிப்பது போல் தோன்றுகிறது. ஒருவேளை எல்லாமே ஓரினச்சேர்க்கையை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரங்களின் பெருமூச்சு காரணமாக இருக்கலாம். மீண்டும் மீண்டும் தாய் தன் மகனை அதிகமாக நேசிப்பது ஆனால் அவன் Gayஆக இருப்பதை வெறுப்பது நடக்கிறது. ஒருவகையில் எல்லாக் கதைகளுமே ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளவைதான். Sister Tulaவின் கதை தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை. கன்னியாஸ்திரிக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் எந்தவழியைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், பயணத்தின் இறுதிக்கட்டங்களில், தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டோம் என்றே தோன்றுகிறது.
- The Books of Jacob by Olga Tokarczuk – Translated from Polish by Jennifer Croft:
பதினேழாம் நூற்றாண்டில் கதை தொடங்குகிறது. இது புராதன போலந்து நாட்டின் மறக்கப்பட்ட கதை. யூதர்களுக்கு ஒரு மதம் இருந்தது, மொழி இருந்தது, உடை இருந்தது, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இருந்தது, சட்ட திட்டங்கள் இருந்தது, கட்டுக்கோப்பாக ஒரே குழுவாக இயங்கும் கூட்டு மனநிலை இருந்தது ஆனால் அவர்களிடம் இல்லாதது யூதர்களுக்கான தனிநாடு. போலந்தில் இருந்த யூதர்கள் வலுக்கட்டாயமாக கிருத்துவ மதத்திற்கு மாற்றப்படுகிறார்கள். இதற்கு நடுவே சுல்தான்கள் இஸ்லாமிற்கு மாறாவிடில் கொல்லப் போவதாக மிரட்டுகிறார்கள். அவர்களுக்காக ஒரு தூதுவன் இப்போதைய யுக்ரேனில் பிறந்து வருகிறான். இது Jacobன் கதை மட்டுமல்ல. பதினெட்டாம் நூற்றாண்டின் போலந்தின் கதை.
ஏழு பாகங்களாக, ஐம்பது வருடங்களின் கதையைச் சொல்லும் நாவலில் யூதர்களின் மதம், கிருத்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களின் கருத்துகள், மாயை, இறப்பு, யூதர்களின் பாதுகாப்பின்மை, நெறிமுறைகள் போன்ற நூற்றுக்கணக்கான
topics, ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்கள்
என்று விரியும் நவீன காப்பியம் இந்த நூல்.
பல கதைகள் கடிதங்கள், மேப், ஆவணங்கள், கவிதைகள் மூலமாகச் சொல்லப்படுகின்றன. Jacobன்இறந்த பாட்டியும் கதை சொல்கிறாள். அவள் நாவலின் முக்கியமான கதாபாத்திரம்.
இந்த நாவலை உருவாக்குவதற்கு முன் ஒரு அலமாரி நிறைய Jacob Frank குறித்த வரலாற்று நூல்களைப் படித்து, முக்கியமான சம்பவங்கள், உண்மைகளைத் தனியாக எழுதிக் கொண்டார். பழைய புத்தகங்களில் இருந்தும் குறிப்புகள் எடுத்திருக்கிறார். ஆயிரக்கணக்கான புகைப்படங்களின் பிரதிகளை எடுத்துக் கொண்டார். கதைக்காக ஏராளமான பயணங்கள், நாவல் நடக்கும் பகுதிகளில் எல்லாவற்றையும் பார்வையிட்டிருக்கிறார். Podalia, Ukrainன் பல கிராமங்கள், இஸ்தான்புல் போன்ற பல இடங்கள். ஆறுவருடங்கள் இந்த நாவலுக்கு எடுத்துக்கொண்டு 2014ல் போலிஸ் மொழியில் முதன் முதலாக இந்த நாவல் வெளிவருகிறது. நோபல்கமிட்டி இவருக்கு விருது வழங்குமுன் இந்த நாவலை இவரது உச்சகட்ட சாதனை என்று சொல்லியிருக்கிறது.
- Phenotypes – Paulo Scott – Transalated from Portuguese by Daniel Hahn:
இது முழுக்கவே நனவோடை யுத்தியில் எழுதப்பட்ட நாவல். அதற்கேற்ப நெடும் வாக்கியங்கள் முற்றுப்புள்ளி இல்லாது தொடர்கின்றன. கறுப்பினத் தந்தைக்கும், வெள்ளையினத் தாய்க்கும் பிறந்த சகோதரர்களில் மூத்தவனே கதைசொல்லி. அவனுடைய வெளிர் நிறத்தால் அவன் பிரேசில் சமூகத்தின் நிறவெறியில் இருந்து தப்பித்துக் கொள்கிறான். ஆனால் அவனது தம்பி கறுமையான நிறத்தால் சகலவிதமான
தவறான நடத்துதலுக்கும் ஆளாகிறான். பிரேசில் சமூகம், நேற்றுவரை அடிமையாக இருந்த கறுப்பினத்தவரை சமமாக நடத்த மறுக்கிறது. சிறுவயதிலிருந்து கதைசொல்லியின் வாழ்க்கை நினைவுகள் மீதேறிப் பயணமாகிறது.
நாவல் எண்பதுகளுக்கும் 2016க்கும் மாறிமாறிச் செல்கிறது. வெளிர் நிறத்தால் அவ்வளவாகக் கொடுமைகளை அனுபவிக்காத மூத்தவன் போராளி இயங்கங்களுக்கு ஆதரவாக, ஊரைவிட்டு வெளியே செல்வது, அரசாங்கப் பணியை உதறுவது என்று இருக்கையில், கருப்பு நிறத்தால் எல்லா இடர்களையும் அனுபவித்த இளையவன் ஊரிலேயே கூடைப்பந்து பயில்வித்து அமைதியான வாழ்க்கையை வாழ்கிறான். இரண்டு சகோதரர்களின் கதை மூலம் பிரேஸிலின் கதை சொல்லப்படுகிறது. கறுப்பாக இருப்பவன்,
‘ எப்போதும் Flash உபயோகிக்காமல் என்னைப் புகைப்படம் எடுக்காதே என்று சொல்வது போல் நுட்பமான மொழி நாவலெங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகெங்கும் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களுக்கிடையே, கீதாஞ்சலியின் இந்திய நாவல் புக்கர் இன்டர்னேஷனல் விருதை முதன்முறையாக வென்றிருப்பது நாம் எல்லோருமே பெருமை கொள்ள வேண்டிய விஷயம். துயரம், அடையாளம், பிரிவினை என்று பலவும் கலந்த நாவல் என்று தேர்வுக்குழு சொல்லியிருந்த போதிலும் இந்தியத்தனம் மிகுந்த புராணக்கதைகளை கலந்த இந்தப் பெரிய நாவல் உலகவாசகர்களுக்குப் புதிய உலகத்தை அறிமுகம் செய்து வாசிப்பின்பத்தைக் கூட்டியிருக்கிறது என்பதே உண்மை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் புக்கரில் தேர்வாகும் நூல்களில் முதலிடம் வகுப்பது அம்மா-பெண் இருவரிடையேயான உறவுச்சிக்கல். அதற்கடுத்து, புராணக்கதைகளின் மீட்டுருவாக்கம், உள்நாட்டுப் போர்கள், நாடு துண்டாகுதல் போன்ற கதைகள் பலரது கவனத்தை ஈர்த்து புக்கர் பட்டியல்களில் இடம்பெற வைக்கின்றன. இந்திய மொழிகளுக்குள் ஏற்படும் ஆரோக்கியமான போட்டி புக்கரிலும் தொடர வேண்டும், ஒரு தமிழ் நாவலோ அல்லது சிறுகதைத் தொகுப்போ புக்கர் விருதை வெல்ல வேண்டும். தமிழன் இமயமலையில் கொடியை நாட்டிய மாட்சிமை இலக்கியத்திலும் நேர வேண்டும்.