ஆவணங்கள் வங்கியில் மிகவும் முக்கியம்.
என்னுடைய முதல்நாள் வங்கிப்பயிற்சி வகுப்பில், நல்ல வாடிக்கையாளர், கெட்ட வாடிக்கையாளர் என்பதே கடன் கொடுப்பதில் கிடையாது. சூழ்நிலைகள் எல்லாவற்றையும் மாற்றவல்லது, எல்லாக் கடன் ஆவணங்களையும், அந்தக்கடன் வராக்கடன் ஆகப்போகிறது என்றால் எவ்வளவு கவனமாக தயாரிப்போமோ அப்படி செய்யவேண்டும் என்று சொல்லிக் கொடுத்த பாலபாடத்தை வங்கியில் வேலைபார்த்த கடைசிநாள் வரை
நான் மறக்கவேயில்லை. ஆனால் பலரும் கடன் ஆவணங்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை அன்றாட வேலைநெருக்கடிகளுக்கு நடுவில் கொடுப்பதில்லை. வழக்கறிஞர்கள் வாங்க வேண்டிய ஆவணங்கள் குறித்துக் கொடுத்த பட்டியலைக்கூட சரிபார்க்காமல் வாங்குவது பலமுறை நேர்ந்திருக்கிறது.
அந்தக் கடன் வாங்கிய வாடிக்கையாளர் ஒரு கிரிமினல். ஒரே பத்திரத்தின் ஒரிஜினலை ஒரு வங்கியிலும், இரண்டு நகல்களை இரண்டு வங்கிகளிலும் வைத்துக் கடன் வாங்கிவிட்டார். அதற்கு முன் அவரது மனைவியின் சகோதரிடம் கடன் வாங்கிய வகையில், பிணையாக இந்த சொத்தை எழுதிக் கொடுத்திருக்கிறார். வங்கியில் அடமானம் EM charge என்பதால் வில்லங்கச் சான்றிதழில் தெரியாது. மூன்று வங்கிகளுமே கடனை வராக்கடனில் எழுதி, தள்ளுபடியும் செய்து விட்டன. மற்ற இரண்டு வங்கிகள் அரசாங்க வங்கிகள் என்பதால் அதன் மேலாளர்கள் அதிக சேதாரமின்றி தப்பித்துக் கொண்டார்கள். எங்கள் வங்கி மேலாளர் பதவியிறக்கம் செய்யப்பட்டார். பலவருடங்கள் முன் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்த போது, குடும்பமாக அவர்கள் வரவேற்று உபசரித்ததை நான் மறக்கவேயில்லை.
நண்பரின் நண்பர் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் என்பது தற்செயலான பேச்சில் தெரிந்தது. நான் வங்கி மேலாளர் என்பது தெரிந்ததும்,
” நீங்கள் திருடன், பிச்சைக்காரன், போலீஸ் எல்லோருக்கும் கடன் கொடுக்க மாட்டீர்கள் இல்லையா’ என்று தான் ஆரம்பித்தார். பொதுவாகப் பதில் சொல்லும் நான் பொறுமையாக இருந்தேன்.
சற்று பேசியதும் சகஜமாகி நான் உங்களைப் புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன் என்று அவர் இளகிய நேரத்தில் என் கோரிக்கையை வைத்து விட்டேன்.
வரிசையாக நீதிமன்றம் விடுமுறை விடுவதற்கு முன், இரவு பத்துமணிக்கு காவல்துறையுடன் வாடிக்கையாளர் வீட்டுக்கு சென்றோம். வீட்டில் வைத்துக் கொண்டே இல்லை என்றார்கள். இரு காவலர்கள் உள்ளே சென்று கோழியை அமுக்குவது போல் தூக்கி வந்தார்கள். அவர் செல்வாக்குள்ளவர். அவருக்குப் போன் செய்வேன், இவருக்கு செய்வேன் என்று சொன்னது எதையும் காதில் வாங்கவில்லை.
நான்கு நாட்களோ, ஐந்து நாட்களோ உள்ளே இருந்தார். எனக்கும் செஞ்சோற்றுக் கடன் தீர்ந்தது.
Disclaimer : This series is not meant to be in competition with Padmaja Narayanan’s posts.