ஆசிரியர் குறிப்பு:
திருப்பூரில் பிறந்தவர். தற்போது கோவையில் வசிக்கிறார். இந்தி இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.
கவிஞர். எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். விமர்சகர். இவருடைய அம்மன் நெசவு, மணல்கடிகை, மனைமாட்சி ஆகிய நாவல்கள் முக்கியமானவை. இது சமீபத்தில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு.
இந்த நூல் தமிழினியில் வெளிவந்த வளரும் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. இரண்டு காரணங்களினால் இந்த நூல் முக்கியமானது. முதலாவது, ஒரு Seasoned writer, வளரும் எழுத்தாளர்களின் படைப்புகளைக் குறித்து எழுதுவது அரிது. அப்படியே எழுதினாலும், ‘தம்பி பரவாயில்லை, நல்லா வருவான்’ என்று முதுகைத் தட்டும் தொனி இல்லாது சொல்வது இன்னுமரிது. இரண்டாவதாக இதில் வாசகர் கோபாலகிருஷ்ணன் மட்டுமே இருக்கிறார், எழுத்தாளர் இருக்கும் தடம் கூட இல்லை.
புதிய தலைமுறை சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய கட்டுரைகள் இந்த நூல். ஆங்கிலத்தில் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தினார் என்று என்னால் யாரையும் சொல்ல முடியாது. புதுமைப்பித்தனின் செல்லம்மாள் சிறுகதை வெளிவந்து எண்பது வருடங்கள் ஆகப் போகிறது. செல்லம்மாள் காதல் கதையா? பெண்ணிய நோக்கில் அந்தக் கதையை அணுகினால் அதில் எங்கே காதல் இருக்கிறது? கணவரின் பணிவிடையை ஆனந்தமாக அனுபவித்து கோடிப் பச்சைப் புடவையுடன் போய்ச்சேர்ந்த செல்லம்மாளின் மீது பெண்ணிய சிந்தனைகளைப் புகுத்துவது பொருத்தமா? மையக்கதாபாத்திரம் ஒரு வார்த்தை பேசுவதில்லை, முதல்வரியில் இறந்து போகிறாள், என்ன மாதிரி கதை இது! சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால் இது செல்லம்மாள் பற்றிய பதிவல்ல. எண்பது வருடங்களுக்கு முன்னான இந்த ஆசான் மற்றும் பல மாஸ்டர்கள் தோளுக்கு மேல் நின்று பார்ப்பது ஒரு விதத்தில் அனுகூலம், மற்றொரு விதத்தில் பாதகம்.
இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் குறித்த என் பார்வையை இதில் குறிப்பிடுகிறேன். கோபாலகிருஷ்ணன் விளக்கமாக ஒவ்வொரு எழுத்தாளர் பற்றியும் குறிப்பிடுகிறார்.
தூயன் – ஒரு பிரச்சனையின் தோற்றம், வளர்ச்சி, தீர்வு என்பதான சிறுகதை வடிவம் தூயனிடம் இல்லை. கையாளும் மொழி, கதை சொல்லும் முறை, உள்ளடக்கம் ஆகியவற்றால், மற்றவர்களிடமிருந்து வேறுபடுபவை இவர் கதைகள்.
சுரேஷ் பிரதீப் – ஒளிர் நிழல் மூலம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியவர். பிரதிகளில் இடைவெளியை ஏற்படுத்தி நல்ல வாசகர்களை இடைவெளியை நிரப்ப வைப்பவர். இவருடைய பெரிய குறைபாடு தனக்கு அனுபவம் இல்லாத விசயங்கள் குறித்து, முறையான ஆய்வுமின்றி எழுதுவது.
சித்துராஜ் பொன்ராஜ் – அனாவசியமான வார்த்தைகளைச் சேர்க்காமல் நுட்பமாகத் தேர்ந்தெடுத்து கதைகளில் பயன்படுத்துபவர். சித்துராஜின் பல கதைகளில் Globalness கலந்திருக்கும்.
ராம் தங்கம்- திருக்கார்த்தியல் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர். விளிம்புநிலை சிறுவர்களின் உலகத்தை
விஸ்தாரமாகக் கதைகளில் கொண்டுவருபவர்.
கிருஷ்ணமூர்த்தி – புதிய பாணியில் கதைகளைக் கொண்டு செல்பவர். கதைகளில் பல பரிட்சார்த்த முயற்சிகளை செய்பவர். நான் அறிந்த வகையில் இவரது குறைபாடு Over description.
அனோஜன் பாலகிருஷ்ணன் – காமம் மட்டுமல்ல, எல்லா அகஉணர்வுகளையும் கதைகளில் எளிதாகக் கொண்டு வருபவர்.
புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர்.
கார்த்திக் பாலசுப்பிரமணியன் – எளிமையான வார்த்தைகளைக் கொண்டே ஆழமான கதைகளை எழுதுபவர். மிகை உணர்ச்சிகள் இல்லாது நுட்பத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை எழுதியவர். அசாதாரண நிகழ்வுகளில் நம்பகத்தன்மை இவரது கதைகளில் அதிகம்.
சுனில் கிருஷ்ணன் – இவரது அம்புப் படுக்கைக்கும் விஷக்கிணறு தொகுப்புக்குமே குறிப்பிடத்தக்க வித்தியாசத்தைக் காண முடியும். லித்தியம் கதையையும், அந்த மொழிநடையும் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது, இவரது கலைநேர்த்திகாலங்களில் கணிசமானவற்றைக் காந்தி சாப்பிட்டு விட்டார் என்பது.
மயிலன் ஜி சின்னப்பன் – அசோகமித்திரன் ஆதவனின் புதுமுகக் கலவை. உளவியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். எடுத்துக் கொள்ளும் கதைக்களங்களுக்கேற்ப இளகும் மொழிநடையைக் கையாள்பவர். சில கதைகளின் நீளத்தை மயிலன் குறைத்திருக்கலாம் என்று தோன்றியதுண்டு. கதைக்கான விசேஷமுடிச்சு பலருக்கு கண்ணில் படாது போகும் அபாயத்தை ஏற்படுத்துமது.
கமலதேவி- கதைகள் மூலம் ஒரு விளையாட்டை நிகழ்த்துபவர். முன்னும் பின்னும் இடைவெளியின்றி, எச்சரிக்கையின்றி நகர்ந்து காலமயக்கத்தை
ஏற்படுத்துபவை. நனவோடையை அதிகம்
உபயோகப்படுத்துபவர். ‘மாயை’ என்ற கதையின் நேர்த்தி மனதைக் கவர்ந்தது. அவசரத்தில் மிக சாதாரண கதைகளையும் எழுதுவது இவரது குறைபாடு.
திருச்செந்தாழை – திருச்செந்தாழையின் முதல் தொகுப்பையும் விலாஸம் தொகுப்பு வெளியிட்டு இப்போது கதைகள் எழுதுபவரும் முற்றிலும் வேறான ஒருவர். இவருடைய மண்டிக் கதைகள், சாலைத்தெரு கதைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவையில்லை. கவித்துவம் கலந்த மொழிநடை இவரது கதைகளில் கூடுதல் சிறப்பு.
செந்தில் ஜெகன்நாதன் – திரையுலகைப் பற்றிய கதைகள் எழுதும் செந்தில் வேறு, வேளாண்சமூகத்தைப் பற்றி எழுதும் செந்தில் வேறு. மாறுபட்ட யுத்திகளையோ, கதைக்களங்களையோ தேடாமல், நேர்க்கோட்டில் நல்ல சிறுகதைகளைப் படைக்க முடியும் என்பதற்கு இவரை உதாரணம் காட்டலாம்.
கனகலதா – சமீபத்தில் வந்த மிகச்சிறந்த சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்று இவரது சீனலட்சுமி. வித்தியாசமான பெண் கதாபாத்திரங்கள், வித்தியாசமான கதைக்களங்கள் கொண்டு தமிழ் சிறுகதை எல்லையை விரிவுசெய்பவை இவர் கதைகள். இளவெயில் சமகாலத் தமிழ்சிறுகதைகளின் முக்கிய கதைகளில் ஒன்று.
லாவண்யா சுந்தரராஜன் – இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை’ எனக்குப் பிடித்த தொகுதி. அதில், ‘சில்லறை’, ‘அப்பா’ போன்ற பல கதைகள் அறிமுக எழுத்தாளர் எழுதும் கதைகளேயல்ல. இப்போது எழுதும் கதைகளில் இன்னும் பரந்தவெளியில் பயணிக்கிறார். தனக்குத் தெரியாத எதையும் கதைகளாக்காமல் இருப்பது இவரது Success formula.
கோபாலகிருஷ்ணனின் இந்த நூல் ஒரு நல்ல முன்னெடுப்பு. வளரும் எழுத்தாளர்களுக்கு உற்சாகத்தை வழங்குவது. இந்தத் தொகுதியில் விடுபட்ட புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை அடுத்த தொகுப்புகளில் குறிப்பிடுவதாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இவர்களை வாசித்தவர்களுக்கு,
அவர்களது கதைகளின் தனித்துவம் குறித்த Capsule form கட்டுரைகள் ஒரு நினைவூட்டல்.
வாசிக்காதவர்களுக்கு இவை ஒரு Gateway, நல்ல அறிமுகமாக இருக்கக்கூடும்.
பிரதிக்கு:
தமிழினி 86672 55103
முதல்பதிப்பு ஜூலை 2022
விலை ரூ. 130.