திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையைச் சேர்ந்தவர். திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். ஏற்கனவே பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிய இவர், நீண்ட இடைவெளிக்குப் பின் எழுத ஆரம்பித்து, சென்ற வருடத்தில் யாவரும் பரிசு வென்ற குறுநாவலையும், Zero degree பரிசு வென்ற வாதி நாவலையும் எழுதியவர். இந்தக் குறுநாவல் கல்கி 1999 மினிதொடர் போட்டியில் முதல் பரிசை வென்றது.
Sidney Sheldenன் Doomsday Conspiracy தான் தன்னைத் திரில்லர் நாவல்கள் எழுத ஊக்கப்படுத்தியதாக Dan Brown ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ஒரு சக்திவாய்ந்த குழுவை, தனிநபர் எதிர்ப்பது என்பது கதைகளில் எப்போதும் வெற்றி பார்முலா. பிராந்தியம் குறுநாவல் (நெடுங்கதை?) அதைத்தான் செய்கிறது.
Parallel governments மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகம். உலகின் பணக்காரர் வரிசையில் உள்ளவர் நிறுவனத்தில் பணிபுரிந்த நண்பர் சொல்வார், அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக எதுவும் செய்ய மாட்டார்கள், ஒருவேளை செய்து விட்டால் மறுநாளே அது சட்டமாகிவிடும் என்று. மண்டித் தெருக்காரர்கள் இணைஅரசாங்கத்தை நடத்துகிறார்கள். மிகச்சிறிய நாவலில் மண்டித்தெருவின் உள்ளரசியல், வெளியிலிருந்து அச்சுறுத்தல் வருகையில் ஒன்றிணைந்து அவர்கள் செய்யும் வெளியரசியல் இரண்டையும் நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார்.
சலிப்பும் சோர்வும் ஏற்படுத்தும் அன்றாட வாழ்வில் நாம் வீரர், வீராங்கனைகளுக்கான தேடலில் ஆழ்ந்து போகிறோம். சமீபத்திய உதாரணம் பள்ளியில் கோஷம் எழுப்பிய பெண். சிறுநெருப்பு அடர்காட்டை எரிக்க வல்லது. யார் தூண்டிவிடுகிறார்களோ அவர்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டு, அப்பாவிகளைப் பலியாடுகளாக்குவது எப்போதுமே மதக்கலவரங்களில் நேர்வது. மதக்கலவரத்தை ,அதன் எதிர்வினையை அழகாகக் கையாண்டிருக்கிறார் நாராயணி கண்ணகி.
வாதி மொழிநடையிலும், உள்ளடக்கத்திலும் Matured novel. இது அதற்கு முன் எழுதப்பட்ட நாவல். இதிலும் Storyline மிக வலிமையானது ஆனால் மொழிநடையில் பாலகுமாரனின் சாயல் தெரிகிறது. இப்போது எழுதியிருந்தால் வேறுவிதமாக எழுதியிருக்கக்கூடும். இந்தக் கதை உங்கள் ஊரிலும் எப்போது வேண்டுமானாலும் நடக்க சாத்தியமுள்ள கதை. அதனாலேயே நாற்பது பக்கங்களுக்குள் சொல்லப்பட்டாலும் Powerful ஆக முடிந்திருக்கிறது.
Anyone can deal with victory. Only the mighty can bear defeat – Adolf Hitler.
பிரதிக்கு:
தேநீர் பதிப்பகம் 90474 84975
முதல்பதிப்பு ஜனவரி 2020
விலை ரூ. 55