தமிழில் சிறுகதையாசிரியர்களுக்கு எப்போதும் பஞ்சமேயில்லை. கிரிக்கெட்டில் கபில்தேவ்வின் விக்கெட்டுகள் மதிப்பு வாய்ந்தவை. அவருடன் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்கள் யாருமே அவரது தரத்தில் இல்லை. எதிரணியினர் செய்ய வேண்டியதெல்லாம் கபில்தேவை அடித்து ஆடாமல் கவனமாக விளையாட வேண்டியது மட்டுமே. மற்ற ஓவர்களில் ஸ்கோர் செய்யலாம். இதற்கு எதிராக , தமிழில் சிறப்பாக சிறுகதை எழுத அதிகப்படியான ஒன்று தேவைப்படுகிறது.
எழுத்தாளர்களுக்கு எல்லோரையும் போலவே தனி வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது. அதை எப்படி வாழவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் முழுஉரிமையும் அவர்களுக்கு மட்டுமே உண்டு. எவ்வளவு தீவிர வாசகனாக இருந்தாலும், எழுத்தாளரை முகநூலில் அதிகநேரம் செலவழிக்காமல் கதைகள் எழுதலாமே என்று கேட்பதற்கில்லை. அத்துடன் கதைகளை முகநூல் நேரத்தைக் குறைத்துக் கொண்டெல்லாம் எழுத முடியாது. அதற்கு உள்ளிருந்து உந்துதல் வேண்டும். எழுதாமல் வேறு எதையும் செய்யமுடியாது என்ற தவிப்பு வரவேண்டும். தமிழ்நதி நான் கவனித்த வகையில் ஒரிடத்தில் அதிககாலம் தங்காதவர். இது கூட எழுத்தைப் பாதிக்கும். அத்துடன் இவர் நல்ல வாசகி. வாசகி என்றால் பதின்மவயதுகளில் புத்தகங்கள் கொடுத்து, புத்தகங்கள் குறித்துப் பேசியிருந்தால், இவர் நம்மீது காதல் வயப்பட்டிருப்பார் என்று பலரும் திடமாக நம்பும் வகையிலான வாசகி. அதிகம் வாசிப்பவர்களால் அதிகம் எழுத முடிவதில்லை. அதிகம் எழுதி, அதிகம் வாசித்ததாக உங்களை நம்ப வைப்பவர்கள், அவர்கள் புனைவின் ஒரு கதாபாத்திரமாக உங்களை ஆக்கி இருக்கிறார்கள்.
தமிழ்நதியின் கவிதைகள் குறித்துத் தனியாகத் தான் எழுத வேண்டும். இவரது நாவல் பார்த்தனீயம் ஈழப்போர் சூழலை வைத்து எழுதப்பட்டிருந்தாலும் இன்னும் பரந்து விரிவான தளத்தில் பயணம் செய்வது. சிறுகதைகளை வெகு குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் கதைகள் எல்லாவற்றிலும் தமிழ்நதி கலந்து இருக்கிறார். எத்தனை சதவீதம் அவர் இருக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. வானதியோ, நித்திலாவோ, மாயக்குதிரையில் அந்த சூதாடும் பெண் எல்லாம் யாரென்று தெரிந்து கொள்ளப் பெரிதாக கற்பனாசக்தியை உபயோகிக்க வேண்டியதில்லை.
மாயக்குதிரை தொகுப்பிற்குப் பின் இரண்டு கதைகள் (நான் ஏதேனும் விட்டிருந்தால் அது அதிகபட்சம் ஒன்றிரண்டு இருக்கலாம்) எழுதி இருக்கிறார். கதைகளின் களங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. தாழம்பூ – Paranormal, நித்திலாவின் புத்தகங்கள்- வாசிப்பு வாழ்க்கையாவது, மாயக்குதிரை- சூதாடியின் மனநிலை, மனக்கோலம் – போரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதை, மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை- Survivor’s guilt, கறுப்பன் என்றொரு பூனைக்குட்டி- தாய்மை, காத்திருப்பு – கதையும் அதுவே, கடன்- பெருந்தன்மைக்கும் ஏமாளித்தனத்துக்குமுள்ள இடைவெளி, தோற்றப்பிழை- Fantasy, மெத்தப் பெரிய உபகாரம்- கட்டணமில்லா வேலைக்காரி, அப்பாவின் புகைப்படம்- ஆணின் கண்ணோட்டம், முதியோர் கிராமம் – Nostalgia.
போர், பேரிடர், பெருந்துயர் இவற்றிற்கும் கலைக்கும் ஏதோ கண்ணுக்குப் புலப்படாத தொடர்பு இருக்க வேண்டும், இல்லையென்றால் டால்ஸ்டாயால் உலகப்புகழ் பெற்ற நாவல்களை எழுதி இருக்க முடியாது, மரணத்தை முத்தமிட்டு வந்திராவிட்டால் தஸ்தயேவ்ஸ்கியின் கலை உச்சத்தைத் தொட்டிருக்காது. தமிழ்நாடு போன்ற அமைதியான சூழலில், ஒன்பது மணியில் இருந்து ஐந்து மணிவரை அதிகாரிகள் சொல்லும் வேலையை செய்து விட்டு, மாலைக்காப்பிக்குப்பின் கலாதேவியை இறுக்க ஆலிங்கனம் செய்தாலும் அதிகம் தூரத்தைத் தாண்ட முடிவதில்லை.
‘தாமரை’ கதையில் ஒரு பெண் சொல்வது இது ” எங்குபோனாலும் காயம்பட்ட மனத்தையும் கூட்டிக்கொண்டுதான் போகமுடிகிறது. புதிய இடத்தில் சற்று தணிந்தாற்போலிருந்த ஞாபகங்கள் ஓரிரு நாட்களிலேயே உள்ளுக்குள் குமிழியிடத் தொடங்கிவிட்டன.” இடம் மாறுதலில் அமைதி வரும் என்ற தேடலில் சதா அலைந்து திரியும் மனத்தில் கருமுட்டைகள் காத்துக் கொண்டேயிருக்கும். கலை நேர்த்தியுள்ள கதைகளுக்கு அதிக சாத்தியமுள்ள சூழல் அது.
நித்திலா பனிவிழும் இரவில் பீட்டர்ஸ்பர்க்கில் நிற்கும் நாஸ்தென்காவாக மாறுகிறாள். அவளது கணவனுக்கு மாமனாரின் காமவெறி போஸ்டரில் இருக்கும் ஆணின் அதே முகவமைப்பு. மூவாசைகளை விட புத்தகங்களின் மீதான போதை ஒருபடி உயர்ந்தது. புத்தகங்களின் காதலர்கள் நித்திலாவை ஆதுரமாக மெல்ல அணைத்து, உன்னைப் புரிந்துகொண்டேன் என்று சொல்ல முடியும்.
தலைவர்கள், உறவுகள் என்று எல்லாவற்றையும் புனிதப்படுத்தி அழகு பார்ப்பவர்கள் நாம். திரையில் ஆணும் பெண்ணும் செடிக்குப் பின்னால் சென்று பின் செடியாட்டும் பாசாங்கு நம்முடையது. தமிழ்நதியின் எழுத்தில் பாசாங்கு, புனிதம், புடலங்காய் என்று எதுவும் இல்லை. உதாரணத்திற்கு சொல்லப் போனால், மாயக்குதிரையில் காசினோவில் தோற்றவள், யாராவது ஐநூறு டாலர் தருகிறேன், வா என்றால் போயிருப்பேன் என்கிறாள். சூதாடியின் மனநிலை அது. அங்கே பால்பேதம், Ethics எதுவும் கிடையாது.
கடைசிவரை விளையாட வேண்டும். தமிழில் Gambling குறித்து வந்த சிறந்த கதையிது. சாந்தனுக்கு ராசாத்தியின் பரிதாப வாழ்க்கை தெரியும். அக்கா என்ற பிரியமும் உண்டு. ஆனால் தன் குடும்பம்…………. இவ்வளவு தான் வாழ்க்கை. இது தான் நிதர்சனம். எவ்வளவு சொன்னாலும் அக்காவுக்குப் புரிவதில்லை. அவளது கட்டுப்பாட்டில் அவளே இல்லை. ஆனால் ‘இனிப்பட எங்களாலை ஏலாது அக்கா’ என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிவது தான் கதைகள் இலக்கியமாகும் கட்டம். கதை படித்து நீங்கள் விடும் பெருமூச்சு அந்தக்கதைக்கான விமர்சனம்.(மனக்கோலம்).
மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை என்ற கதையும் முதியோர் கிராமமும் பேரழிவிற்குப் பலவருடங்கள் கழித்து வெளிநாட்டில் இருந்து வரும் பெண் பற்றிய கதைகள். மரணங்கள், அழிவுகள், சிதிலங்கள் எல்லாவற்றையும் குற்ற உணர்வோடு பார்வையிடும் கதைகள். ஆனால் முதல் கதை காட்சி விவரிப்பு, எதிர்கொள்ள முடியாத தயக்கம் ஆகியவற்றுடன் முடிந்து விடுகிறது. இரண்டாவது கதையில் பத்துவயதுப் பெண் அதே காட்சிகளுக்கு ஒரு இரண்டாம் பரிமாணத்தை வழங்குகிறாள்.
தமிழ்நதியின் கதையில் பெண் குழந்தை வீட்டுக்கு வந்து ஆசிரியையாக சுவரைச் சாத்தி எடுப்பது போன்ற அழகியல் நிகழ்வுகள் வந்து போகும், சிறுபெண்களுக்குக் காதலில் விழலாமா வேண்டாமா எனும் தடுமாற்றம் தெரியும், ஆனால் வாழ்க்கையின் இருண்டபக்கங்களைக் காணநேர்ந்த முதிர்ச்சியே இவர் எழுத்துகளைத் தனியாக அடையாளம் காண்பிப்பது. அடிக்கடி எழுதினாலும் எழுதாவிட்டாலும் தமிழ்நதியின் இருக்கை வேறுயாரும் அமராமல் அங்கேயே தான் இருக்கிறது.