மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஊரை மாற்றிக் கொண்டே இருப்பதில் இருக்கும் பல சிக்கல்களுக்கு நடுவே மற்றுமொரு பிரச்சனை, புதிதாகச் சேரும் கிளையில் அங்கிருப்பவர்களின் நம்பிக்கையைப் பெறுவது. மேலாளராகக் கிளையில் எந்நேரமும் இருப்பது சாத்தியமில்லை. சில விஷயங்களை நான் ஒப்புக்கொள்வேன் என்ற நம்பிக்கையில் அவர்கள் முடிவு எடுக்க வேண்டும். அதற்கு பரஸ்பர நம்பிக்கை வேண்டும். வேற்று மாநிலங்களில் பணியாற்றுகையில் அவர்களில் ஒருவனாவது இன்னும் சிரமம். நான் சேர்ந்த முதல்நாளிலேயே சொல்வது அலுவலகம் என்றில்லை உங்களது தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூடச் சொல்லலாம், என்னால் முடிந்தவரை தீர்த்து வைப்பேன் என்பதே.
மார்ச் மாதம் கிளைகள் Target achieve செய்வதில் இருப்பார்கள். அதே நேரத்தில் மனிதவளத்துறையில் மாறுதல் பட்டியல் தயாரிப்பதில் இருப்பார்கள். ஒரு மாலையில் கேபினுக்கு வந்தார் அந்தப்பெண். அவருக்கு வீட்டுக்குப் பக்கத்து கிளைக்கு மாறுதல் வேண்டும். அன்றாட அலுவல்களில் அவருக்குத் தெரியாத வேலைகளே இல்லை. கடன் ஆவணங்களில் அவர் கையெழுத்து அவ்வளவு தெளிவாக இருக்கும். நேரத்தைப் பார்க்காமல் வேலை செய்பவர். ஒவ்வொரு மேலாளரிடமும் சொல்வதாகவும் அவர்களும்
செய்வதாக உறுதியளித்துச் செய்யாமல் செல்வதாகவும் கூறினார். அவருக்கு அடுத்த வாரமே பக்கத்துக் கிளைக்கு மாறுதல் கிடைத்து விட்டது. அந்த ஒரே விஷயத்தால் மூன்று வருடங்கள் பணிசெய்தும் பெற முடியாத நம்பிக்கையை நான் அந்தக் கிளையில் உடனே பெற்றேன்.
அவருக்குப் பதிலாக வந்த பெண்ணின் முகத்தில் ஏதோ சோகம். நான் இந்தக்கிளை பிடிக்கவில்லை என்றால் மாற்றிக் கொள்ளலாம் (என்னைப் பிடிக்கவில்லையா என்று கேட்க முடியாது) என்று சொன்னதுக்கு அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று விட்டார். பத்து நாட்களுக்குப் பின் தயங்கித்தயங்கி வந்து தான் சொல்வதை கிளையில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று ஆரம்பித்தவர், சொன்னது ரொம்பவே அந்தரங்கமானது.
அவரது கணவரின் தம்பி அவரைப் பாலியல் தொல்லை செய்கிறான். அப்படியே வாலி படம். அவர் கணவர் அவன் சிறுவன், வதினா என்று பிரியம் என்கிறார். அப்படியில்லை என்று எனக்குத் தெரியும் என்ற போது அவர் குரல் உயர்ந்தது. இதில் நான் என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள் என்றதற்கு, காவல்துறை உயரதிகாரியிடம் சொல்லி ஒருவரை உள்ளே வைத்தீர்கள் அல்லவா, இவனை மிரட்டி விட்டுவிடச் சொல்லுங்கள் என்றார். அது கிரிமினல் கேஸ், இதை அப்படி செய்ய முடியாது, வேண்டுமெனில் அந்த நிகழ்வை அவனிடம் சொல்லி, நான் என் மேலாளரிடம் சொல்லி விட்டேன், அடுத்து தொந்தரவு செய்தால் தெரிவியுங்கள் என்று சொல்லியிருக்கிறார் என்று சொல்லுங்கள், சரியாகவில்லை என்றால் பார்ப்போம் என்றேன். ஒரு மாதம் கழித்து “மிக்க நன்றி சார், இப்போது தொந்தரவு இல்லை’ என்றார்.
அடுத்து அவரிடம் பேசும் போது நான் இப்போது தொந்தரவு இல்லையே என்று கேட்கவேயில்லை. பெண்களுக்கு உதவிசெய்து விட்டு அதையே நினைவுபடுத்திக் கொண்டிருந்தால் நாம் அவர்களிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறோம் என சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.