வங்கியில் கடனுக்கு ஜாமீன் (Guarantee) இடுபவர்கள் பெரும்பாலும் நம்புவது, கடனாளியிடம் பணம் இல்லாது போனால் தான் நம்மிடம் வருவார்கள் என்பது. கடனாளி கடனைக் கட்டவில்லை என்றால் இருவருமே பொறுப்பு. ஒருவேளை வங்கி கடனாளியை அணுகாமலேயே ஜாமீன் போட்டவரைக் கட்டச் சொல்லலாம். அவனிடம் கேட்காமலேயே என்னிடம் எப்படி வரமுடியும் என்று வங்கியைக் கேட்க முடியாது. வங்கி எப்போதும் யார் Vulnerable என்றே பார்க்கும்.
எண்பதுகளில் பெரும்பாலான வங்கிப் பயிற்சிக் கல்லூரிகளில் சொல்லப்படும் கேஸ் ஒன்று உண்டு. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஜாமீன் போட ஒத்துக் கொண்டதால், ஒரு தனிநபர்க்கடன் கொடுக்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் கடன் கொடுத்த அன்று கொஞ்சம் வேலையிருக்கிறது, ஜாமீன் கையெழுத்துக்கு மறுநாள் வரமுடியுமா என்றிருக்கிறார். அடுத்த நாள் அவர் வீட்டுக்குப் போய் கையெழுத்து வாங்கி விட்டார்கள். இப்போது போல் NPA norms அப்போது இல்லை. ஏழெட்டு மாதங்கள் கழித்தே கடனாளி கடனை ஆரம்பத்தில் இருந்தே கட்டவில்லை என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். வங்கி இருவருக்கும் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது. கிரிக்கெட் வீரரின் வழக்கறிஞர், “அவர் ஜாமீன் போடவில்லை, அறிமுகமே செய்திருக்கிறார், வங்கி கடன்பெறத் தகுதி இருக்கிறதா என்று பார்த்துத்தானே கொடுத்திருக்க வேண்டும்”
என்று சொல்லியதும் வங்கி வழக்குத் தொடர்ந்து விட்டது. வங்கி வரலாற்றில் முதலிலேயே நீதிமன்றம் தள்ளுபடி செய்த கேஸ் அதுவே. வங்கி கடன் கொடுத்த தினத்தில், கிரிக்கெட் வீரர் வெளிநாட்டில் இருந்தற்கான அத்தாட்சி பாஸ்போர்ட்டில் இருந்த முத்திரை. ஒரு ரூபாய் வசூல் செய்ய முடியவில்லை.
வாடிக்கையாளர் ஒருவர் வீட்டுக்கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். நல்ல வேலை, அதனால் கடன் கொடுப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர் மணமாகாத பெண். வங்கியின் கடன் கொடுக்கும் நடைமுறைப்படி அவருடைய தந்தையின் ஜாமீன் வாங்கிக் கொண்டு கொடுக்கச் சொல்லி அதிகாரியிடம் சொல்லியாயிற்று. இவர் இந்துப் பெண். இவர் காதலிப்பது மாற்றுமதத்தவரை. இந்த வீடு வாங்குவதே இருவரும் குடியேற. இவர் அப்பா ஜாமீன் போட முடியாது என்று கூறி விட்டார். வங்கி அதிகாரிகளுக்கு உள்ள ஒரு பழக்கம், அரைநாண் கயிற்றில் தங்கத்தைப் பார்த்து விட்டால் அதையும் கடனுக்குப் பிணையாகக் கேட்பது. நம் உஷார் அதிகாரி, நல்ல வேலையில் இருக்கும் வாலிபரின் ஜாமீனை வாங்கிக் கொண்டு, உறவு முறை- கணவர் என்று பதிந்து விட்டார்.
நான் அந்த ஊரில் இருந்து மாறுதலாகி அடுத்த ஊரில் இருக்கும் போது, தலைமை அலுவலகத்தில் இருந்து எனக்கு ஓலை வந்தது. பொறுப்பில்லாமல் கடனை கொடுத்ததற்கு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று. அப்போது Live in relationship சட்டப்படி, சமூக வழக்கப்படி ஏற்புடையது இல்லை. விசாரித்ததில் அந்தப்பெண்ணை மதம் மாறினால் தான் திருமணம் செய்ய முடியும் என்று சொன்னாராம் அந்த இளைஞர். கூடுதலாக அந்தப்பையன் வீட்டு நடைமுறைகள் எதுவும் இந்தப் பெண்ணுக்குச் சரியாகப்படவில்லை. பெற்றோரிடம் வந்து அழுததும் ஆற்றுப்படுத்திச் சேர்த்துக் கொண்டார்கள். வீட்டை அந்தப்பெண்ணின் பேரில் வாங்குவதென்றும், அந்தப்பையன் வங்கிக் கடனைக் கட்டுவதென்றும், அதற்குப் பதிலாக கையிலிருக்கும் ஐந்து லட்சம் பணத்தை இந்தப்பெண் அவனுக்குக் கொடுப்பதாகவும் அவர்களுக்குள் ஒரு Understanding. வங்கியில் பெரும்பாலான மேலாளர்கள், அடுத்தவர் கொடுத்த கடன் என்றால் வசூலிக்க முயற்சி எடுக்காமல் ஆயிரம் குறை சொல்வார்கள். விடுப்பு எடுத்துக் கொண்டு திரும்பவும் அந்த ஊருக்குச் சென்று அந்த இளைஞனைப் பார்த்தால் மிக செல்வாக்கான குடும்பம். ஐம்பது வருடமென்றாலும் கேஸ் நடத்துவார்கள். பெண் வீட்டில் பயந்தவர்கள். அலுவலகத்தில் அந்தபெண் பணத்தையும் வாங்கிக்கொண்டு என்னையும் நாசம் பண்ணிவிட்டான் என்று அழுதது. எல்லா நேரங்களிலும் நாம் உதவுவதற்கில்லை. வங்கியில் உங்கள் மேல் கிரிமினல் கேஸ் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்றேன். பத்துநாட்களில் பெண்வீட்டார் பணத்தைக் கட்டிவிட்டனர். வங்கிவேலையைக் காப்பாற்றிக் கொள்ள வாங்கிய சாபங்களில் இதுவும் ஒன்று.