Selby Comparative Literatureல் முனைவர் பட்டம் பெற்றவர். இதற்கு முன் இரண்டு அல்புனைவுகளை எழுதிய இவரது முதல் நாவல் இது, 2022ன் புக்கரின் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற நூல்களில் ஒன்று.
Sappho கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்து நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த கிரேக்கக் கவிஞர். உலகின் முதல் Feminist இவரே, உலகின் முதல் Lesbian இவரே. இந்த நூல் அவருக்குப்பின் வந்த, குறிப்பாக பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சில பெண்மணிகளின் வாழ்க்கைச் சிதறல்கள். அவர்களில் பலர் ஒருபாலினஉறவினர்.
பெண்களுக்கு ஓட்டுரிமை, அவர்களும் நாட்டின் குடிமக்கள் என்று அங்கீகரிக்கவே பல நூற்றாண்டுகள் ஆயிருக்கின்றன. 1901ல் பின்லாந்து முதல் நாடாகப் பெண்களுக்கு சமஉரிமை கொடுக்கிறது.
அமெரிக்காவில் 1920, இந்தியாவில் 1921, இங்கிலாந்தில் 1928, இத்தாலியில் 1946. இந்த சூழலில் பார்க்கையில் இந்தப் பெண்கள் எவ்வளவு சாதனைகள் செய்திருக்கிறார்கள் என்பது வியக்க வைக்கிறது. சிலர் பிரபலமானவர்கள், பலர் வெளிச்சம் மேலே விழாமலேயே கரைந்து போனவர்கள். எல்லோருக்கும் சேர்த்தே கதைசொல்லி நான் என்று உபயோகிக்காமல் “நாங்கள்” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். பெண்களின் பங்கு போரில், சமூகவாழ்க்கையில் எப்போதும் பேசப்படுவதேயில்லை.
ஆணைப் போல் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்ட பெண், போப்பையும், ஜார் மன்னரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொண்டு நாடுகடத்தப்பட்டு, பெயரை மாற்றிக் கொண்டு, முதல் மருத்துவராகிய பெண், பணியிடத்தில் சகதொழிலாளியால் பாலியல் வல்லுறவுக்காட்பட்டு, தந்தை அவனையே மணம் முடித்துவைக்க, சில வருடங்கள் கழித்துத் தொல்லை தாங்காமல் குழந்தையையும், கணவனையும் விட்டுவிட்டுக் கிளம்பிய பெண், ஆண் பாத்திரங்களில் நாடகத்தில் நடிக்கும் சாரா என்று அடக்கி ஒடுக்கப்பட்டு தளைகளை விடுவித்துத் தன்னை நிரூபித்த பெண்கள். இவர்கள் Helen of Troy இல்லை, போராளிகள்.
நீதிமன்றத்தில் பெண்கள் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, பெண்கள், கணவராக ஒத்துக் கொள்ளும் வரையில் மணவாழ்க்கையை விட்டு விலகக்கூடாது, தந்தை முடிவு செய்வதே திருமணம், சொத்துரிமை கிடையாது என்ற அடிமைச்சூழலில் நம்மை நிறுத்திக் கொண்டு பார்க்கையிலேயே இவர்களது கலகக்குரல்கள் இன்னும் உரத்து ஒலிக்கும்.
1880ல் இருந்து 1920 வரை இத்தாலி, லண்டன், பாரிஸ் ஆகிய இடங்களில் வாழ்ந்த
பெண்களின் Fragmented stories இந்த நாவல்.
அவர்கள் வாழ்க்கையின் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளில் இருந்து, இப்படித்தான் நடந்திருக்கும் என்ற கற்பனை கலந்த மீள்வரலாறு இந்த நாவல். Virginia Woolfன் கதை, கணிசமான அளவு நாவலில் சேர்ந்திருக்கிறது. இதில் வரும் பெரும்பாலான பெண்கள் ஒருபாலின உறவில் நாட்டம் கொண்டவர்கள்.
ஒரு பெண் எதனால் ஒருபாலின உறவில் ஈடுபடுகிறாள் என்பதைச் சொல்லவே முடியாது. Peer pressure, genetic influence, ஆண் வெறுப்பு, சமூகச்சூழல் என்பது போல் ஆயிரம் காரணங்கள். இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து எல்லாமே கிறிஸ்துவம் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகள். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் பாவமாக இருந்த ஒன்று, இருபது, இருபத்தோராம் நூற்றாண்டில் எழுந்த பெருத்த எதிர்ப்பால் இப்போது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. கிறிஸ்துவ மதம் மட்டுமில்லை, எல்லா மதங்களுமே மனிதர்களின் Sex விஷயத்தில் போராடித் தோற்றதே கடந்தகால வரலாறு.
நூறு பெண்களுக்கு மேல் இந்த நாவலில் வருகிறார்கள். Selby ஆங்கிலத்தின் Richnessஐத் தான் சொல்ல வேண்டியதற்கு சாதகமாகத் தெளிவாகப் பயன்படுத்தி இருக்கிறார். சிறுபெண்ணாக இருக்கும் போதிருந்து Woolfஐப் படித்து வளர்ந்தவர் Selby. “நாங்கள்”என்பது ஒரு கோரஸ், குரல்களின் சங்கமம். அதில் பலர் ஒரு ஆணின் வெப்பமூச்சு மேல்படுவதை விரும்பாதவர்கள். Virginia Woolfன் காதலிக்கு எழுதிய இந்த வரிகள் காதலைச் சொல்லவில்லை என்றால் பின் எது காதல்?
“I’d just put flowers in your room. And there you sit with the bombs falling round you.
What can one say – except that I love you and I’ve got to live through this strange quiet evening thinking of you sitting there alone.
Dearest – let me have a line…
You have given me such happiness”