ஆசிரியர் குறிப்பு:
அண்ணாமலை பல்கலையின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர். இவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் பல இலக்கிய இதழ்களில் வெளி வந்துள்ளன. அகுதாகவா மட்டுமன்றி, சொசெகி, பர்ரோஸ், போர்ஹே, பார்தல்மே ஆகியோரது சில படைப்புகளையும் மொழி பெயர்த்துள்ளார்.
சாதிக் ஹெதயாத்தின் இரண்டு கதைகள். முதல் கதை முழுவதும் சிம்பாலிஸம், இரண்டாவது கதை சர்ரியல் யுத்தி. நெருங்கிய நண்பனும் மணக்கப் போகும் பெண்ணும் செய்த துரோகம், பூனையை யாரோ (இவனுக்கு நேரடியாகக் கொல்வதில் விருப்பமில்லை) கொல்வதாக அடிக்கடி வருகிறது. அந்தப் பூனையே இவனது காதலியின் உருவகம் தான். மனநிலை பாதிக்கப்பட்டவன் சொல்வதில் எது உண்மை என்று எடுத்துக் கொள்வது வாசகர்களைச் சார்ந்தது.
பார்த்தல்மேயின் இரண்டு கதைகள். பலூன், தேவதூதர்களின் கதை இரண்டுமே Speculative fiction. பலூன் ஒரே பொருள் எவ்வாறு ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு கருத்தைப் பெறுகிறது என்பதைச் சொல்கிறது. அது ஒருவரின் சொந்த காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட பொருளாக இருந்தாலும் கூட.
போவின் கதை குற்றமுள்ள நெஞ்சம் செய்து கொள்ளும் கற்பிதத்தைச் சொல்கிறது.
ஜேம்ஸின் எலிகள் கதை Pure Horror/ghost story. அகுதாகவாவின் இரண்டு கதைகளில் ஒன்று கலை என்பது நாம் உணர்வது, அடுத்தவர் சொல்லிப் புரிந்து கொள்வதல்ல என்பதைப் பற்றியும், அடுத்தது ஜப்பானிய மோகினி குறித்தும் பேசுகின்றன.
பத்து கதைகள் கொண்ட தொகுப்பு இது. போவின் கதையைத் தவிர மற்ற எல்லாக் கதைகளுமே, வாசகர்கள் எண்களை இணைத்து சித்திரம் காணும் முயற்சி. ஏறு வரிசையில் இணைப்பதும், இறங்கு வரிசையில் இணைப்பதும், Random எண்களில் இணைப்பதும் மூன்று வேறு சித்திரங்களை வழங்குவது போல எண்ணற்ற சாத்தியங்களை வழங்கும் கதைகள். பலூனில் ஆளுக்கொரு விளக்கம் சொல்வது போல் இந்த மொத்தக் கதைகளுக்கும் பார்வைகள், வடிவங்கள் மாறுபடலாம். இவற்றை open ended stories என்று சொல்வதை விட Multiple interpretations stories என்று சொல்வது பொருந்தும். எல்லாவற்றையும் விட முக்கியமானது இது எல்லோருக்குமான கதைகள் இல்லை. சீரியஸ் இலக்கியங்களைப் படித்தவர்களே இரண்டு அல்லது மூன்று முறை படித்தால் மட்டுமே ஒரு வடிவத்தைப் பெற முடியும்.
வாசகப்பங்களிப்பை அதிகமாகக் கோரும் கதைகள். கணேஷ் ராம் வாசகர்களுக்குப் புதிய வாசிப்பனுபவத்தை வழங்க இந்தக் கதைகளைத் தேடியெடுத்து, திறம்பட மொழிபெயர்த்திருக்கிறார்.
பிரதிக்கு:
நூல்வனம் 91765 49991
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ.150.