ஆசிரியர் குறிப்பு:
திண்டிவனத்தில் வசிப்பவர். அரசுப்பள்ளி ஆசிரியர். கவிஞர்.கட்டுரையாளர். சொற்பொழிவாளர். இவருடைய முதல் நாவல் இது. சமீபத்தில் இன்னொரு நாவல் போட்டியில் முதல்பரிசை வென்றிருக்கிறார்.
கிராமத்திற்கு திரைப்படம் எடுக்க வந்திருக்கும் இளம் இயக்குனர் ரமேஷ். அழகும், அடக்கமும் ததும்பி வழியும் பவித்ரா, M A முடித்துவிட்டு, நோயாளி அம்மாவை கவனித்துக் கொண்டு ஏதோ கொஞ்சம் பணம் வருமென்று ரமேஷ் வீட்டிற்கு சமையற்காரியாக வருகிறாள். அருகிருப்பது எட்டியேயானாலும் அல்லிக்கொடி படர்ந்தே தீரும் என்ற தத்துவம் வேலைபார்க்கிறது. இதற்கிடையில் ரமேஷின் அத்தைபெண் தியா வந்து சேர்கிறாள். Yes, now the triangle is completed.
ஜனரஞ்சகக் கதைகளில் நான் கவனித்தவரை ஒன்று ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள். அல்லது ரொம்பவும் கெட்டவர்களாக இருப்பார்கள். தவறை உணர்ந்து திருந்துவார்கள். எதிர்பார்ப்பில்லாத அன்பை வாரி வழங்குவார்கள். மையக் கதாபாத்திரங்கள் மிக அழகாக, படித்த, பண்புள்ள மனிதர்களாக இருப்பார்கள். என் பள்ளி நாட்களில் இவர்கள் போலிருக்கும் யாராவது ஒரு பெண்ணைத் தான் மணமுடிக்க வேண்டும் என்று உறுதிகொண்டு, வயதாக ஆக வாழ்க்கை புரட்டிப் போட்டதில் சுத்தமாக மறந்து போனேன். இதில் வரும் பவித்ராவைப் பார்த்ததுமே பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்தன.
வெகுஜன வாசிப்புக்கு என்றிருக்கும் வாசகர் எண்ணிக்கை தீவிர இலக்கியங்களைப் படிப்போரை விட பலமடங்கு அதிகம். Stressfulஆன வேலைகளைச் செய்பவர்களில் பலரும் Light reading செய்வதைப் பார்த்திருக்கிறேன். சாம்பவி, ஒரு Formatஐ வைத்திருக்கிறார். திருப்பங்கள், சென்டிமென்ட், உணர்ச்சிக்குவியல்கள், கிளைமேக்ஸ், சுபம் என்பது. எழுதாமல் நூறு காரணங்களைச் சொல்லும் பெண்கள் மத்தியில் தொடர்ந்து எழுதும் சாம்பவி போன்றவர்கள் பாராட்டத்தக்கவர்கள். இவரால் வெகுஜன எழுத்திலிருந்து வெளியேறி வரமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அவர் பாணியில் தொடர்ந்து பயணம் செய்ய வாழ்த்துகள்.
பிரதிக்கு:
அகில்நிலா வெளியீட்டகம் 9840806724
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2021
விலை ரூ. 120.