ஊடறு றஞ்சி:

இலங்கையைச் சேர்ந்தவர். ஸ்விட்சர்லாந்தில் வசிப்பவர். களப்பணியாளர். ஊடறு உட்பட பல பெண்களின் ஆக்கங்களைத் தொகுத்து வந்த நூலின் தொகுத்தவர்.

புதிய மாதவி:

மும்பையில் பிறந்து வளர்ந்தவர். பெண்ணியச் செயற்பாட்டாளர். ஐந்திணை’, ‘பெண் வழிபாடு’, ‘மின்சார வண்டிகள்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

இவர்கள் இருவர் உட்பட, சமூகத்தில் ஒரு தனித்த ஆளுமையாக விளங்கும் முப்பத்தி மூன்று பெண்களின் அறிமுகக் குறிப்புகளுடன், அவர்களது நேர்காணல்களின் தொகுப்பு இந்த நூல்.
பெண் வெளி, பெண் மொழி, பெண்ணெழுத்து என்றெல்லாம் தனியாக இருக்கிறதா? இருபத்தோராம் நூற்றாண்டில்
வெளிப்பார்வைக்கு இல்லாதது போலத் தோன்றும். ஆனால் உலகம் முழுவதுமே, எல்லா நேரங்களிலுமே, ஏதாவது ஒரு பெண்ணுக்கு, அவள் பெண் என்பதாலேயே, உடல் அல்லது மனரீதியான வன்முறை அவள் மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதில் பல கருத்துகள் தொடர் விவாதத்துக்குரியவை. நான்கைந்து வரிகளில் முற்றுப்பெறாதவை.

வ.கீதா, ஆணாதிக்கம் ஒரு தலித் பெண்ணின் மீதும், உயர்சாதி என கருதப்படுகின்ற பெண் மீதும் ஒன்றல்ல என்றிருப்பது சிந்திக்க வேண்டியது. அது போலவே குடும்ப அமைப்பின் அடித்தளம் வன்முறை என்பதும் உண்மை. காதலித்து மணந்தவர்களே பின்னர் மனைவியை ஊதியமில்லா வேலையாளாக நடத்துகிறார்கள்.

அம்பையின் நேர்காணலில் ஆணெழுத்துக்கும் பெண்ணெழுத்துக்கும் என்ன வேறுபாடு என்று கேட்கப்படுகிறது.
அவரும் அடிப்படையில் வேறுபாடில்லை என்கிறார். உண்மையில் எந்த வேறுபாடும் இல்லை. தமிழ்சூழலில் பெருவாரியான பெண்கள் குடும்பக்கதைகள் எழுதுவதால் நாம் பெண்ணெழுத்து என்ற கற்பிதம் கொள்கிறோம். இன்னும் நுட்பமாகப் பார்த்தால் அவர்கள் உபயோகிக்கும் சிலவார்த்தைகள் பெண் என்று அடையாளம் காட்டக்கூடும். “கடிகாரம் காட்டும்
நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்” என்ற வரிகளை எழுதியவர் தாமரை என்பது முதல்தடவை கூகுள் செய்யாமலேயே எனக்குத் தெரிந்து விட்டது.

அம்பை- ” இலக்கியவாதி என்று கூறிக்கொள்ளும் சிலருடன் இணக்கம் ஏற்படாமல் இடைவெளி இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.”

புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்த வெற்றிச்செல்வி சொல்வது புதிய வாழ்க்கையை அமைக்கத் துடிக்கும் யாருக்கும் பொருத்தமானது. கடற்புலிகள் அமைப்பில் படகு கட்டுமானப்பணிகளில் இருந்தவர்கள் போர் முடிந்து அந்த வேலைக்கு செல்லாதது குறித்துக் குறிப்பிடுகிறார். துப்பாக்கி பிடித்தவர்கள் நாம் என்ற மனநிலை. அவர் சொல்வதில் மற்றொன்றும் இந்தியாவிற்கும் பொருத்தமானது. வரலாற்றைத் தவறாக எழுத ஆயிரம் பேர் இருக்கிறார்கள், உண்மையை எழுத ஓரிருவர்.

எழுத்தாளர் லறீனா சொல்வது போல் ஆரம்பத்தில் நன்றாக எழுதத் தொடங்கும் பலர், திருமணம், குடும்பம் என்றானதும், மெல்ல மெல்லப் பின்வாங்குவது உண்மை.
அது போலவே பாலியல் குறித்து எழுதுகையில் கணவன், உறவினர்களின் கட்டுப்பாடு பெண்களுக்கு மட்டுமே பெரும்பாலும் நேர்கிறது.

நான் பலகாலம் யோசித்ததை சர்மிளா ரெகே தெளிவாக விளக்கியிருக்கிறார். அம்பேத்காரின் பெண்ணிய சிந்தனைகள் குறித்து. அவரை தலித் போராளி அல்லது சட்டநிபுணர் என்ற கட்டங்களுக்குள் நாமே நிற்க வைப்பது தான் என்று தோன்றுகிறது.
அம்பேத்காரை பன்முக வாசிப்பு செய்தல் அவசியம்.

சந்தியா எக்னெலிகொடவின் நேர்காணல் என் வரையில் முக்கியமானது. வடக்கு, கிழக்கு, இந்து, முஸ்லீம், சிங்களம் என்று எல்லோருமே பாதிப்பை அடைந்தவர்கள் தான் என்கிறார். சிங்களவர்களிலும் தமிழருக்குக் குரல் கொடுத்துக் காணாமல் போனவர் இருக்கின்றனர். சுனிலா அபயசேகரவும் இலங்கை உளவுத்துறை சித்திரவதைகளை உறுதிப்படுத்துகிறார்.

வங்காரி மாத்தா, மாயா ஏஞ்சலோ உள்ளிட்ட முப்பத்து மூன்று பெண்கள். வெவ்வேறு துறையில் சாதனை புரிந்த பெண்கள். அவர்களது கருத்துகளோடு உடன்படலாம், விவாதம் செய்யலாம் ஆனால் Ignore செய்ய முடியாது. எல்லோரது குரல்களிலும் ஒரு பொதுமைத்தன்மை இருக்கிறது. அது எங்களுக்குரிய இடத்தைக் கொடுத்து, சகமனுஷி என்ற மரியாதையுடன் நடத்துங்கள் என்பது.

தலித்தியம், பெண்ணியம் போன்றவை மிகப்பரந்த வெளியில் பயணம் செய்பவை. பெண்ணியம் என்பது பாதிக்கப்படும் ஆணுக்கும் குரல் கொடுப்பது என்பது போலவே, தலித்தியமும் யார் சாதி வேறுபாடால் பாதிப்படைந்திருந்தாலும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பது.

உலகப் பெண் எழுத்தாளர்கள் பெரும்பாலும் சொல்வதைப் போலவே, பாமா, மலர்வதி உள்ளிட்ட பல தமிழ் எழுத்தாளர்களும் எழுதிப் பார்க்கலாம் என்று ஆரம்பித்ததாகவே சொல்கிறார்கள். மதில் மேல் அமர்ந்திருக்கும் பெண்கள் இதையே ஒரு Inspirationஆக எடுத்துக் கொண்டு எழுதித்தான் பார்ப்போமே என்று ஆரம்பிக்கலாம்.

I am a good listener. ஆனால் ஒருவர் கூறுவதைக் கேட்பது வேறு, பல பெண்கள் சொல்வதைக் கேட்பது வேறு. சில இடங்களில் அவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பது குறித்த புரிதலை எனக்குத் தந்தது. உங்கள் இளமையில் மறக்க முடியாத சம்பவம் போன்ற Tailor made கேள்விகள் இல்லாமல், ஆளுக்குத் தகுந்தாற் போல் கேள்விகள் மாறுகின்றன. ஆண் பெண் இருபாலாருமே அவசியம் படிக்க வேண்டிய நூல். படித்து முடித்ததும் எனக்கொரு சந்தேகம். இதில் வரும் பெண்களில் கணிசமானவர்கள் இடதுசாரி சிந்தனைகள் உள்ளவர்கள். ஏன் மற்ற சாரிப் பெண்களிடம் ஒரு சிந்தனை மரபு அரிதாகிப் போகிறது?

பிரதிக்கு:

காவ்யா 98404 80232
முதல்பதிப்பு 2019
விலை ரூ. 400.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s