ஆசிரியர் குறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழாயிரம் பண்ணை இவரது சொந்த ஊர். தற்போது காளஹஸ்தியில் பணிநிமித்தம் வசிக்கிறார்.
கருப்பட்டி மிட்டாய் என்ற பெயரில் ஏற்கனவே சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.
எழுபது வயது முதியவர் நாற்பது வருடங்களுக்கு முன் காதலித்த பெண்ணைப் பார்க்க, மனைவியையும் அழைத்துக் கொண்டு முட்டிவலியுடன் நடை பயில்கிறார். அவர் மனைவி கிண்டல் செய்கிறார். ஆமாம், எழுபதில் என்ன பொறாமை வரப்போகிறது?
‘நன்செய் மனமே ‘ such a beautiful story. ஆனால் சத்தம் நின்றிருந்தது என்பதுடன் கதை முடிந்து விடுகிறது. சிறுகதையாசிரியர்கள் Answer Key இல்லை. தீர்வுகளை, நியாயங்களைச் சொல்லத் துடிக்காதீர்கள். மனிதர்களின் கயமைகள் கதைகளில் வருவதை விட. குரூரமானவை.
அறிந்தும் அறியாமலும் கதைக்கரு தமிழில் புதிது. தன்னிலையில் சொல்லப்படும் தமிழ் கதைகளில் பெரும்பாலும் கெட்டவர்கள் வருவதில்லை.
பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பில் முதல் நான்கு கதைகளில் காதல் தோல்வி. மூன்றுகதைகளில் மணமான பின்னாலும் காதலி தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறாள். ஆழ்மனதில் ஏதோ கீறல்.
அவளும் நானும், வாழ்தல் இனிது, நன்செய் நிலமே, அறிந்தும் அறியாமலும் ஆகியவை தொகுப்பின் சிறந்த கதைகள். வித்தியாசமான கதைக்களங்களும் இந்தக் கதைகளில். Authentic கரிசல் மொழி இவரது பலம். இந்த வட்டார வழக்கில் எழுதுபவர் இப்போது குறைவு. இதுவெல்லாம் இவரது பலங்கள். எடிட்டிங் நிறைய செய்ய வேண்டியதிருக்கிறது இவரது பெரும்பாலான கதைகளில். அதே போல் கதைகள் முடிந்த பிறகும் தொடர்கின்றன.
பழிச்சொல் வந்த உடனேயே தற்கொலை செய்து கொள்கிறாள் என்றால் அவள் கணவன் சந்தேகப்பிராணி. அதற்குத் தனியாக இரண்டு வரி எழுத வேண்டியதில்லை. Overall நம்பிக்கையை அளிக்கும் கதைகளை இந்தத் தொகுப்பில் எழுதியிருக்கிறார். மேற்சொன்ன நான்கு கதைகளை இவரது Benchmarkஆக வைத்து, நல்ல கதைகளுக்காக காத்திருந்து எழுதினால் அடுத்த சிறுகதைத் தொகுப்பு பலரும் குறிப்பிடத்தக்க தொகுப்பாக அமையும்.
பிரதிக்கு :
பாலைமதி வெளியீடு 98417 00087
முதல்பதிப்பு மே 2022
விலை ரூ.100.