ஆசிரியர் குறிப்பு:
கம்பத்தில் வசிக்கிறார். இவரது சிறுகதைகள் புக்டே, சிறுகதை, செம்மலர் முதலிய இதழ்களில் வெளிவந்துள்ளன.
ஆதுரசாலை உள்ளிட்ட பல முக்கியமான நூல்களை எழுதிய அ.உமர் பாரூக் இவருடைய இணையர். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.
பள்ளி இறுதியில் நான் படிக்கையில், எனக்குத் தெரிந்த, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இளம்வயதில் இறந்ததும், அந்தப்பெண்ணை உடன் மற்றொருவர் மணந்து கொண்டார். ஏற்கனவே மணமான பெண்களை ஏற்றுக் கொள்வதில் அவர்கள் முற்போக்கானவர்கள். இந்துக்கள் என்றால் இன்று கூட ஒன்று செல்வாக்காக இருக்க வேண்டும் அல்லது பெரிதாக, அதிக வயது வித்தியாசம் போன்ற ஏதாவது ஒன்றை விட்டுத்தர வேண்டும். முற்போக்கும், பிற்போக்கும் ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல.
இஸ்லாமிய சமூகப் பழக்க வழக்கங்களை பெரிதும் ஆண்கள் வாயிலாகவே படித்திருக்கிறோம். பெண்கள் சல்மா, ஸர்மிளா, பாத்திமா போல வெகு சிலரே.
ஆயிஷா இறந்த பிறகு செய்யும் சடங்கு ஒன்றை இப்போதே முதல்முறையாகக் கேள்விப்படுகிறேன். இறந்தவர் முன் அழுதால் அல்லாவுக்குப் பாவியாகப் போக வேண்டும் என்பது இவர்கள் நம்பிக்கை. ஆனால் தமிழ் இந்துக்களைப் போலவே காலில் தங்கக்கொலுசு போடக்கூடாது என்பது, கணவனை இழந்தவள் நாற்பது நாட்களுக்குக் கட்டுப்பாடாக இருப்பது, செய்யாத தப்புக்கு மனைவி மன்னிப்பு கேட்பது என்று பலவிஷயங்கள் பொதுவாக இருக்கின்றன. தமிழர்களின் சொத்து.
” ஏம்மா இந்த சட்டம், ஹதீஸ் இத எழுதுனது எல்லாம் ஆம்பளைங்களாம்மா?” என்ற குரல் இன்னும் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பெண்களாய் இருக்கும் வீட்டில் இத்தா கட்டுப்பாடில்லை. கதைகள் எங்கும் பெண்களின் குரல்கள் தான் ஒலிக்கிறது. நசீபு என்றால் தலையெழுத்து. வயதான பூட்டியானாலும் பேரன் அடக்கி வைக்கும் பெண்களின் குரல்கள். அப்பாவிடம் நின்று பேச பயப்படும் பெண்களின் குரல்கள். ஆனால் பெண்கள் அவர்களுக்குள் எல்லாவற்றையும் பேசுகிறார்கள். பதினைந்து வயதுப் பெண் முப்பத்திஇரண்டு வயது ஆணை ஆரம்பத்தில் எப்படி சமாளித்தாள் என்பதில் இருந்து அவர்களின் அந்தரங்கங்கள் உரையாடலில் வருகின்றன.
ஏழு கதைகள் கொண்ட தொகுப்பு. பெண்கள் ஒடுக்கப்படுவதே பல கதைகளின் கரு. அப்பாவின் பிணத்தை பார்க்க அனுமதிக்காவிட்டாலும் பொறுமையைக் கடைபிடிக்கும் பெண்கள். இந்த சமூகம் இன்னும் நிறையவே முன்னேற வேண்டும்.
முதல் தொகுப்பு என்பது தெரியாத வகையில், சமூக,மத, அரசியல் விமர்சனங்கள் கதைகளில் வருகின்றன. ஆனால் கதைகள் இன்னும் Sharp ஆக வரவேண்டும். உதாரணத்திற்கு Gift of Magi கதையும் ஈமான் கதையும் அடிப்படையில் ஒன்று தான். முன்னதில் உயர்வுநவிற்சி, உணர்ச்சித் தூக்கல் என்பது இல்லை, அது போல எழுதப் பழகிக் கொள்ள வேண்டும். அநாவசிய விவரிப்பே இப்போதைய நவீன சிறுகதைகளுக்கு வேண்டியதில்லை. அதே போல் இன்னும் சிக்கலான கதைக்கருக்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். சரளமான மொழிநடை, இஸ்லாமிய வழக்குச் சொற்கள், தனக்குத் தெரிந்ததை மட்டுமே எழுதுவது ஆகியவை இவரது பலங்கள். தொடர்ந்து எழுத வேண்டும். ஒவ்வொரு கதை குறித்தும் தன் முகநூல் பக்கத்தில் என் இணையர் எழுதியது எனப்பகிரும் அ.உமர்பாரூக் பாராட்டுக்குரியவர்.
பிரதிக்கு:
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் 99404 46650
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2022
விலை ரூ. 120.