மலையாள எழுத்தாளர், ட்டி.டி. ராமகிருஷ்ணன், அவருடைய இலக்கிய வாழ்க்கையை சற்றே தாமதமாக நாற்பத்தி இரண்டாவது வயதில் ஆரம்பிக்கிறார். முதல் நாவலான ஆல்பா, அதன் வித்தியாசமான கதைக் களத்தாலும், உள்ளடக்கத்தாலும் பெருத்த வரவேற்பைப் பெறுகிறது. அதற்கடுத்த நாவலான ஃபிரான்சிஸ் இட்டிக்கோராவும் இணையான ஆதரவைப் பெறுகிறது. இதுவரை ஆறு நாவல்களை
வெளியிட்ட இவரது சில நூல்கள் இருபது பதிப்புகளைத் தாண்டியிருக்கின்றன, சில நாவல்கள் எழுபத்தையாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கின்றன. இன்று எழுதிக் கொண்டிருக்கும் மலையாள எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவராகி விட்டார் ராமகிருஷ்ணன்.
ராமகிருஷ்ணனின் நாவற்களங்கள், கேரளாவில் ஒரு குறுகிய வட்டத்தைச் சுற்றி வருபவையல்ல. இவரது முதல் நாவல் ‘ஆல்ஃபா’, ஒரு கற்பனைத் தீவில் நடைபெறும் கதை. ‘ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா’ , அமெரிக்கா, கேரளா, டெல்லி, எகிப்து, இத்தாலி, லத்தீன் அமெரிக்கா, இராக் என்று உலகம் சுற்றும் நாவல். மூன்றாவது நாவலான ‘சுகந்தி என்கிற ஆண்டாள் பெரியநாயகி’ இலங்கையையும், பரந்துபட்ட தமிழகத்தையும் களமாகக் கொண்டது. நான்காவது நாவலான ‘மாதா ஆப்பிரிக்கா’ ஒரு முழுமையான ஆப்பிரிக்க நாவல். ஐந்தாவது, ‘குருடர் செவிடர் ஊமையர்’ , காஷ்மீரை மையமாகக் கொண்டது.
ராமகிருஷ்ணனின் நாவல்களின் கதைக்கருக்கள் உண்மை நிகழ்வுகளை ஒட்டிப் புனையப்பட்டவை. ஆல்ஃபா மட்டுமே விதிவிலக்காக அதியூகப்புனைவு. ஒன்றில் காந்தளூர் சாலைப் போரும் ரஜனி திரணகம கொலையும் இணைகிறது, மற்றொன்றில் இடிஅமீனிடம் சிக்கிக் கொண்ட இந்தியப் பெண், வேறொன்றில் காஷ்மீர் தீவிரவாதி தூக்கிற்குப் பின் இருக்கும் நிகழ்வுகள், அடுத்து கேரள கணித மேதைகளுடன் இட்டிக்கோரா எனும் கற்பனை பாத்திரம் கலக்கிறான். எல்லாக் கதைகளிலுமே உண்மை நிகழ்வுகள், வரலாற்று மாந்தர்கள், கற்பனைப் பாத்திரங்களுடன் செம்புலப்பெயல் நீர் போல் சேர்கிறார்கள்.
நாவலுக்கான ஆய்வை எப்படி. செய்ய வேண்டும் என்று ராமகிருஷ்ணனிடம் கற்றுக் கொள்ளலாம். இவரது எல்லா நாவல்களுக்கும் பின்னால் ஒழுங்கமைக்கப்பட்ட, நீண்ட ஆய்வு இருக்கிறது. மாதா ஆப்பிரிக்காவில் பான்டஸிக்கூறுகள் நிறைய இருந்தாலும், பல நிகழ்வுகள் உண்மை. உதாரணத்திற்கு அமோஸ் டுடுவோளை ஆங்கிலத்தில் எழுதியதால் அதை ஆப்பிரிக்க இலக்கியமாகக் கருதாதது, வெள்ளையர்
ஸ்வாஹிலி மொழியில் எழுதினாலும், கருப்பர்கள் எழுதுவது மட்டுமே ஆப்பிரிக்க இலக்கியம் என்பது போல் நூற்றுக்கணக்கான உதாரணங்களை இவர் நாவல்களில் இருந்து சொல்லலாம்.
நாவலின் காலம், நூற்றாண்டுகளைக் கடப்பது இவரது நாவல்களில் இயல்பாக நடக்கிறது. ‘ப்ரான்ஸிஸ் இட்டிக்கோரா’, சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி ஆகியவை பல நூற்றாண்டுகளில் நடக்கும் கதை. ‘ஆல்ஃபா’ வில் காலம் மௌனமாக இருக்கிறது. ‘மாதா ஆப்பிரிக்கா’ இடிஅமீன் காலத்திலிருந்து இன்று வரை. குருடர் செவிடர் ஊமையர் மட்டுமே குறுகிய காலத்தில் நடக்கும் கதை.
பான்டஸி, மாயயதார்த்தம் ஆகிய யுத்திகளைத் தாராளமாகத் தன் நாவல்களில் பயன்படுத்துகிறார் ராமகிருஷ்ணன். ‘குருடர் செவிடர் ஊமையர்’ கதையை எழுத்தாளருக்குச் சொல்வது ஏற்கனவே இறந்து போன ஒரு பெண். சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகியில், தேவநாயகி விஸ்வரூபம் எடுப்பது போல் பல காட்சிகள். மாதா ஆப்பிரிக்காவில் பல இடங்களில் மாயயதார்த்தம் வருகிறது. உண்மையும், கற்பனையும் பிரிக்க முடியாமல் ஒன்றறக் கலந்து வாசகருக்கு அரைமயக்க நிலையை ஏற்படுத்துவதை அநேகமாக இவருடைய எல்லா நாவல்களிலும் பார்க்கலாம்.
நாவலின் வடிவத்திலும் நேர்க்கோடாக ஒரு கதை செல்வது இவரது எந்த நாவலிலும் இல்லை. மாதா ஆப்பிரிக்கா, ஒரு பெண் விட்டுச் சென்ற கதை, கவிதை, கட்டுரைகளின் தொகுப்பை நாவலாக்குவது.
ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா மின்னஞ்சல், குட்டிக்கதைகள், வாழ்க்கை வரலாறுகளால் நிரம்பியது. சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி, பாலியில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு அடங்கியது. எஞ்சிய நாவல்களிலுமே பாரம்பரியக் கதைசொல்லலில் இருந்து விலகி சமகால உலக இலக்கியத்தின் பரிட்சார்த்த நாவல் வடிவங்களைக் கையாளுகிறார் ராமகிருஷ்ணன்.
இவரது நாவல்களில் பேசப்படும் விஷயங்களுமே வித்தியாசமானவை. மாதா ஆப்பிரிக்கா இடிஅமீனை அவருக்கு நெருங்கிய பெண்ணின் கோணத்திலிருந்து பார்க்கிறது. இட்டிக்கோரா பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் கிருத்துவ குடும்பம் ஒன்றின் ரகசியம், நரமாமிசம் சாப்பிடுதல் போன்ற பலவிஷயங்களைக் கையாள்கிறது. ஆல்ஃபா, மனிதர்களின் நாகரீகத்தில் இருந்து விலகிச் செய்யும் பரிசோதனை முயற்சி. சுகந்தி….. இலங்கையில் உண்மையிலேயே கொலைசெய்யப்பட்ட ஒரு மனிதஉரிமைப்போராளியான மருத்துவரைச் சுற்றிப் புனையப்பட்ட கதை.
நாவல்களின் உள்ளடக்கம், பேசுபொருள் ஆகியவை மாறுவதற்கேற்ப மொழிநடையிலும் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடிகிறது. இவரது ஐந்து நாவல்களையும் மொழிபெயர்த்தது மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலன், ஒருவரே என்பதால் அது இன்னும் தெளிவாகத் தெரிகிறது.
ராமகிருஷ்ணனின் எல்லா நாவல்களுமே பல்லடுக்கு நாவல்கள் தான். ஏழாவது நாவலை அவர் எழுதிக் கொண்டிருக்கிறார். ஆறாவது நாவலைக் குறிஞ்சிவேலன் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். ராமகிருஷ்ணனின் நூல்கள் உலக வாசகர்களின் நடுவே கொண்டு போய் சேர்க்க வேண்டியவை. இட்டிக்கோரா எழுதிய இவரை இந்தியாவின் டான்ப்ரவுன் என்று சிலர் குறிப்பிட்டனர். எனது பார்வையில் டான்ப்ரவுனிடம் ஜெட்வேகமும், இவரிடம் இலக்கியநுட்பமும் சற்று அதிகம். என் தேசத்தவர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும், சிறியபட்டியல் எழுத்தாளர்களில் ராமகிருஷ்ணனும் இருப்பார்.