ஆசிரியர் குறிப்பு:
வரைவு அலுவலராகத் தமிழக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். 1988ல் கணையாழியில் எழுத ஆரம்பித்து, முப்பது வருடங்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருப்பவர். மூன்று குறுநாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள் இவர் இதுவரை எழுதியவை. இது சமீபத்தில் வெளிவந்த நாவல்.
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற ராகுல் சாங்கிருத்யாயனின் நூல் எல்லோரும் வாழ்வில் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டிய நூல். அதை விடுத்து ஒரு Laymanன் மொழியில் சொன்னால், ஆதியில் பாரதத்தில் பல்லாயிரம் தெய்வங்கள். மதம் என்ற ஒன்று இல்லை. ஒரிஸ்ஸாவில் (இந்துக்)கோயில் ஒன்றில் புத்தரை எட்டாவது அவதாரமாக்கி சிலை இருக்கிறது. எல்லாக் கடவுளர்களையும் ஏற்றுக் கொண்ட (சமண சைவப்போரின் போதும் இரண்டு கடவுளர்களையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஏராளம்) மக்களின் நடுவே முகலாயர்கள் உள்நுழைகிறார்கள். அவர்கள் ஆட்சி நடக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் பேரிழப்பை ஏற்படுத்திய கலவரங்கள் இல்லை. ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி இந்து முஸ்லீம்களை நிரந்தரமாகப் பிரிக்கிறது. இந்துமதத்தின்
வர்ணாசிரமம், ஜாதி வேறுபாடுகள், மதத்தைப் பரப்புவதையே தொழிலாகக் கொண்ட ஆங்கிலேயர் பல இந்தியர்களை கிருத்துவராக்க ஏதுவாகிறது. இப்போது ஒரு தாய் மக்கள், மூன்று பெரிய மதங்களில் இருந்து கொண்டு ஒருவருக்கொருவர் வெறுப்பை வளர்க்க ஆரம்பிக்கின்றனர்.
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரனின் இந்த நூல் மேலோட்டமாகப் பார்த்தால் ஜமாத்தின் மேல்மட்ட ஊழல்கள், இயக்கங்களின் தூய்மைப்படுத்துதல் என்ற பெயரில் முஸ்லீம்களுக்கு இடையே நடக்கும் குழப்பங்கள், முஸ்லீம் லீக்கின் அரசியல் நிலைபாடுகள், இந்து பெரும்பான்மையுள்ள நாட்டில் இஸ்லாமியர் பாதுகாப்பில்லாதவர்களாக உணர ஆரம்பிப்பது, பாபர் மசூதி இடிப்பு என்று பல விமர்சனங்களை முன் வைக்கிறது. ஆனால் அடியாழத்தில் இந்த நூல் Muslim Literature.
ஹதீஸ்களில் கூறப்பட்டதன் சாரங்களை இந்த அளவிற்கு எடுத்தாண்டிருப்பது இதற்கு முன் எந்த நூலிலும் நான் படித்ததில்லை.
திப்புநகர் எனும் கற்பனை ஊரில் (பெங்களூரில் இருப்பது அல்ல) , முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில், பல குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளே இந்த நாவல். அவர்களது பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கலாச்சாரம், வழிபாடுகள் ஆகியவை முக்கியமாக வருகின்றன. தூய்மை வாதம், தப்லீக் ஜமாத் போன்றவை மற்ற மதத்தினரிடையே பிரிவினைகள், காயங்களை ஏற்படுத்தியது போலவே இஸ்லாமிலும் ஏற்படுத்துகிறது. அரபியில் புரியாத மொழியில் பேசுவதை ஒப்பிப்பது, பெண்கள் முகத்தை முழுதாக மறைப்பது, போன்ற பல முரண்களும் பேசப்படுகின்றன.
மதத்தின் பல கொள்கைகளை விளக்க நாவலை உபயோகித்தாலும் இவருக்குள் இருக்கும் இலக்கியவாதி சார்பின்மையின் பக்கம் சாய்கிறார். ராஜா என்ற கதாபாத்திரத்தை, முஸ்லீம்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பிரச்சனை, இந்து மதம் போல உங்கள் மதத்தில் சுதந்திரம் கிடையாது என்று எதிரணி சார்பாக பேசவைக்கிறார்.
நாவலில் பிரச்சாரம் தூக்கலாக இருக்கிறதோ என்று சந்தேகப்படுமளவிற்கு இஸ்லாமியக் கருத்துகள் அதிகமாக வந்திருக்கின்றன. கொஞ்சம் அவற்றைக் குறைத்து நாவலின் நீளத்தை அதிகப்படுத்தி இருக்கலாம். அத்துமினாவின் மனைவியும் ஓடிப்போனதும் ஒரே மும்தாஜா என்பது போன்ற சில இடைவெளிகள் நாவலில் இருக்கின்றன.
இந்த நாவல் ஒருவரின் கதையல்ல, ஒரு சமூகத்தின் கதை. பலரது வாழ்க்கைச் சிதறல்கள். தாய்நாட்டில் நாம் யார் என்ற அடையாளச்சிக்கல் ஏற்படும் சூழலில், இஸ்லாமிய மதத்துக்குள் இருக்கும் பல நடைமுறைச் சிக்கல்களை பல உள்ளடுக்குகளாக நாவலில் கொண்டு வந்திருக்கிறார். மிக நல்லதொரு முயற்சி. வடக்கே இன்றும் கூட இந்துப் பெண்கள் பிற ஆடவரைப் பார்த்து தலையைப் புடவையால் மறைத்துக் கொள்கிறார்கள். மதுரையில் அழகர் திருவிழாவிற்கு அத்தனை இஸ்லாமியப் பெண்கள் வருவார்கள். மதங்களை களைந்துவிட்டு அடுத்த தலைமுறையேனும் வெளியே வரவேண்டும்.
உணர்வால் நாம் மீண்டும் ஒன்றாக வேண்டும்.
பிரதிக்கு:
எழுத்து பிரசுரம் 89520 61999
முதல்பதிப்பு ஜூலை 2022
விலை ரூ. 320.
என் நாவல் குறித்து மிகச் சிறப்பான விமர்சனம் தந்தமைக்கு அன்பும் நன்றியும் சார்.
LikeLike