ஆசிரியர் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனைப்பட்டியில் பிறந்தவர். தஞ்சாவூரில் வசிக்கிறார். அரசியல், இலக்கிய விமர்சகர்.
கவிதை, நாவல், சிறுகதைத் தொகுப்பு என்று இதுவரை பத்து நூல்களை வெளியிட்டுள்ளார். இந்த நூல், நாவல் வடிவில் புராணக்கதையின் மீட்டுருவாக்கம்.
புதுமைப்பித்தன் சாபவிமோசனத்தில் இராமாயணக் கதையை மாற்றினார். கடவுளிடம் கந்தசாமி.பிள்ளையை சந்தா கேட்கவைத்தார். எமன் கிழவி இட்ட வேலையைச் செய்வான். புராணங்கள் வரலாறு இல்லை. தகவல்களுக்காக நீண்ட ஆய்வு தேவைப்படுவதில்லை. Yuganta நாவலில் கார்வே பெண்ணின் பார்வையில் திரௌபதி தன்னை அதிகம் காதலித்தவனை தான் அதிகம் நேசிக்காததற்கு கடைசி கணத்தில் வருந்துவாள். இந்த நாவலும் அவர்களது கடைசி தருணங்களில் ஆரம்பித்து, திரௌபதியினால் புதிய பாதையை வகிக்கிறது.
பாண்டவர் மீண்டும் மண்ணுலகிற்கு வந்து தேசாந்தரிகளாய் நூற்றாண்டுகள் திரிவதும் இருபத்தோராம் நூற்றாண்டில் திக்குத் தெரியாமல் திணறுவதும் சுவாரசியமான கதைக்களம். அது போலவே, மகாபாரதக் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் பெயர் கொண்டு இக்காலத்தில் பிறப்பவர்கள் அவர்களை விட அல்லல்பட்டு அலைபாயும் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
சிகண்டினி ஏமாற்றப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறாள். அர்ஜூனன், கிருஷ்ணன் இப்போதும் நட்பாக ஆனால் செல்வாக்கானவர்களுக்கு பெண்களை கூட்டிக் கொடுப்பவர்களாக வருகிறார்கள்.
பாண்டுவும் குந்தியும் பிச்சைக்காரர்களாக வருகிறார்கள். சூடாமணி கதை அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாகிறது.
பாஞ்சாலி பாஞ்சியாக வருகிறாள். விதுரர், கர்ணன், துரியோதனன், துரோணர்,சகுனி என்று அநேகபாத்திரங்கள் கலிகாலத்தில் வருகிறார்கள்.
ஒரு அத்தியாயம் Original மாகாபாரதத்தில் நடந்தவற்றை அசரீரி வாக்காக எடுத்துக் கொண்டு அதில் வேறுவிதமான கண்ணோட்டத்தைச் சொல்கிறது. அடுத்த அத்தியாயத்தில் மகாபாரத மாந்தர்கள் இன்றைய உலகில் உலாவுகிறார்கள். திரௌபதியின் இரண்டாவது சபதமும் நிறைவேறுகிறது.
தருமன் சூதாடுபவனாக, நகுலன் குதிரைகள் மேல் பிரியம் கொண்டவனாக, சகாதேவன் ஜோதிட வல்லுநராக, ,கர்ணன் வண்டி வெள்ளரிப்பிஞ்சை வாரி வழங்குபவனாக வருகிறார்கள். எல்லோருக்கும் தெரிந்த மொத்தக் கதாபாத்திரங்களை வேறொரு உலகத்தில் உலவ விடுவது நல்ல யுத்தி. அதே போல் புனைவில் நம் சித்தாந்தங்களை புகுத்துவதும் கலைஞனின் சுதந்திரம்.. மகா ஸ்வேதா தேவியின் கதை ஒன்றில் ஒலிப்பது நிஷாத பெண்ணின் குரல். பழங்குடிகளுக்காகப் போராட்டங்கள் நடத்தியவர் தேவி.
புலியூர் முருகேசன் நல்ல வாசகர். எதிர்ப்பவர்களுடைய படைப்புகளில் இருந்தும் வாசிக்காமல், மேற்கோள் காட்டாமல் பேசாதவர். இவருடைய மூக்குத்தி காசி, திருநங்கைக்கு ஏற்படும் பாலியல் வல்லுறவுகள், இதர சிக்கல்களைப் பேசும் முழுநாவல். நான் வாசித்த வரை, திருநங்கை மையப்பாத்திரமாக வரும் முதல் நாவல். அதில் ஏராளமான விஷயங்களைப் புகுத்தி நாவலின் அமைதி குலைந்திருக்கும். இந்த நாவல் Story lineஐப் பொருத்தவரை Strong and innovative. இதிலும் தேவையே இல்லாது பல விஷயங்கள் வருகின்றன. பாண்டவர் அரக்கு மாளிகைத் தீயில் தப்பித்தனர், கருகிய வேறு பிணங்களை பாண்டவர் என்று நம்பினர் என்றூ கடந்திருப்போம். ஆனால் தேவியின் கதையில் நிஷாத பெண் குரல் கொடுக்கையில் நாமும் தவற விட்டோமே என்ற எண்ணம் வருகிறது. ஆகவே சித்தாந்தங்கள் மாறினாலும் கலை எப்படியோ இதயத்தைத் தொட்டுவிடும். முருகேசன் எழுத்தாளர் மட்டுமல்ல நுணுக்கமான விஷயங்களை விமர்சனம் செய்பவரும் கூட. அவருக்குத் தேவை Focus. அதிலும் நாவலுக்கு அது கூடுதலாகவே தேவைப்படும்.
பிரதிக்கு:
குறி வெளியீடு 94893 06677
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.350.