வங்கியில் முதலாவது சேர்ந்தது நாகப்பட்டினம் கிளையில். சேர்ந்து மூன்றாவது நாள் தான் தெரிந்தது, கிளையில் மூன்று பேச்சிலர்கள் ஒரேயிடத்தில் மதிய உணவுக்கு செல்வது. நானும் உங்களுடன் வருகிறேன் என்றதும், அவர்கள் முகத்தில் தயக்கம். அதில் ஒருவர் சற்றுநேரத்தில் சுதாரித்துக் கொண்டு, சரி வாருங்கள், ஆனால் முதல்நாள் நாங்கள் பேசுகிறோம், நீங்கள் எதுவும் பேச வேண்டாம் என்றார். பழைய, சிறிய வீட்டின் கூடமது. நெருக்கி உட்கார்ந்தால் நான்கு பேர் ஒருபுறம், மீதி நான்கு மறுபுறம் என எட்டுபேர் ஒரே நேரத்தில் உட்காரலாம். பழைய பாய் விரிக்கப்பட்டிருந்தது. உடன் வந்தவர் “மாமா இவர் புதுசு, தினம் வருவார், அமைதியானவர்” என்றார். பத்து தினம் கழித்து நான் தனியாகப் போகையில் மாமா,
நான் பிறப்பால் சைவம் என உறுதி செய்து கொண்டு, ” பொதுவா மத்தவாளை விடுறதில்லை” என்றார். நண்பர்கள் 1.58க்கு கடையை மூடி சாப்பிடக் கிளம்பி விடுவார்கள். என்னால் அவ்வளவு சரியாகப் போக முடியாது. மாமா மூன்றுமணிக்கு முடித்து விடுவார். தாமதமாகச் சென்றால் பெரும்பாலும் மாமி சாப்பாடு முடிந்து விட்டது என்பார். ஆனால் எனக்குச் சொன்னதில்லை.
மாமியும் பெண்களும் பரிமாறுவார்கள். நான்கு பெண்கள். இருளில் இருந்து இருந்து இன்னும் வெளுத்த பெண்கள். அன்று சாப்பாட்டின் நடுவே கோலிக்குண்டில் ஒரு சுற்று பெருத்த லட்டு இலையில் விழுந்தது. பரிமாறியது இரண்டாவது பெண்ணாக இருக்கும். சாப்பிட்டதும் அடுத்த லட்டு விழுந்தது. மோர் சாதம் சாப்பிட்டு முடித்ததும் வெறும் இலையில் விழுந்தது ஐந்தாவது லட்டு. அன்று தான் நான் அங்கு சென்ற கடைசி தினம். அடுத்த இரண்டு மாதத்தில் வேறு ஊருக்கு மாறுதல் வந்து விட்டது.
சென்னைக் கிளைகளை விட நாகப்பட்டினத்தில் அதிகமாக Travellers cheques issue ஆகும். அப்போது அந்நியச்செலாவணியை சில வீடுகளில் நெய் விடுவது போல் செலவழிக்கும் காலம்.
அதில் ஏதேனும் மோசடி நடந்ததென்றால் வேலை போய்விடும். அதிக Risk இருக்கும் சீட்டென்பதால் அங்கு உட்காருபவர் குறைவு.
அன்று வந்த பெண்ணின் பாஸ்போர்ட்டை பரிசோதித்து விட்டு, முகத்திரையை விலக்கச் சொன்னால் முடியாது என்றார். பார்க்காமல் கொடுத்து பிரச்சனை வந்ததென்றால் வேலை போய்விடும் மேடம் என்றேன். உங்க கிட்ட எதுக்குக் காட்டணும், வேண்டுமென்றால் மேலாளர் கேட்கட்டும் என்றார். அதற்குள் பின்னால் Pass book entry போட வந்தவர் இவருக்கு ஆதரவாகச் சத்தம் போட ஆரம்பித்து விட்டார். மேலாளர் அறையில் இருந்து ஓடி வந்தவருக்கு கத்துபவரிடம் பேச, ஆங்கிலப் பற்றாக்குறையாதலால், உடனேயே என்னை நோக்கி, எந்த வாடிக்கையாளரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.
அந்தப்பெண் நான் பாஸ்போர்ட் எடுத்து வருகிறேன் என்று கிளம்பி விட்டார். அரைமணி கழித்து வந்த பெண், நான் நடுவில் ஒருவர் ஆர்ப்பாட்டம் செய்வார் என எதிர்பார்க்கவில்லை என்றார். நான் அமைதியாக TC issue வேலையைக் குனிந்த தலை மாறாது முடித்து அவரிடம் கவரை நீட்டினேன். வாங்கியவர் ஏதோ சொல்ல வந்து பேசாமலிருந்து விட்டார். முகத்தைப் பார்க்க வேண்டும் என்றால் இப்போது ஆட்சேபணை செய்திருக்க மாட்டார். நிதானமாகக் கவரை கைப்பையில் வைத்து, கைப்பையைப் பக்கத்தில் வைத்து, சுவரின் கடிகாரத்தில் மணிபார்த்து, மறுபடியும் கைப்பையில் எதையோ தேடி ஐந்து நிமிடத்திற்கு மேல் அமர்ந்திருந்தார். பின் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார்.
பெண்கள் எப்போதும் என்னை Underestimte
செய்வது, எனக்குத் தெரியும் என்பது அவர்களுக்குத் தெரியாது.