ஆசிரியர் குறிப்பு:
அரியலூர் மாவட்டம், உகந்த நாயகன் குடிக்காடு எனும் சிற்றூரைச் சேர்ந்தவர்.
சென்னையில் மருத்துவத்துறையில் நிர்வாக மேலாளர். இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.
ஒவ்வொரு கிராமங்களுக்குள்ளும் ஒருஉலகம் இருக்கிறது. அதில் உள்ளவர்கள் அந்தக் கதைகளைச் சொல்லுகையில் தான், நமக்குத் தெரிய வருகிறது. அரியலூர் செம்மண் நிலத்துக் கதைகள் இவை. கதைகள் என்று சொல்வதை விட வாழ்க்கை.
நெல்லை அறுவடை செய்து, கூலிப் பட்டுவாடா முடித்து உயிர்விடும் விவசாயி,
தனியாளாக பெண்ணை வளர்த்து மணமுடித்துக் கொடுக்கும் பெண்கள், அத்து மீறிப்பழகும் போது தெரியாத சாதி வேறுபாடு திருமணம் என்றால் முன்வந்து நிற்பது, ஆட்டுக்கடாவிற்கு காயடிக்காவிட்டால் நோஞ்சலாகி விலைபோகாது என பாவக்கணக்கு பார்க்கவிடாமல் பணக்கணக்கு பண்ண வைக்கும் வாழ்க்கை என்று எளிய மனிதர்களின் அன்றாடங்களின் கதைகள்.
கதைகளின் பெண்கள் எளிதாகக் காதல் வசப்பட்டு, சீக்கிரமாகத் தன்னை இழக்கிறார்கள். நகரத்தில் இருந்து வரும் ஆணை நம்பக்கூடாது என்பதில் இருக்கும் சாமர்த்தியம் இதில் இருக்காது போலும். ஆண்களின் பல்லாயிரங்கால பழக்கவழக்கத்தின்படி, கருவைக் கலைக்கச் சொல்லிக் கைவிடுகிறார்கள். ஊர்ப்பழிக்குப் பயந்து உயிரை இழப்பதும் நடக்கிறது. வெளியில் சொன்னால் மானம் போய்விடும் என்று மறைத்து வைத்துக் காமாந்தர்களின் வேட்டையை எளிதாக்குவதும் நடக்கிறது.
சாந்தி ஒரு வித்தியாசமான கதை. அப்பனுடன் சாராயம் குடித்தவனுக்கு விருப்பேயில்லாது மனைவியாகி, குழந்தை பெற்று, கணவனைப் பிரிந்து, பல ஆண்களுடன் தொடர்பு வைத்து, தாய் குறித்தோ மற்றவர்கள் குறித்தோ கவலை இல்லாமல் திரிந்தவளுக்கு அவளுடைய மகள் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறாள்.
எளிய வாழ்க்கை வாழும் மனிதர்களின் எளிய கதைகள் இவை. வாய்மொழிக் கதைகளாகச் சொல்லப்படுவதன் சாயல் கொண்டவை. நல்லவர்கள், கெட்டவர்கள் எல்லாமே வருகிறார்கள். ஆண் பெண் வேறுபாடின்றி கடின உழைப்பு உழைக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உண்மையான அன்பை செலுத்துகிறார்கள். அரியலூர் வட்டார மொழியிலேயே எல்லாக் கதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அரசனிடம் இன்னும் பல கதைகள் இருக்கும், தொடர்ந்து எழுத வேண்டும்.
பிரதிக்கு:
ஜீவா படைப்பகம் 99942 20250
இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 150.