ஆசிரியர் குறிப்பு:
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். இதுவரை பதினைந்து கவிதை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பு முதலியவற்றைக் கொண்டு வந்திருக்கிறார். நான்கு குறும்படங்களை இயக்கியுள்ளார். இது சமீபத்தில் வெளியான கவிதை நூல்.
அய்யப்ப மாதவனின் ஆரம்பகாலக் கவிதைகளுக்கும் இந்தத் தொகுப்புக்கும் ஏராளமான வித்தியாசங்கள். புத்தன் அடிக்கடி வருகிறான். காதலில் கூட காத்திருக்கத் தயாராக இருக்கும் அகிம்சாவாதி வந்திருக்கிறான். எனக்குப் பிடித்த மாதவன் யாமினி எழுதிய மாதவன். விடாது துரத்திக் காதல் செய்யும் மாதவன்.
வாழ்க்கை எப்போதுமே குதிரைக்கு முன் கட்டிய கம்பில் தெரியும் கேரட். இன்னும் இரண்டடி என்று குதிரை நடக்கும். அடுத்து எப்படியும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை ஒன்று மட்டும் மனிதகுலத்திற்கு இல்லாவிடில் உலகம் எப்போதோ தற்கொலைகளால் நிரம்பியிருக்கும்.
‘ வேட்டையில் பலியாகும் மிருகங்களின்
உயிர்த்துடிப்பைப் போல
இருக்கிறது வாழ்க்கை
இறக்கப்போகிறவனின் முகத்தில் தெரியும்
சவக்களை போலவே இருக்கிறது வாழ்க்கை
தோல்வியுற்றவனின் முகம் போல
வாடியிருக்கிறது வாழ்க்கை
இலையுதிர்காலத்திற்கு பின் வரும்
வசந்தகாலத்தில் பூக்களைப் போல மலருமா
இந்த வாழ்க்கை யாருக்குத் தெரியும்”
எல்லோருக்கும் பொதுவான உலகம் ஒன்று. அதில் எல்லாமும் இருக்கும், எல்லோரும் இருப்பார்கள். சிரிப்பதும் அழுவதும் அங்கே அடிக்கடி நிகழும். நம் உலகம் தனி. இங்கு நாமும் நாமும் மட்டும் தான். நம்முடன் தொடங்கி நம்மில் முடியும் உலகம்.
” உன் பாதங்களின் திசைகளில்
உன் இருப்பு நீள்கிறது
திட்டமிடல் ஏதுமில்லா பயணத்தில்
உன் எல்லை எங்கு முடியுமென
சொல்வதற்கில்லை
நிலவு வரும் போகும்
உனக்கு ஒளியூட்டாது நண்பனே”
பத்து வேலைகளைக் குறித்து வைத்துப் பத்திரமாக எல்லாவற்றையும் முடித்து விட்டு வீடு சேர்பவர்களும் இருக்கிறார்கள். ஒன்றும் முடிக்காது, எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்ற கழிவிரக்கத்தில் மூழ்குபவர்கள் இருக்கிறார்கள். முன்னவர்கள் புத்திசாலிகள் இல்லை, பின்னவர்கள் முட்டாள்கள் இல்லை. ஆனால் இருவருமே புதிர் விளையாட்டின் பாத்திரங்கள்.
” விபரீதங்களின் விளையாட்டில்
அலைக்கழிக்கிறது காலம்
ஒரு காயை நாம் நகர்த்த
அதுவொரு காயை எதிராக நகர்த்துகிறது
இந்தப் புதிர் ஆட்டத்தில்
தோற்பதற்கான சாத்தியங்களே
நிரம்பித் ததும்புகின்றன
கட்டங்களுக்கிடையே சூதுகள்
தானாகவே தன் இயல்பில்
மேலெழும்பி வருகின்றன
அதன் முன் சறுக்கல்கள்
தவிர முனைப்புகள்
மீள முடியா சதுப்புநிலமாகின்றன”
கவிஞன் தன்னைப் பாதிப்பதைக் கவிதைகளாக்கும் பொழுது, அது வாசகனுடன் ஒரு உரையாடலை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. அய்யப்ப மாதவன் பல சமகால நிகழ்வுகளைக் கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார் இந்தத் தொகுப்பில். அன்பைப் பகிர்வதற்குக் கவிதையை ஊடகமாகப் பயன்படுத்துபவர் அய்யப்ப மாதவன். கவிதைகள் எழுதுவோர்
ஒரு கட்டத்தில் ஆழ்ந்த மௌனங்கள் எதிர்வினையாவதால் சலிப்பு தோன்றி நிறுத்தி விடுகிறார்கள். அய்யப்ப மாதவன் பதினைந்து கவிதைத் தொகுப்புகளைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். இருத்தலில் போராட்டங்கள் இருக்கும் வரை கவிஞர்களுக்கு கவிதைகள் தொடங்கும். கல்லெறியப்பட்ட குளத்தில் வட்டங்கள் தோன்றியே தீரும், சில கணங்களேனும்.
பிரதிக்கு;
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ. 150.