ஆசிரியர் குறிப்பு:
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
தொடர்ந்து பல இணைய/அச்சு இதழ்களில் கதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர். இவருடைய சிறுகதைத் தொகுப்பு ‘கிளிக்கன்னி’ மற்றும் கட்டுரைத் தொகுப்பான பஞ்சுர்ளி இரண்டுமே சமீபத்தில் வெளிவந்தவை.
ஷோபா சக்தியின் ‘ஸலாம் அலைக்’ நாவலில் உலகில் ஒரே கதை தான் உள்ளது, அது தான் மாறிமாறிச் சொல்லப்படுகிறது என்ற வரி வரும். அது சொல்லப்படுவதன் அர்த்தம் வேறு. உண்மையில் இந்த உலகில் கோடானு கோடிக் கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் அதன் சொந்தக்காரரை சொல்லிவிடு, சொல்லிவிடு என்று சொல்லும். ஆனால் சில கதைகள் மட்டுமே சொல்லப்படுகின்றன, பல கொல்லப்படுகின்றன.
பாலமலைப் பயணங்கள் என்ற கட்டுரை புனைவின் சாயல் கொண்டது. குதிருக்குள் ஒளியும் மாப்பிள்ளை- Suspense, மலைப்பகுதியில் திக்குத் தெரியாமல் மாட்டிக் கொள்வது – Horror, அம்மாவின் பெயரைக் கேட்டுக் கிண்டல் செய்வது- Bullying, தாத்தா,பாட்டி கதை, அம்மா பிறக்கும் வரை- Folk tale, இரண்டாம் முறை பெரியம்மாவைப் பார்க்கப் போவது- Twist in the tale என்று புனைவின் எல்லா அம்சங்களையும் கொண்ட சுயசரிதைக் கூறுகள் கொண்ட அருமையான கட்டுரை.
இந்த வரிகளைப் பாருங்கள்:
” எனது அம்மாயிக்குத் தான் குத்தியிருக்கும் பச்சையின் மீது அத்தனை காதல். மூக்காந் தண்டிலிருந்து ஒரு கோடு மேலெழும்பி நடுவகிட்டைத் தொடும், கண்களைக் கயலாக்க மீன்வால் வரைந்திருக்கும். தாவாக்கட்டையில் ஒரு புள்ளி. தோள்களில் வங்கிவைத்துக் குத்தப்பட்ட பச்சையில் இரண்டு கிளிகள். பூத்துக் குலுங்கும் வேலைப்பாடான இலைமலிந்த கொடியில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும்……..”
இரண்டாவது கட்டுரை, பஞ்சத்திற்கு ஆண்டியானவர்களின் பயணக்கட்டுரை. முழுநீள நகைச்சுவை. அதுவும் அந்தக் கடைசிப்பத்தி. சிரித்துச்சிரித்து கண்களில் நீர் வந்தது. நாராயணனே நமக்குப் பறைதருவான் கட்டுரையும், பஞ்சுருளி கட்டுரையும், புலிக்குத்தி கட்டுரையும் இவர் புதிதாகத்தரும் Interpretations. (புலிக்குத்தி என்ற தலைப்பில் ராம்தங்கம் ஒரு தொகுப்பை வெளியிட்டிருக்கிறார், இந்தக்கல் குறித்த தகவல்கள் அதிலும் இருக்கும்). தேவதாசி மரபைக் குறித்த கட்டுரை பல தகவல்களைத் திரட்டி எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் M.S தான் பிறந்த தேவதாசிக்குல அடையாளத்தை வெறுத்து தன்னை பிராமணப்பெண்ணாகக் கட்டமைத்துக் கொண்டார். அதை பிராமணர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
சத்தியப்பெருமாளின் கட்டுரைகள் புத்தகத்தைக் கீழே வைக்காமல் முடித்து விடும் சுவாரசியம் வாய்ந்தவை. இவர் நம்புவதற்கும் நாம் நம்புவதற்கும் வேறுபாடுகள் இருக்கக்கூடும், அதனால் ஆரோக்கிமான விவாதங்களை எழுப்பக்கூடிய கட்டுரைகள் இவை. ஜீவானந்தம் எழுதிய Devdasis In South India A Journey From Sacred To A Profane Spaces என்ற நூல் தேவதாசி மரபு குறித்து அதிக தகவல்கள் வேண்டுமென்ற ஆர்வமிருப்போர் வாசிக்கலாம். இயல்பான நையாண்டி இவருக்கு எழுத்தில் கூடி வந்திருக்கிறது. கூகுள் செய்து சேர்த்த தகவல்கள் இல்லை இவை என்பது தெரிகிறது. பல கட்டுரைகள் இவருக்குள் இருக்கும் எழுத்தாளரின் தேடல்களை அடையாளம் காட்டுகின்றன. அல்புனைவுகளையும் இவர் தொடர்ந்து எழுத வேண்டும்.
பிரதிக்கு:
நடுகல் வெளியீடு 98654 42435
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2022
விலை ரூ. 80.