ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி:
உலகின் மிகச்சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர். Literary modernism, Existentialism, Psychology இவை மூன்றும் கலந்து மிக நுட்பமான படைப்புகளைப் படைத்தவர். இறந்து நூற்று நாற்பது ஆண்டுகள் முடிந்த பின்னும், இன்றும் உலகில் பரவலாக வாசிக்கப்படுபவர். இந்த நூல் இவரது குறுநாவல்களில் ஒன்று.
நர்மதா குப்புசாமி:
கவிஞர். எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர்.
ஆரணியில் வசிக்கிறார். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி இவரது கணவர். சின்ட்ரெல்லா நடனம் என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு. சிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இது இவரது சமீபத்திய மொழிபெயப்பு.
Eternal Husband எனக்குப் பிடித்த இவரது குறுநாவல்களில் ஒன்று. Eternal Husbandக்கும் Eternal Loverக்குமிடையேயான
Mind games இந்த நாவல். 1870ல், இன்றைக்கு நூற்றைம்பது வருடங்கள் முந்தைய நாவலின் வடிவ அமைதியும், கட்டமைப்பும் வியப்பை ஏற்படுத்தும். கதை Victim யாரோ அவரது கோணத்தில் சொல்லப்படாமல் முழுக்கவே Perpetrator கோணத்தில் சொல்லப்படும் கதை இது. உண்மை என்ன என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது.
நிரந்தரக் கணவன் என்பதை Cuckold Husband
என்ற அர்த்தத்திலேயே நான் எடுத்துக் கொண்டேன். கதையின் முடிவில் வரும் போர்வீரனுடனான காட்சிகளும் அதையே உறுதி செய்கின்றன. பாவெல்லின் புது மனைவியும் பழைய மனைவி போலவே நடந்து கொள்கிறாள்.
வெல்ச்சேனினோவ்வை கடந்த காலத்தின் நிழல் ஒன்று துரத்துகிறது. பாவெல் முன்பொரு காலத்தில் நண்பன். பாவெல்லின் மனைவிக்கும் இவனுக்குமான தொடர்பு அவளால் அறுக்கப்படுகிறது. முதலில் இவனால் கர்ப்பமானதாக ஒன்பது வருடங்களுக்கு முன் சொன்னவள், பின் இல்லை என்கிறாள். ஆனால் பாவெல் மூலம் மூன்று மாதம் முன்பு அவள் இறந்ததாகவும், அவர்களுக்கு எட்டுவயதில் குழந்தை இருப்பதாகவும் தெரியவருகிறது. யாரும் சொல்லாமல் இவனுக்குத் தெரியும் விஷயம் அது இவனுடைய குழந்தை என்பது.
குற்றஉணர்வு அரிக்கும் நோயாக மாறுவது பல ருஷ்ய இலக்கியங்களில் நாம் பார்த்தது. அன்னாவிற்கு வந்தது, Raskolnikovக்கு வந்தது. அது போல் பலருக்கும் வந்தது. லிசாவின் குற்றஉணர்வு தான் பிரிந்து தன் தந்தையை தூக்குப்போட்டுக் கொண்டு இறக்கும்படி செய்யப் போகிறோம் என்ற பயத்தில் வந்தது. வெல்ச்சேனினோவ்வின் குற்ற உணர்வு பாவெல்லைப் பார்த்ததில் ஆரம்பித்து லிசாவிற்குப் பிறகு பன்மடங்கு அதிகரிக்கும் நோயாக மாறுகிறது.
வெல்ச்சேனினோவ் நத்யாவின் வீட்டுக்கு மறுமுறை செல்ல மாட்டேன் என்பதன் காரணம் காத்யா. அவன் நிரந்தரக் காதலன், அவனால் ஒருபோதும் கணவனாக மாற முடியாது. கடைசியில் பாவெல் வீட்டிற்கு வந்து ஒரு மாதம் தங்கப்போவதில்லை என்பதன் காரணம் மறுபடியும் தொடங்கிய கட்டத்தில் போய் நிற்க விரும்பாததே. தூக்கமும் மயக்கமும் கலந்த ஒரு இரவுப்பொழுதில் வரும் சவரக்கத்தி நிகழ்வு, அடக்கி அடக்கி வைத்த கோபம் பீறிட்டு எழுவதன் வெளிப்பாடு. பக்தோவ்வுக்கும், வெல்ச்சேனினோவ்வுக்கும் பாவெல்லால் ஒரேவிதமான நிலைப்பாட்டை எடுக்க முடியாதது. இது போல் பல இடங்கள் இந்த சிறிய நாவலில், தஸ்தயேவ்ஸ்கி எதையும் விளக்குவதில்லை. விளக்கம் வேண்டுவோர் தஸ்தயேவ்ஸ்கியை அனுபவிக்க இயலாது.
பாவெல்லின் குற்றம் தான் என்ன? ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை அவர் ஏன் கோமாளியாகச் சித்தரிக்கப்படுகிறார். மனைவியை நம்புதல் என்பது மகத்தான தவறா? அறுபது வயதில் செல்வமிருப்பவர்கள் பதினாறு வயதுப் பெண்ணை இதுவரை யாரும் திருமணம் செய்ய எண்ணியதே இல்லையா? ஒருவரல்ல இருவருடன் அவர் மனைவி துரோகம் செய்திருக்கிறாள் என்பதை அறிந்த பின்னும் அவருக்கு புத்திகொள்முதல் ஏன் வருவதில்லை? லிசாவுடன் அவர் நடந்து கொண்ட விதம் அவரை எவ்வளவு பெரிய கோழை என்பதைக் காட்டுகிறது. லிசா Soft target, மற்றவர்களுடன் அவரால் Confrontation என்பது இயலாது. அதனாலேயே பத்தொன்பது வயதுப் பையனின் மிரட்டலுக்கும் பயப்படுகிறார்.
குற்றங்கள் மட்டுமல்ல தண்டனைகளும் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் எப்போதும் இருக்கும். நதாலியா கடிதங்களை விட்டுப் போவது அவள் வெல்ச்சேனினோவ்வுக்கும், பாவெல்லுக்கும் அளிக்கும் தண்டனை. மனைவியிடம் கோபத்தைக் காட்ட முடியாத பாவெல் மகளுக்கு தண்டனை அளிக்கிறாள். நத்யா அளிக்கும் தண்டனை பரிசைத் திரும்பக் கொடுப்பது. வெல்ச்சேனினோவ் தண்டனை அவனது மனசாட்சி. லிப்பூச்கா, உல்யன் மூலமாக பாவெல்லுக்குத் தண்டனை வழங்குகிறாள்.
இந்தக் குறுநாவல் அதிகம் பேர் வாசித்திராத ஒன்று. தமிழில் தேர்வுசெய்யப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தஸ்தயேவ்ஸ்கியை மொழிபெயர்ப்பது எளிதான காரியமேயில்லை. பேவியரின் மொழிபெயர்ப்பையே இப்போது ரஷ்யாவில்
விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். நர்மதா தஸ்தயேவ்ஸ்கி Touch புலப்படும் மொழியில் நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார். இதுவரை இவர் இரண்டு நூல்களே மொழிபெயர்த்ததாகத் தெரிகிறது. பதிப்பகங்கள் இவரது மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து உபயோகித்துக் கொள்ள வேண்டும். Dearest Dostoevsky, Are you aware? You are going to be immortal.
பிரதிக்கு:
பாதரசம் 72992 39786
விற்பனை உரிமை கருப்பு பிரதிகள்
94442 72500
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 250.