ஆசிரியர் குறிப்பு:
மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர். ஆசிரியர் பணியில் இருந்தவர். கணையாழி அதன் உயர் இலக்கியநிலையில் இருந்த போதில் இருந்தே கதைகள், குறுநாவல்கள் எழுதியவர். இது இவரது சிறுகதைகளின் தொகுப்பு.
எக்பர்ட் சச்சிதானந்தம் அதிகம் எழுதாதவர். அதிகம் கவனிக்கப்படாதவர். அதிகம் பேசப்படாதவர். எஸ்.ரா வின் வலைப்பதிவில் இவர் கதைகளைக் குறித்து எழுதியதை முன்னுரையாகச் சேர்த்திருக்கிறார்கள். மிகச் செறிவான முன்னுரை. இவரை மட்டுமில்லாது வெளிச்சம் விழாத பலரை அடையாளம் காட்டும் கட்டுரை.
பதினைந்து கதைகள் கொண்ட தொகுப்பு. இவரை மொத்தமாக முதல்முறையாக வாசிக்கிறேன். (மலையின் தனிமையை ஏன் தொகுப்பில் சேர்க்கவில்லை? அதுவும் இவருடைய நல்ல கதை). இவருடைய இந்தத் தொகுப்பின் கதைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலில் கிறிஸ்துவக் குடும்பங்கள் (மதமும்) சார்ந்த கதைகள். இரண்டாவது ஆசிரியர் கதைகள். மூன்றாவது பொதுக் கதைகள்.
நேர்மையாக எழுதுபவர்கள், எந்த மதத்தில் இருந்தாலும், அந்த மதத்தை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மதவாதிகள், மதத்தை புரையோடச் செய்திருக்கிறார்கள். CSIல் இருப்பவர்களை மற்ற Churchகளில் அழைத்தால் இந்து, முஸ்லீம்களை மதம் மாற்றாமல் நம்மிடம் ஏன் வருகிறார்கள் என்று கோபப்படுகிறார்கள். கோதுமை, பால்பவுடர் கொடுத்து இனி மதம் மாற்ற முடியாது எனத் தெரிந்து விட்டதால் விநியோகம் நிறுத்தப்படுகிறது. போதகர்கள் வலியவர்களுடன் சேர்ந்து கொண்டு எளியவரை ஏமாற்றுகிறார்கள்.
மாதச்சம்பளத்தை பன்னிரண்டு தவணையாக ஆலயத்திற்கு நன்கொடை அளிக்கக் கேட்டால் பலர் மனமுவந்து தருகிறார்கள். வசூலிக்கப்பட்ட பணம் பல முறைகேடுகளுக்கு உள்ளாகிறது. Church மூலம் நியமிக்கப்படும் பதவிகள் அவர்களுக்கு வேண்டியவர்களுக்குள் பிரித்துக் கொள்ளப்படுகின்றன. ஏழைகள் மேலும் ஏழ்மைக்குள் தள்ளப்படுகிறார்கள். SC க்கு கிடைக்கும் சலுகைகளை மதம் மாறியதால் இழந்தவர்கள் இருதலைக் கொள்ளி எறும்பாகிறார்கள்.
ஆசிரியர் பணியில் இவர் இருந்ததால் சில கதைகள் ஆசிரியர்களை மையப்பாத்திரங்களாக்கி வந்துள்ளன. கடைசி இரண்டு கதைகள் அவற்றுள் முக்கியமானவை. பணியைச் சிறப்பாகச் செய்பவர்கள், பலவற்றை இழக்கிறார்கள். மற்றவர்கள் எல்லா வளங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கிறார்கள்.
‘பிலிப்பு’ தொகுப்பில் முக்கியமான ஒரு கதை. அடுத்தவர் செய்யும் அநியாயங்களை வாழ்க்கை முழுவதும் தட்டிக்கேட்பவன், தனக்கு நேரும் அநியாயத்தை மௌனியாகப் பார்ப்பது விதியின் முரண்நகை. ஏன் இப்படி நடக்கிறது? ‘ஏழு எழுபது தரம்’, ‘நுகம்’, ‘ மரணத்தின் கூர்’ போன்ற கதைகளில் மதத்தின் பெயரால் நடக்கும் அட்டூழியங்களை மையமாகக் கொண்டிருந்தாலும், எளியவன் உண்மையான கிறிஸ்துவனாக இருப்பதால் மன்னிப்பு கேட்க மறுக்கிறான், டயோசிஸ்ஸை நம்பி உபயோகமில்லை என்பதை அடுத்த தலைமுறை கண்டு கொள்கிறது, எளியவனுக்கு சவப்பெட்டியும் மறுக்கப்படுகிறது.
Detailing இவரது எழுத்தின் பலம். குறிப்பாக ‘பேரன்’ கதையில் விஜயாவின் வீட்டை வர்ணித்து விட்டு, நம்மை கதைக்குள் போகச்செய்து, பின் அவளது சோகக்கதையை விளக்குவது. ‘கடன்’ கதையும் உண்மையில் பாதிக்கப்படப் போவது யார் என்பதைத் தகவல்கள் வாயிலாகச் சொல்கிறது. ‘மலம்’ கதை இவரது விவரணைகள் நிறைந்த எழுத்துக்கு முதல் உதாரணமாகச் சொல்ல வேண்டியது.
நமக்கே குமட்டிக் கொண்டு வரும்போது, அவனுக்குக் காமம் இருந்த இடம் தெரியாது ஓடிப்போனதில் ஆச்சரியமில்லை.
கணையாழியில் குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதியவர்கள் என்பதை மட்டும் பார்த்தாலே, பலரது கதைகளின் தொகுப்பு வரவில்லை. மிகச் சிறந்த சிறுகதைகளை எழுதிய சார்வாகன், கோபி கிருஷ்ணன் போன்றோரையே இப்போது தான் சிலர் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எக்பர்ட் சச்சிதானந்தத்தின் தொகுப்பு இப்போது வந்திருக்கிறது. முன்னுரையில் எஸ்.ரா குறிப்பிட்டிருக்கும் பல எழுத்தாளர்களின் தொகுப்பும் இதே போல் வரவேண்டும்.
பிரதிக்கு:
நாதன் பதிப்பகம் 98840 60274
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 200.