நன்றி கே.என்.சிவராமன்

புக்கர் வரலாற்றிலேயே முதன் முறையாக இரண்டு புக்கர் விருதுகளும் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
புக்கர் விருதுக்கான நிபந்தனைகளில் ஒன்றான, நூல் இங்கிலாந்து அல்லது ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் பதிப்பாகி இருக்க வேண்டும் என்பது இதுவரை புக்கர் பரிசை, ஐரோப்பா, அமெரிக்கா ஆதிக்கத்தில் இருத்தி வைத்திருந்தது. 2022 ஆண்டிற்கான மேன் புக்கர் விருதைப் பெறும், ஷெஹான் கருணாதிலக இவ்விருது பெறும், இலங்கையைச் சேர்ந்த இரண்டாவது எழுத்தாளர்.

ஷெஹான் பள்ளிப்படிப்பு வரை இலங்கையிலும், பட்டப்படிப்பை நியுசிலாந்திலும் முடித்தவர். இன்டிபென்டன்ட் ஸ்கோர் என்னும் இசைக்குழுவில் (Band) கிட்டார் வாசிப்பவர். விளம்பரங்களுக்கான காப்பி ரைட்டர். இரண்டு நாவல்கள் தவிர்த்து, சிறார் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைத் தொகுப்பு செப்டம்பர் 2022ல் வெளியாகியிருக்கிறது.

ஷெஹான் உலக இலக்கிய வாசகர்களுக்குப் புதுமுகம் இல்லை. இவரது முதல் நாவலான ‘சைனாமேன் ‘ காமன்வெல்த் விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற நூல். சைனாமேன், குடிக்கு அடிமையான பத்திரிகையாளர், ஒரு கிரிக்கெட் வீரரைத் தேடுவதான பயணம். அதன் மூலம் இலங்கை சமூகத்தைப் பற்றி சொல்லியிருப்பார். கிரிக்கெட்டின் பைபிள் எனப்படும் விஸ்டன் பத்திரிகை இந்த நூலை கிரிக்கெட் குறித்து இதுவரை எழுதப்பட்ட நாவல்களில் இரண்டாவது சிறந்த நூல் என்கிறது.

ஏழுநிலாக்கள் நாவல், இலங்கை உள்நாட்டுப் போரில், போர்க்களப் புகைப்படக்காரர், மாலியின் கோணத்தில்
சொல்லப்படும் கதை. மாலி சூதாடி, ஒருபாலினஉறவுக்காரன். தூக்கத்தில் இருந்து விழித்தால் போல் முழிக்கும் மாலி, தன்னிடம் ஏதோ ஒன்றை வித்தியாசமாக உணர்கிறான். சிறிதுநேரம் கழித்தே அவன் இறந்து விட்டது அவனுக்குப் புரிய ஆரம்பிக்கிறது. அவன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். அவனைக் கொன்றது யார் என்பது அவனுக்குத் தெரியவில்லை. இலங்கை புராணக்கதைகளின் நம்பிக்கையின் படி இவ்வுலகத்தை விட்டு அடுத்த உலகத்தை அடைவதற்கான இடைவெளி ஏழுநாட்கள். ஏழுமுறை நிலவு வரும் நாட்கள். அதற்குள் அவனைக் கொன்றது யார் என்பதை அவன் கண்டுபிடிக்க வேண்டும், அவன் எடுத்த மிக ரகசியமான ஆவணமான, புகைப்படங்களின்
நெகட்டிவ்களை பத்திரப்படுத்த வேண்டும்.
அவன் முழுமையாக நம்பும் ஒரே நபர் அவனுடைய தோழி ஜகி. ஆனால் ஆவியான இவன் இப்போது அவளுடன் பேசமுடியாது.

அடிப்படையில் இது யார் கொலையைச் செய்தது என்பதைக் கண்டுபிடிக்கும் திரில்லர் வகைமையைச் சார்ந்த நூல். புக்கர் இன்டர்னேஷனலின் பட்டியலில் வந்த ‘எலினாவிற்குத் தெரியும்’ (Elena Knows) என்பதும் கொலையைச் செய்தது யார் என்பதைக் கண்டுபிடிக்கும் நாவலே, ஆனால் அதைப் பின்னணியாக வைத்துக் கொண்டு கத்தோலிக்க மத நம்பிக்கைகளை விமர்சனம் செய்யும். அது போலவே இந்த நாவலும் போர்கால இலங்கையில் நடந்த பல கொடூரங்களைப் பற்றிப் பேசுகிறது. அரசியல் நையாண்டி என்று சொல்லும் தொனியில் இந்த நாவலை எழுதியிருக்கிறார் ஷெஹான். நாவலைச் சொல்லும் யுத்தி, ஆவி சொல்லும் கதை என்பதால் ஃபான்டஸி வகைமையைச் சேர்கிறது. எனவே இந்த நாவல் பல ஜானர்களின்(Genre) கலவை.

ஷெஹான் எந்தப் பக்கமும் சாராததால் போரின் பங்குதாரர்கள் எல்லோரையுமே விமர்சனம் செய்கிறார். பாதிக்கப்பட்டோர் நாங்கள் பாதிக்கப்பட்டோம் என்று சொல்வதை விட, ஆவி தான் பார்த்த கொடுமைகளைச் சொல்வது வாசகர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். நகைச்சுவையுடன் இவர் சொன்னாலும், சொல்லப்படும் விஷயங்கள், வாசிக்கையில் அடிமனதில் பயத்தை ஏற்படுத்தும். ஷெஹான் அதிக வார்த்தைகளை உபயோகிக்கவில்லை. வசதி படைத்தவர்கள் லண்டன் போன்ற வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்கிறார்கள், வசதி இல்லாதவர்கள் தங்கள் மனைவியை அரபுநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புகிறார்கள் என்று ஒரே வரியில் சொல்லிக் கடந்து போகிறார்.

என்னுடைய பார்வையில் கீதாஞ்சலி நூலில் இருந்த கீழை தத்துவார்த்தமும், தொன்மங்களும், நம்பிக்கைகளும் இந்த நூலிலும் வருவதே மேற்கத்திய வாசகர்களைக் கவர்ந்த விஷயங்களாக இருக்கக்கூடும். இங்கிலாந்து பதிப்பில் மேற்கத்திய வாசகர்களின் புரிதலுக்காக திருத்தி எழுதப்பட்டிருக்கிறது. புக்கர் நீதிபதிகள் கூறியதைப் போல, இந்த நாவல்,
மறக்கமுடியாத, மயக்கும் தன்மை கொண்ட, உணர்ச்சி வசப்படாத, சில நேரங்களில் மென்மையாகவும், சில நேரங்களில் ஆக்ரோஷமாகவும் நம்மை ஈர்க்கக்கூடிய ஒன்று.

ஷெஹான் 2009ல் இதை எழுத நினைக்கையில், நிகழ்காலத்தை எழுதும் தைரியம் இல்லாததால் இருபது வருடங்கள் முன்சென்று 1989ஐ நாவலின் காலகட்டமாக வைத்ததாகவும், நடந்ததற்கெல்லாம் யார் காரணம் என்று ஒருவரை மற்றொருவர் பழி சொல்லும் சூழலில், ஆவிகள் அவர்கள் கோணத்தில் கதையைச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று முடிவுசெய்ததாகவும் கூறியிருக்கிறார். புராணக்கதைகள், கீழைநாட்டு மதங்களின் நம்பிக்கைகள் இவற்றில் இருந்து எடுக்கப்பட்ட கருத்துகளை, இலங்கையின் எண்பதுகளின் பிற்பகுதியின் சூழலில் பொருத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

புக்கர் விருதைப் பெற்றுக் கொண்ட பின் நடத்திய உரையில், ஷெகான் ஆங்கிலத்தில்
பேசி முடிப்பதற்கு முன் சிங்களத்தில் பேசுகிறார், கடைசியாக தமிழிலும் ” நம் கதைகளைக் கூறுவோம், கூறிக்கொண்டேஇருப்போம்” என்று அவரது உரையை முடிக்கிறார். கதைகளை சொல்வதை விட இன்னொன்றையும் அவர் மூன்று மொழிகளையும் உபயோகித்ததன் வாயிலாகத் தெளிவாகவே சொல்கிறார்.

Box News:

இதுவரை புக்கர் விருதுகளைப் பெற்ற இந்தியர்கள் என்று பார்த்தால் வம்சாவளியையும் சேர்க்க வேண்டியதாகிறது. புக்கர் விருதை வென்ற முதல் இந்தியர் வி.எஸ். நைப்பால், சுதந்திர தேசத்தில் (In a free state) நூலுக்காக, சல்மான் ருஷ்டி நள்ளிரவின் குழந்தைகள்(Mid Night’s Children)
என்ற நூலுக்காக, அருந்ததி ராய் , சின்ன விஷயங்களின் கடவுள் | The God of Small Things) என்ற நூலுக்காக, கிரண் தேசாய், இழப்பின் மரபுரிமை (The inheritance of Loss), அரவிந்த் அடிகா, வெள்ளைப்புலி(The White Tiger) நாவலுக்காக, மற்றும் சமீபத்தில் புக்கர் இன்டர்னேஷனல் விருது பெற்ற கீதாஞ்சலி ஸ்ரீ, மணற்கல்லறை(Tomb of Sand) நூலுக்காகப் பெற்றுள்ளனர்.

நைப்பாலின் தந்தை இந்தியர், மற்றபடி இவர் முழுபிரிட்டிஷ்காரர், ருஷ்டி மும்பையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடிபுகுந்தவர்,
கிரண் தேசாய் பதினான்கு வயதில் நிரந்தரமாக இந்தியாவை விட்டு சென்றவர்.
அர்விந்த் அடிகா சென்னையில் பிறந்து, மங்களூரில் வளர்ந்திருந்தாலும் இவருமே இந்தியாவை விட்டு நிரந்தரமாக வேறு நாட்டில் குடிபுகுந்தவர். அந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் பிறந்து, இந்தியாவிலேயே வசிக்கும் அருந்ததிராயே புக்கர் விருதை முதலில் பெறும் முழுஇந்தியர். அது போலவே புக்கர் இன்டர்னேஷனல் விருதை முதலில் பெறும் முழுஇந்தியர் மட்டுமல்ல ஒரே இந்தியர் கீதாஞ்சலி ஸ்ரீ. இருவருமே பெண்கள் என்பது கூடுதல் விசேஷம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s