நன்றி சமயவேல் சார். நன்றி தமிழ்வெளி

ஜப்பானில் மேற்கத்திய கலாச்சாரம் பரவியதன் மிகமுக்கிய விளைவு, குடும்பஅமைப்பு ஆட்டம் கண்டது என்று சொல்லலாம். அதே நேரத்தில் நன்மை என்னவென்றால், ஏராளமான ஜப்பானிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. சமீப காலத்தை எடுத்துக் கொண்டால், ஹருகி முரகாமி உலகவாசகர்களை ஜப்பான் இலக்கியத்தின் பக்கம் ஈர்த்ததில் முக்கியமானவர். ஆனால் அவருக்குப்பின் பெரிய ஆளுமையாக ஆண் எழுத்தாளர்கள் யாருமே தோன்றவில்லை. மாறாக ஜப்பானிய இலக்கியம், சமகாலத்தில், அமெரிக்க, கனடிய இலக்கியங்கள் போலவே, பெண்களின் சக்தியாக மாறிவிட்டது. Mieko Kawakami, Banana Yoshimoto,Sayaka Murata, Kono Taeko, Natsuo Kirino, Hiromi Kawakami, Kyoko Nakajima, Yoko Tawada, Yukiko Motoya, Kaori Ekuni, Ami Sakurai, Miyuki Miyabe, Nahoko Uehashi, Hiroko Oyamada என்று ஏராளமான பெண்கள் ஜப்பானிய இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்த (எழுத்தாளர்களில் பால்பேதம் பார்க்கக்கூடாது, என்றாலும் ஜப்பான் இலக்கியப்போக்கைச் சொல்ல உபயோகிப்படுகிறது) ஆரம்பித்து விட்டார்கள்.

அடுக்களை (Kitchen) நாவல் வெளியானதில் இருந்தே யொஷிமோட்டா எல்லோரது கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்துவிட்டார்.
காதல் மட்டுமன்றி ஜப்பானியக் கலாச்சாரத்தின் பலகூறுகளைக் கலந்து சமகால இலக்கியத்தைப் படைப்பதில் ஜப்பானில் யொஷிமோட்டா முக்கியமானவர்களில் ஒருவர். தொடர்ந்து நாவல்கள் மற்றும் சிறுகதைகள் இரண்டுமே எழுதிக்கொண்டிருப்பவர்களிலும் ஒருவர். இந்த சிறுகதைத் தொகுப்பு ஆகஸ்ட் 2022ல் வெளியாகியது.

இளமை மற்றும் முதுமையை ஒரே சிறுகதையில் கொண்டுவருவதை முரகாமியும், யொஷிமோட்டாவும் அடிக்கடி செய்கிறார்கள். முதல் கதையான ‘ஆவிகளின் வீடு’ (The House of Ghosts) வெளிப்பார்வைக்கு மிக சாதாரண கதை போலத் தோன்றினாலும், அது காதல் என்பது ஒரு புனிதமான உணர்வு என்ற நம்பிக்கையைக் கதையின் கடைசிவரியில் தகர்க்கிறது. தாத்தாவும், பாட்டியும், அம்மாவும், அப்பாவும் பலகாலம் சேர்ந்திருந்ததைப் பார்த்தும் அவளால் முடிவுக்கு வர முடிவதில்லை. பல உறவுகள் இருவருக்குமே இடையில் குறுக்கிட்டு, இறுதியில் இருவரையும் இணைப்பது எது என்ற கேள்வியை யொஷிமோட்டா அழகாக எழுப்பியிருக்கிறார்.

தனிமை எல்லாக் கதைகளிலும் முக்கியமான தீம் ஆக இருக்கின்றது. காதலித்து மணந்தவர்கள், காதலனால் கைவிடப்பட்டவர் என இருவருமே தனிமையை உணர்கின்றனர். தனிமை என்பது விரும்பி தனக்கான பொழுதைத் தேர்ந்தெடுக்கும் தனிமையில்லை, இது சோகம் கலந்த தனிமை. ஒருவகையில் யொஷிமோட்டா ஜப்பானிய மக்களின் பலகாலத்திய உணர்வை, அகவயத்தன்மை அதிகமாகிக் கொண்டே செல்வதைத் தன் கதைகளில் பிரதிபலிக்கிறார். அனைத்து கதைகளிலுமே யாரேனுமொருவர் மகிழ்ச்சி எது என்பதைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

இந்தக் கதைகளில், ஆண்-பெண் உறவுகள் மேற்கத்திய உறவுகளின் நகல்கள் போல் தோற்றமளிக்கின்றன. ஆண்களும் பெண்களும் திருமணத்திற்கு முன் பல உறவுகளில் ஈடுபடுவது மட்டுமல்லாது, எளிதாகச் சேர்வதும் பிரிவதும் நடக்கிறது.
முதல் கதையான ‘ஆவிகளின் வீடு’ கல்லூரிப் பருவத்தில் இருவர் உடல்ரீதியாகப் பழகியபின்னும், எந்தக் காரணமுமில்லாமல் ஒருவரை விட்டு மற்றொருவர் விலகி, இடையில் பல துணைகளுடன் இருவருமே காலம் கழித்து, எட்டுவருடங்களுக்குப்பின் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

எல்லாக் கதைகளிலுமே சிறுவயதில் நடந்த ஒரு சம்பவம் பின்னர் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. முதல் கதையில் ஆவிகள் இருவரைச் சேர்த்து வைக்கிறார்கள், மற்ற கதைகளில் குழந்தைப் பருவத்தில் அம்மாவுடன் இருந்த நினைவுகள், பாலியல்
வல்லுறவுக்குள்ளாவது, சிறுவயதுத் தோழனின் எதிர்பாரா மரணம், சிறுவயதில் தந்தையால் துன்புறுத்தப்பட்டவனுடனான சந்திப்பு என்பது போல் கடந்தகாலம் எல்லாக் கதைகளிலும் பாசிபோல் நிகழ்காலத்தில் படர்கிறது.

ஐந்து கதைகள் கொண்ட தொகுப்பில் கதைசொல்லிகள் ஐவருமே பெண்கள். பதின்மவயது மற்றும் அதைத் தாண்டிய ஜப்பானியப் பெண்களின் உணர்வுகளை யொஷிமோட்டாவால் இந்தக்கதைகளில் கூர்மையாகச் சொல்ல முடிவதற்கு இது முக்கிய காரணம். இந்தத் தொகுப்பில் முன்னர் எப்போதையும் விட ஜப்பானிய உணவுவகைகள் அநேகமாக எல்லாக் கதைகளிலுமே வருகின்றன.
2003ல் ஜப்பானிய மொழியில் வெளிவந்த தொகுப்பு இப்போது தான் ஆங்கிலத்தில் வருகிறது. சமீபத்தில் ஏராளமான பெண்கள் ஜப்பானிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பில் இயங்கி வருவதால் இனி இத்தகைய காத்திருப்பு நேராது என்று நம்பலாம். யொஷிமோட்டா
முரகாமிக்குப்பின் அதிகம் உலக வாசகர்களால் வாசிக்கப்படும் எழுத்தாளர். அம்மா என்ற கதையும், தலைப்புக் கதையும் யொஷிமோட்டாவின் கையெழுத்தைப் பொறித்தவை. இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி என்றால் யொஷிமோட்டாவின் கதைகளில் பிம்பங்கள் தெளிவாக இருக்கின்றன.

நூல் பெயர் – Dead-End Memories
ஆசிரியர் பெயர்- பனானா யொஷிமோட்டா
பதிப்பகம்- Counterpoint
பக்கங்கள்- 235
வகை- சிறுகதைத் தொகுப்பு
விலை, ரூ 1305.15
நூல் பெற தொடர்பு- Amazon.in
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2022

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s